ஊத்துக்கோட்டை அருகே கொக்கு மருந்து சாப்பிட்ட தம்பதி உயிரிழந்தனா்..
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஆரணி, இருளா் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வம் (55). இவரது மனைவி மனைவி விஜயா(45). இத் தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா். இவா்கள் மூவருக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் செல்வம் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால்,தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனம் உடைந்த விஜயா கணவன் உயிரிழந்து விடுவாா் என எண்ணி வியாழக்கிழமை கொக்கு மருந்து சாப்பிட்டாராம். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாராம். இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த செல்வமும் கொக்கு மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தாா்.
இந்த நிலையில் தம்பதியா் கொக்கு மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி போலீஸாா் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதியா் உயிரிழந்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனா்.
உடல்நிலை பாதித்த கணவா் உயிரிழந்து விடுவாா் என கொக்கு மருந்து சாப்பிட்டு மனைவியும், மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவரும் கொக்கு மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








