பௌத்த, சமண சமயத்தில் பெண் தெய்வங்கள் - 1 (இயக்கியர் வழிபாடு)

கிராம மக்களால் வணங்கப்பெற்ற இயக்கி அம்மன், பிற்காலத்தில் பெரும் சமயங்களின் தெய்வமாக மாற்றம் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியப் பழங்குடியினரிடத்தே தோன்றி வளர்ந்த தொன்மையான வழிபாடே இயக்கி வழிபாடாகும். இந்தியாவில் பொ.ஆ.மு.2-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இவ்வழிபாடு சிறப்புற்றிருந்தது என்பதற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆரம்பக் காலகட்டத்தில், இவ்வழிபாடு எந்தவொரு சமயத்தையோ மதத்தையோ சார்ந்தோ அல்லது அதனுடைய தொடர்புடனோ காணப்படவில்லை. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், இவ்வழிபாடு பாரம்பரியமிக்க கிராமத்தைச் சார்ந்த வழிபாடாகவே ஒவ்வொரு கிராமங்களிலும் நாட்டார் வழக்காகக் கொண்டு வழிபடப்பட்டு வந்துள்ளது. அதற்குப் பின்னரே பௌத்தம், சமணம், வைதீக மதங்களையும் பிற பெரும் சமயங்களையும் சார்ந்தவர்கள், இயக்கி அம்மனின் செல்வாக்குக் கருதி பல்வேறு முறையில் காரணங்களை அதன்மீது சாற்றி அதனை தங்களது தெய்வமாக ஏற்று வழிபடத் தொடங்கினர்.

இந்தியாவில் காணப்படும் பல்வேறு பெண் தெய்வங்களின் தோற்றத்துக்கும் உருவ அமைதிக்கும் காரணமாக, இவ்வியக்கியரின் வழிபாடும் அதன் உருவ ஒற்றுமையும் அமைந்துள்ளது என்பர். இவை அனைத்தும் தாய் தெய்வ வழிபாட்டின் எச்சமாகவே கருதப்படுகிறது. குலத்தினூடே கொண்ட அதன் மாற்றங்களையும் ஒவ்வொரு சமயத்துக்கேற்ப பெண் தெய்வங்கள் பெற்ற சிறப்பையும் இனி காண்போம்.

சங்க காலம்

சங்க இலக்கியங்களில் நேரடியான குறிப்பு காணப்படாவிட்டாலும், இயக்கியரின் பண்பு நலன்களும் அவர்கள் ஆற்றிய பணிகளும் பிற இலக்கியங்களில் காணப்பட்ட தெய்வங்களோடு ஒத்துப்போவதைக் காணலாம். அவ்வாறு குறிப்பிடப்படும் தெய்வங்களான சூலி, சூர்மகள், வரையறைமகளிர், கடல்கெழுசெல்வி, கானமர்செல்வி, பாவை, அணங்கு போன்ற தெய்வங்களை ஒப்பிட்டுக் காணலாம். கிராம மக்களால் வணங்கப்பெற்ற இயக்கி அம்மன், பிற்காலத்தில் பெரும் சமயங்களின் தெய்வமாக மாற்றம் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பொ.ஆ. 3-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 6-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்துக்குள் பௌத்த சமயத்தவர்களும், சமண சமயத்தவர்களும் அவரவர் சமயங்களால் ஏற்றுக்கொண்ட இவ்வழிபாட்டை தமிழகத்துக்குக் கொண்டுவந்து, அதன் புகழை நிலைநாட்டியுள்ளனர். இதற்குச் சான்றாக அமைந்தவைதான், இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் என்றால் அது மிகையல்ல.

இயக்கி அம்மன் வழிபாடுகள் குறித்த செய்திகள் வேசாந்தரக ஜாதகக் குறிப்பு, முகப்பக்க ஜாதகம், மற்றும் புத்தமத ஜாதகக் கதைகளிலும் காணப்படுகின்றன.*1

இயக்கி அம்மன் தோற்றமும் வாழுமிட நம்பிக்கையும்

கிராம மக்களால் வணங்கப்பட்ட இயக்கி அம்மன் உருவங்கள் எந்த மதத்தையும் சாராமல் இருந்தன என முன்னர் குறிப்பிடப்பட்டது. பண்டைய காலத்தில் மக்கள் தங்களது முதன்மையான முதலாவதான பாதுகாப்புக் கடவுளாக இப்பெண் தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். காடுமேடுகளில் சுற்றித்திரிந்த மனிதன் முதன்முதலாக இடி, மின்னல், மழை, சூரியன், சந்திரன் இவற்றைக் கண்டு அஞ்சி வணங்கினானோ, அதன் அடிப்படையில் மரம், செடி, கொடி, மலை, ஆறு, பாதைகள் என அனைத்தையும் வணங்க முற்பட்டான். அவ்வாறு வணங்கிய அவன், மரம் செடி கொடிகளுக்கு பூசை செய்து படையலிட ஆரம்பித்தான். ஏனெனில், இயக்கி அம்மன் எனும் தாய் தெய்வங்கள் இங்குதான் வாழ்கின்றன என்றும், அவர்கள் தங்கியுள்ள இடத்தை பூசைகள் செய்து வழிபடத் துவங்கினான். பின்னர், பௌத்தமும் சமணமும் இந்த இயக்கி அம்மனைத் தங்களுக்குரித்தானதாக மாற்றம் பெறச் செய்தன.. அவை நாளடைவில் அனைத்து மதத்திலும் இடம்பெறலாயின.

பண்டையச் சான்றுகள்

சுடுமண் பாவை - பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டு. கையில் குழந்தையுடன் காணப்படும் இயக்கி அம்மன். மாங்கொத்துடன் காட்டப்பட்டுள்ளது

சுடுமண் பாவை - பாட்னா அருங்காட்சியகம், பிகார். பொ.ஆ.மு.2-ம் நூற்றாண்டு

அழகிய பெரிய வடிவிலான கழுத்தணிகலனும், காதணிகளும், மணியுடன் கூடிய கணுக்கால் வளையங்களும், அகன்ற சுருள்வடிவான தலை அலங்காரங்களும் காட்டப்பட்டுள்ளது. ஆரியர் வருகைக்கு முன் வணங்கப்பட்ட கிராமியப் பெண் தெய்வமான இயக்கியம்மன்.

மௌரியர் காலத்து இயக்கி அம்மன் சுடுமண் பாவை. பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டு. கையில் குழந்தையுடன் காணப்படும் சுடுமண் இயக்கி அம்மன்)

பிற்காலச் சான்று

அம்பிகா இயக்கி - எல்லோரா குடவரைச் சிற்பம். பொ.ஆ.12-ம் நூற்றாண்டு. ஒரு மரத்தின் அடியில் சிம்மத்தின் மீது சுகாசனத்தில் வீற்றிருக்கும் அம்பிகை சிற்பம்.

இந்தியச் சமயங்களில் இயக்கி அம்மன்

இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய மதங்களாகக் கருதப்படும் பௌத்த - சமண சமயத்தைச் சார்ந்தவர்கள், இயக்கி அம்மனை தங்களது பெண் தெய்வங்களாகப் போற்றி வணங்கினர். இந்தியாவில், இயக்கி அம்மனின் திருவுருவங்கள் பல மாநிலங்களில் பல காலகட்டங்களில் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா; பிகாரில் திதர்கன்ஞ் (Didarganj) மற்றும் பசார்த் (Basarth); மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால், சாஞ்சி, மற்றும் கஜுராஹோ; மகாராஷ்டிராவில் எல்லோரா; ஒடிஸாவில் உதயகிரி மற்றும் கந்தகிரி; கர்நாடகாவில் அய்கோல் (Aihole) மற்றும் சரவணபெலகொலாவிலும் இயக்கிய அம்மனின் குறிப்பிடத்தகுந்த திருவுருவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுனகொண்டா, கொண்டாபூர், பெத்தாபூர், மற்றும் அமராவதி போன்ற இடங்களிலும் இயக்கி அம்மன்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயத்தவர்கள், இயக்கி அம்மன் வழிபாட்டை மிகவும் போற்றி வணங்கியுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட இயக்கி அம்மன் செப்புப் படிமங்கள் இந்தியாவின் பல இடங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. பௌத்த சமயத்தைத் தழுவிய இடங்களில் அமராவதியும் குறிப்பிடத்தக்க ஓர் இடமாகும் அங்கு கிடைத்த பௌத்த இயக்கி அம்மன் கற்சிற்பமும், பிகாரில் பசார்த் என்ற இடத்தில் தாமரை மலரின் மேல் நின்ற நிலையில் காணப்படும் இயக்கி அம்மனும் சிறப்புக்குரியவை. இவர்கள், பல்வேறுவிதமான பொருட்களில் கல், மரம், மணற்கல், பாறைகளின் முகப்புப் பகுதி என பல்வேறு இடங்களில் பௌத்த இயக்கி அம்மன் உருவங்களைப் படைத்துள்ளனர்.

திதர்கன்ஞ் இயக்கி அம்மன் (Didarganj yakshi)

இந்தியாவில் காணப்பட்ட இயக்கி அம்மன் சிற்பங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்றதும், அனைவரின் கவனத்தை ஈர்த்ததும் என பிகார் மாநிலத்தில் பட்னாவின் புறநகர்ப் பகுதியான திதர்கன்ஞ் என்ற இடத்தில் கிடைத்த இயக்கி அம்மனைக் குறிப்பிடலாம். மேலும், இதற்கு ஒரு தனிச்சிறப்பு என்னவெனில், திதர்கனஞ் என்பது கங்கை நதிக்கரையில் அமைந்த இடமாகும். நதிக்கரை நாகரிகங்கள் நம் இந்திய வரலாற்றுக்குப் பல பண்பாட்டுப் பொக்கிஷங்களை வழங்கிக்கொண்டு இருப்பதை அனைவரும் அறிந்ததே. அதிலும், கங்கை நதிக்கரை நாகரிகத்தில் இவை கிடைத்துள்ளதாலோ என்னவோ, இச்சிற்பம் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.

இச்சிற்பம் மணற்கல்லால் (Sand Stone) செய்யப்பட்டது. பார்த்தவுடன் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அழகே உருவானது. கண்ணைக்கவரும் பளபளப்பான வகையில் மெருகூட்டப்பட்டது இச்சிற்பம். நின்றநிலையில் காணப்படும் இந்த இயக்கி அம்மன் பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டைச் சார்ந்தது. மௌரியப் பேரரசின் காலமாக இதனைக் குறிக்கின்றனர். இந்தியக் கலை வரலாற்றிலேயே இச்சிற்பம் ஒரு தனியிடத்தைப் பெற்று, முதன்மையான சிற்பமாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். கலைப்பொக்கிஷமான இச்சிற்பம், தனது வலது கையில் ஒரு வெண்சாமரத்தைப் பிடித்திருக்கும் அழகே தனி. ஆடை அணிகலன்களாக, கழுத்தில் முத்துமாலையும், தலையின் முன்பகுதியில் தொங்கவிடப்பட்டுள்ள பதக்கமும், தலையலங்காரமும், கைகளில் வளையல்களும், கால்களில் அணிந்துள்ள கணுக்கால் வளையங்களும்… இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் அவள் கட்டியுள்ள சேலையும், அவற்றில் முன்பக்கம் பல மடிப்புகளுடன் (pleat) அமைந்துள்ள நிலையும் அனைவரின் உள்ளத்தையும் கவரும் அழகிய சிற்பமாக இவ்வியக்கி அம்மனை காணமுடிகிறது.

இயக்கி அம்மன் உருவங்கள், இந்தியக் கலைப் படைப்புகளில் தனியிடம் பெற்று விளங்குகின்றன. இக்கலைப் படைப்புகள், பொ.ஆ.மு.2-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சாதவாகனர்கள் மற்றும் குஷானர்களாலும், பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டில் மௌரியர்கள் மற்றும் குப்தர்களின் காலத்திலும், அதனைத்தொடர்ந்து பொ.ஆ.13-ம் நூற்றாண்டு வரை இயக்கி அம்மனின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகவும், சுடுமண் பாவைகளாகவும், செப்புத் திருமேனிகளாகவும் நூற்றுக்கணக்கான சிற்பங்கள் இந்தியாவில் காணக் கிடக்கின்றன.

தமிழகத்தில் இயக்கி அம்மனுக்கு பொ.அ. 11-12-ம் நூற்றாண்டில்தான் தனிக்கோயில் எழுப்பப்பட்டது என்பர்.*2 இயக்கி அம்மன் சிற்ப அமைதியைக் காணும்பொழுது, இவை லட்சுமி சிற்பத்துடன் இணைத்துக் கூறப்படுகின்றது. பெரும்பான்மையான சமயங்கள் இயக்கி அம்மனை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம், இயக்கியின் அமைப்பு இந்தியச் சமயங்களில் காணப்படும் சிற்ப உருவங்களோடு இணைந்து காணப்படுவதுதான். மௌரியர் காலத்துச் சிற்பங்களில், இயக்கி அம்மனின் திருவுருவங்களில் லட்சுமியின் தாக்கமும் அதன் வழிபாட்டு முறைமையும் இணைந்துபோவதைக் காணலாம். அமராவதி இயக்கி சிற்பமும், தாமரையில் எழுந்தருளியுள்ளதைப் போன்று காணப்படுகின்றது.

இந்தியாவில், பொ.ஆ.மு. 2-ம் நூற்றாண்டு அளவிலேயே பௌத்த மதம் நாடு முழுவதிலும் நன்கு பரவியிருந்தது. பொ.ஆ.மு. 3-ம் நூற்றாண்டில் இந்தியாவின் சக்கரவர்த்தியாக வியங்கியவர் அசோக மாமன்னர். இவர் பௌத்த மதத்தால் கவரப்பட்டு, அதன் கருத்தை முழமையாக ஏற்றுக்கொண்டு அம்மதத்தைத் தழுவி, பின்னர் பௌத்த மதத்துக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். பௌத்த மதத்தை இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பரவச் செய்தவர் இவர். தனது ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் அனைத்திலும், பிராமி எழுத்தைப் பயன்படுத்தியே தனது கருத்துகளை முதன்முதலாகக் கற்பாறைகளில் வெட்டிவைத்து பதிவு செய்தவர். பொ.ஆ.மு.3-ம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ. 3-ம் நூற்றாண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில், தமிழகத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. இவற்றை தற்பொழுது தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் என்று குறிக்கின்றனர். அசோகனது பாறைக் கல்வெட்டுகளையும், தமிழகத்தில் கிடைத்துள்ள பிராமி கல்வெட்டுகளையும் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் இக்கருத்தை ஏற்கின்றனர்.

சிலம்பும் மணிமேகலையும்

தமிழகத்தில், பௌத்த சமயத்தில் வழிபட்ட இயக்கி அம்மனைக் குறித்த செய்திகளை மணிமேகலை காப்பியத்தில் காணமுடிகின்றது. சாத்தனார் தனது காப்பியத்தை நகர்த்த சம்பாபதி, மணிமேகலை, சிந்தாதேவி போன்ற பல பெண் தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார். அவை அனைத்தும், பௌத்த மதத்தில் பெண் தெய்வமாக வழிபட்ட இயக்கி அம்மனையே குறிப்பதாகும் அவற்றையும் பிற பௌத்த பெண் தெய்வங்களைப் பற்றியும் இனி விரிவாகக் காண்போம்.

தமிழகத்தில பழம்பெரும் இலக்கியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும். இவை இரண்டும், பௌத்த, சமண மதத்தைத் தழுவிய கருத்துகளைக் கொண்டவை. சிலம்பு மற்றும் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களில், மணிமேகலையில் சம்பாபதி அம்மனும், மணிமேகலா தெய்வமும் போற்றப்பட்டு வணங்கப்பட்டுள்ளன.*3 இவை இரண்டும், நீர், நிலம் இவற்றில் வாழும் மக்களைக் காக்கவும், அவர்களுக்கு ஏற்படும் இன்னலைப் போக்கவும், தங்கள் துயர் தீர்க்கவந்த காவல் தெய்வம் என்றும் இந்த இரண்டு காவியங்களும் போற்றி வணங்கியப்பட்டுள்ளன.

சம்பாபதி அம்மன்

நிலத்தில் வாழ் நன்மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்ளைக் காப்பாற்றிய பெண் தெய்வம் சம்பாபதி அம்மன் ஆவாள். மணிமேகலா எனும் பெண் தெய்வத்தை மணிமேகலை நூலில் “கடல் காவலுக்காக இந்திரனால் நிறுவப்பட்டவள்” என்று போற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது.*4

நாவலோக்கிய மாபெருந் தீவினுள் காவல் தெய்வமாக வீற்றிருப்பவள் என்று சம்பாபதி அம்மன் கூறப்படுவதால், இத்தெய்வம் நாவலந்தீவு, அதாவது இந்தியா முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்தது. இமயமலையில் இருந்து இத்தெய்வம் தமிழ்நாட்டுக்கு வந்ததாலும், நாவல் மரத்தின் கீழே தங்கி, கொடியவர்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகின்றது.*5

“இளங்கதிர் ஞாயிறு என்றும் தோற்றத்து

விளங்கொளி மேனி விரிசடை யாட்டி

பொன்திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்

தென்றிசைப் பெயா;ந்த இத்தீவுத் தெய்வம்

சாகைச் சம்பு தன்கீழ் நின்று

மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு

வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற

சம்பு என்பாள் சம்பாபதி யினள்”

- (மணி, பதிகம் 1-8)

மேலும், மணிமேகலை இத்தகு சிறப்பு வாய்ந்த தாய் தெய்வமான இச்சம்பாபதி அம்மனை சம்பாபதித் தெய்வம், முந்தைமுதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், அருந்தவமிதியோள் என்று பல்வேறு பெயரிட்டுப் பாராட்டி வணங்கினர் எனக் குறிக்கிறது. சம்பாபதி தெய்வம் குறித்த செய்திகற் அனைத்தும் மணிமேகலையில் சக்கரவளாகக்கோட்டம் எனும் காதையில் கூறப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் இவள் வீற்றிருந்த வனம் சம்பாபதிவனம் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலை சக்கரவளாகக்கோட்டம் என்றும், இவள் உறைந்த இடம் குச்சரக்குடிகை என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயில் சுடுகாட்டுக்கு அருகில் அமைந்திருந்தமையால், சுடுகாட்டுக்கோட்டம் என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்பெற்றது.

இக்கோட்டத்தில், பௌத்தர்கள் கண்ட உலகத்தின் அமைப்பு, மண்ணில் செய்துகாட்டப் பெற்றிருந்தது. இது செழுங்கொடிவாயில், நலங்கிளர்வாயில், வள்ளிடைவாயில், பயங்கரமான தோற்றத்தைக்கொண்டு கரங்களில் பாசத்தையும் சூலத்தையும் ஏந்தி நிற்கும் வாயில் ஆகிய நான்கு வாயில்களையும் கொண்டு விளங்கியது. இவற்றில், கடல்சூழ்ந்த மேருமலையும் அதன் அருகே நிற்கும் எழுவகைக் குன்றங்களும், நால்வகை மக்கள் நிறைந்த பெருந்தீவும், ஆயிரக்கணக்கான தீவுகளும், அவற்றில் வாழ்கின்ற உயிரினங்களும், அவை உறையும் இடங்களையும் அழகுறக் காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பௌத்த சமயத்தை ஒட்டி அமைந்த ஒரு தொன்மைமிக்க பௌத்த பெண் தெய்வத்தை மணிமேகலை காப்பியத்தில் நாம் தெள்ளத் தெளிவாகக் காணலாம். மேலும் மணிமேகலையில், சம்பாபதித் தெய்வம் சக்கரவளாகக் கோட்டத்தில் அமைந்திருக்கும் எல்லா பெண் தெய்வங்களுக்கும் தலைமைப் பெண் தெய்வமாக விளங்கியவள் என்று போற்றப்படுகிறது. இது, தாய் தெய்வத்தை பௌத்த சமயம் எவ்வாறெல்லாம் போற்றி வழிபட்டது என்பதையே எடுத்துக்காட்டுகிறது. தற்பொழுது, காவிரிபூம்பட்டினத்தில் சாயாவனம் என்றழைக்கப்படும் பகுதியில், சம்பாபதி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இதனை, இப்பகுதி மக்கள் பிடாரி கோயில் என்று அழைக்கின்றனர். பிடாரி என்பது பீடையை (துன்பத்தை) அரிப்பவள் (போக்குபவள்). எனவேதான் பிடாஅரி (பிடாரி) என அழைக்கப்படுகிறாள். உலகில், நல்லவர்களுக்கு வரும் அல்லல்களைப் போக்குபவள் பிடாரியாவாள்.*6

மணிமேகலா தெய்வம்

மணிமேகலா தெய்வம், பௌத்த சமயத்தைப் பின்பற்றி ஒழுகும் நல்லோரையும், கடலில் பயணம் செய்து பெருளீட்டுபவர்களையும் துன்பத்திலிருந்து காப்பதற்காக, மண்ணுலகில் காவலர்களாக விளங்கும் சதுர்மகாராஜீகர் என்பவர்களால் கடற்காவல் தெய்வமாக நியமிக்கப்பட்ட பெண் தெய்வமே மணிமேகலை தெய்வம் என்பர்.*7

மணிமேகலா தெய்வம், கடல் தெய்வம் என்று கம்போடியா, சயாம் தேசத்துக் கதைகளும் விளக்கமளிக்கின்றன. இத்தெய்வம், கடலில் வாழ்வதாகவும், அதனால் இதனைக் கடல் தெய்வம் என்றழைப்பதாகவும் கூறுகின்றன. சிங்களக் கதைக ஒன்றில், மணிமேகலையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதில் வியத்தகு செய்தி என்னவெனில், “பாலங்கா என்பவன் தன் மணைவி பத்தினி என்பவளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் வைத என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி எறிய, அந்த ஆற்றின் நீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையை அடைந்தபின், இதைக் கண்ணுற்ற மணிமேகலா தெய்வம், ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்துவந்து பத்தினியிடம் கொடுத்தது என்பதுதான். இவற்றில், பாலங்கா என்பவன் கோவலனையும், பத்தினி என்பவள் கண்ணகியையும், வைத என்ற ஆறு வைகை நதி என்றும் கருதப்படுகின்றது.

கடலில் பெருவணிகம் செய்த மாசாத்துவானின் குலதெய்வமாக மணிமேகலா தெய்வம் வணங்கப்பட்டுள்ளது. இவர்களின் மூதாதையர்களை பலமுறை கடலில் ஏற்பட்ட விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. எனவே, இவளை கடல்கெழுசெல்வி என்றும் அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளனர்.

கோவலனுக்கு மாதவி மூலம் பெண் குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தைக்குப்     பெயர் சூட்டும்பொழுது, கோவலன் தனது முன்னோடிகளைப் பற்றி சிறிது சிந்தித்தான். தனது முன்னோடிகள் நடுக்கடலில் இரவில் கலம் உடைந்து தவித்தபோது, அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாகக் கரைசேர்த்த தெய்வம் மணிமேகலா தெய்வமாவாள்.. இவர்கள் புண்ணியம் பல செய்தவர்களாக இருந்தமையாலும், அவர்கள் பௌத்த சமயத்தை தழுவி பல நற்காரியங்கள் புரிந்ததாலும், மனிதநேயத்துடன் நடந்துகொண்டதாலும், இன்னல்கள் ஏற்பட்டவுடன், மணிமேகலா தெய்வம் கடலில் தோன்றி அவர்களின் அச்சம்போக்கி அரவணைத்துப் பாதுகாத்தாள். இவள் இந்திரனின் ஏவலினால் இங்கு கடலில் வாழ்ந்து கொண்டுள்ளாள் என்ற கருத்தும் உண்டு. ஒருவர் செய்த பெருந்தானமும் அறமும் பிழையாது எனக் கூறி நன்மக்கள் அனைவரையும் காத்து நிற்கின்றாள் என்று மணிமேகலா தெய்வத்தை நினைத்து தன் குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயர் சூட்டி தனது நன்றியைத் தெரிவித்துள்னான்.

பௌத்த மதத்தில் கூறப்பட்ட நற்கருத்துகளின் அடிப்படையில் காப்பியங்கள் நகர்ந்து செல்கின்றன. அதன்வழியாக சிலப்பதிகாரத்தின் முழுமையையும் மூன்றே வரிகளில் கூறப்பட்டுள்ளது.

‘‘அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்

உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்

ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்’’

என்று பெண்ணினத்தையே பெருமைப்படவைக்கும் இச்செய்தியும், கற்புநெறி காப்பவளை உயர்ந்தவர்கள் காப்பர் என்பதும், நாம் செய்த நல்வினையும் தீவினையும் இந்நாளிலேயே நம்மை வந்து அடையும் என்ற கருத்தும் எக்காலத்துக்கும் பொருந்துவதாகக் கூறப்பட்டுள்ளது வியக்கத்தக்க வரிகளாகும். இக்காப்பியத்தின் வாயிலாக படைக்கப்பட்ட பெண் தெய்வங்களாகச் சிலம்பில் கண்ணகியையும், மணிமேகலையில் மணிமேகலையையும் பெருமைப்படுத்துவதில் இருந்தே உணரலாம். நமது பண்டைய இலக்கியங்கள், அக்கால சமூகத்தை விளக்கும் வாயிலாக பல அரிய நற்கருத்துகளையம், மக்கள் பின்பற்றி தங்களது வாழ்க்கையை நன்மறையால் வாழவும், ஒழுக்கம் உடையவர்களாகத் திகழவும் வழிகாட்டிடும் ஒரு சிறந்த காப்பியமாகவும் அதனைப் படைத்துள்ளது சிறப்புக்குரியது.

சாண்றெண் விளக்கம்

  1. T.S. Subramanian & V.Vedhachalam,  Icons of Grace, The Hindu-Frontline Vol-29 Issue-11.
  2. Ibid pp.318.
  3. வே. வேதாசலம், இயக்கி வழிபாடு, அன்னம் (பி) லிட்., சிவகங்கை, பக்.30-31.
  4. மேலது, பக்.32-33.
  5. மணிமேகலை, பதிகம்1-8.
  6. உ.வே.சா. (பதி), மணிமேகலை, அரும்பதவுரை.
  7. வே. வேதாசலம், இயக்கி வழிபாடு, அன்னம் (பி) லிட். சிவகங்கை, பக்.32.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com