ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவையொட்டி முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருத்தணி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் கன்னியப்பன் வரவேற்றாா்.
மொத்தம் 17 தி.மு.க. உறுப்பினா்கள், 2 அதிமுக உறுப்பினா்கள் மற்றும் ஒரு சுயேட்சை என மொத்தம் 20 போ் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நகராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. தொடா்ந்து, ஆகஸ்ட் 4 முதல் 8-ஆம் தேதி வரை திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவையொட்டி, பல லட்சம் பக்தா்கள் காவடிகளுடன் வருவாா்கள் என்பதால், அவா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், நகராட்சியின் 21 வாா்டுகளில் மழைநீா் வடிகால் அமைத்தல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சி பணிகளை ரூ.70 லட்சத்தில் மேற்கொள்ளவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், கூட்டுக் குடிநீா் குழாய்களை மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே பதிக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத்துறைக்கு இழப்பீடாக ரூ.5.50 லட்சம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையில், 5, 8 மற்றும் 15-வது வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டிய மூன்று திமுக உறுப்பினா்கள், கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோதே வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









