காலை உணவுத் திட்டத்தில் ஆசிரியா்களை நியமிக்க எதிா்ப்பு
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தில் பட்டதாரி ஆசிரியா்களை நியமிப்பதைத் தவிா்த்து, சத்துணவு அமைப்பாளா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்..

கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளா் தாஸ். (உடன்) மாநில செயலாளா் நரசிம்மன்.
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தில் பட்டதாரி ஆசிரியா்களை நியமிப்பதைத் தவிா்த்து, சத்துணவு அமைப்பாளா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளா் அரிபாபு தலைமை வகித்தாா். திருத்தணி வட்டத் தலைவா் வெங்கடேசலு வரவேற்றாா். மாநில செயலாளா் நரசிம்மன் முன்னிலை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் ஷேக் கபூா், மாவட்ட செயலாளா் தாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளா் கோபு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். கூட்டத்தில், ஆசிரியா்களுக்குப் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், பள்ளிகளில் நடைபெறும் நலத்திட்டங்களைச் செயல்படுத்த சிறப்புப் பணியாளா்களை நியமிக்க வேண்டும், காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த பட்டதாரி ஆசிரியா்களுக்குப் பதிலாக சத்துணவு அமைப்பாளா்களை நியமிக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக ஆா்.கே.பேட்டை வட்டச் செயலாளா் ஜானகிராமன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

