பெண்களும் மாந்திரீகமும்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட பழமையான தெய்வங்கள் பல உண்டு. அவற்றில் மிகவும் தொன்மையானது தாய் தெய்வங்களே என்பது அனைவருடைய கருத்தும் ஆகும்.

உலகின் பல பகுதிகளில் புராதன மக்கள் கூட்டங்களில், பெண்களே மந்திர சக்தி பெற்றவராக விளங்கினர். குறிப்பாக, மந்திர சக்தி பண்டைய சமூகங்களில் பெண்களின் தனி உரிமையாக இருந்தது.*1 இவ்வாறு தோன்றிய மந்திரச் சடங்குகள், முதன்முதலில் கூட்டு வாழ்க்கையில் நடைபெற்றன. குலங்களாகவும், சிறுசிறு குழுக்களாகவும் வாழ்ந்த மனிதன், மந்திரத்தை கூட்டு வாழ்க்கைக்குப் பயன்படுத்தினான். புதியதொரு மனிதப் பிறவியை உலகுக்குத் தருபவளாகக் காணப்பட்ட தாயும் அசாதாரணமான சக்தி படைத்தவளாக இருந்தமையால், பெண்ணிடமே அந்த மந்திர சக்தியும் இயல்பாகக் குடிகொண்டது. சக்தி வழிபாடு அல்லது பேரன்னை வழிபாடு உலகமெங்கும் ஒரு காலத்தில் தோன்றியதற்கு உரிய காரணமே, பெண்களைத் தலையாய மாந்தரீகர்களாகவும் ஆக்கிவைத்தது.

மனித வாழ்க்கை நிலைபேறு உடையதாக இருப்பதற்குப் போதிய சந்ததி விருத்தியும், உணர்வும் தேவையாக உள்ளது. இதன் காரணமாகவே, பழைய கற்காலத்திலிருந்து இன்று வரை, உயிரைப் பாதுகாத்தலும், வளர்த்தலும் மனிதனது அடிப்படை உணர்ச்சிகளின் ஒன்றாக இருந்துவந்துள்ளது. இதுவே, மந்திரச் சார்புள்ள சமய நம்பிக்கையாகப் பல புராதன, நிரந்தரமான வழிபாட்டு முறைகளில் இடம்பெற்றுள்ளது. உயிர்போற்றும் புராதன மந்திரச் சடங்குகளில் இருந்தே பெண்களுடன் நெருங்கிய தொடர்புடைய நம்பிக்கை, அன்னை வழிபாடாகப் பரிணமித்தது என்பதில் ஐயமில்லை. பின்னர், பிறப்புடன் மட்டுமின்றி இறப்புடனும் அன்னை வழிபாடு தொடர்பு பெற்றது. மனித உயிருக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் அவற்றின் வளத்துக்கும் அதன் வளமைக்கும் இவ்வழிபாட்டு முறை பயன்பட்டது.*2

உழவுத் தொழிலின் தொடக்கக் காலத்தில் பயிர் செய்கை முறை வளர்ச்சி அடையாத நிலையில், காட்டைத் திருத்திப் பாதுகாப்பது மிகப்பெரிய வேலையாக இருந்தது. வனவிலங்குகளும், தொற்று நோய்களும், உயிர்ச்சேதத்தையும் பொருள்சேதத்தையும் உண்டாக்கின. இத்தகைய இக்கட்டான சூழலில், தனியொரு குடும்பம் குடியேறுவது முடியாத காரியமாக இருந்தது. அதே நேரத்தில், கண்ணும்கருத்துமாகக் காவல்புரிந்து பயிர்களை, பிள்ளைப்பேறு அளிக்கும் பெண் தெய்வம் வாடவோ, வளரவோ செய்தது. இதன் காரணமாகப் பெண்களின் சந்ததி விருத்திச் சக்தி மந்திர வலிமை பெற்றதாகக் கருதப்பட்டது என, எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், சொற்களின் சரிதம் எனும் நூலில் விளக்குகிறார்.

புராதனச் சமயங்களில், சித்தாந்தம் கட்டுக் கதைகளிலேயே தங்கியிருந்தது. இக்கட்டுக் கதைகளும் மூடநம்பிக்கைகளும், சடங்குகளில் இருந்தே (Ritual) எழுந்தன. சடங்குகள் செய்தலையும், அதனை பின்பற்றுவதும் பண்டைய மக்களுக்கு இன்றியமையாதாக இருந்தன.

அயல்நாடுகளில் பெண்களும் மாந்திரீகர்களும்

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வாழும் நாகரிகம் அடையாத மக்கள் கூட்டத்தினரிடையே பெண் மந்திரவாதிகளே பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர்.*3 சைபீரியாவிலும் பெண் மாந்திரீகர்களே இருந்ததாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உலக நாடுகளிலும் பெண்களுக்கே முதன்முதலில் மந்திர சக்தி அளிக்கப்பட்டதாக, அங்கு வாழ்ந்த மக்களும், அவர்களைச் சுற்றி இருந்த குலங்களும் கூட்டங்களும் நம்பியதாகத் தெரிகிறது. பண்டைய மங்கோலியப் புராணக் கதைகளிலிருந்தும், பெண்களே நோய் தீர்க்கும் மாந்திரீகராக இருந்தனர் எனத் தெரியவருகிறது. வேறு மக்கள் கூட்டத்தினரிடையே ஆண் மாந்தரீகர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்பொழுது, பெண் உடை அணிந்துகொண்டே அவர்கள் அப்பணியைச் செய்துள்ளனர். அதுசமயம், அவர்கள் பெண்களைப் போலவே நடந்துகொள்கின்றனர்.

மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில், உலகம் முழுவதிலும் தாய் வழிச் சமுதாயம்தான் முதன்முதலில் ஆதிக்கம் பெற்றுத் திகழ்ந்துள்ளது தெளிவாகிறது. இவை, வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், தாய் தெய்வச் சிந்தனையை ஊட்டுவதாகவே அமைகிறது. அத்தகைய தாய் தெய்வங்களையே மிகுந்த சக்தி கொண்டவளாகவும், மாந்திரீகர்களாகவும் சித்தரித்துள்ளனர் எனலாம். இன்றளவிலும் தாய் தெய்வ சக்தி, குலதெய்வ வழிபாட்டிலும் சமூக அடிப்படையிலும் மக்கள் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டது எனலாம். பிறருக்கு ஏற்படும் நோய்களைப் போக்கும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது என்ற நம்பியதால், மாந்திரீகத்தை அவர்கள் மீது திணித்து ஓர் உயர் சக்தி பெண்களிடம் இருக்கிறது என வெளிப்படுத்தினார். இவை பெண் சமுதாயத்துக்கு பாதுகாப்பு கருதி அமைத்த செயலாகவும் இருக்கலாம். பின்னர் தோன்றிய ஆணாதிக்க சமுதாயம், அடுத்து ஏற்பட்ட மாற்றங்களுக்கும் பிற ஆண் தெய்வங்களுக்கும் அடிகோலியது என்பதே ஏற்படையதாகும்.

சுடுமண் தாய் தெய்வம் - மோதூர் அகழாய்வு

சுடுமண் தாய் தெய்வங்கள்

தாய் தெய்வங்களின் உருவங்கள் பல அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தாய் தெய்வங்கள் பெரும்பாலும் சிதைக்கப்பட்ட நிலையிலேயே கிடைத்துள்ளன. இதற்கு சமயச்சரவுகளின் காரணமா என்பதை ஊகிக்க இயலவில்லை. அல்லது வளமைச் சடங்கின் வழிபாட்டு முறைகளில் ஒன்றா என்பதையும் உணர முடியவில்லை. தாய் தெய்வத்தின் உருவ பொம்மைகள் பெரும்பாலும் ஆடைகள் இல்லாமலும், கை கால்கள் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன. ஆடைகள் இல்லாமல் தாய் தெய்வத்தைக் காட்டும் முறை, எகிப்திய பண்பாட்டைச் சார்ந்தது. அதை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது ரோமானியர்கள்.*4

தமிழக அகழாய்வுகளிலும், மேற்பரப்பு ஆய்வுகளிலும், அதிக அளவில் சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. அவற்றில் அதிக எண்ணிக்கையிலானவை பெண் சுடுமண் பொம்மைகளே ஆகும். இவை சிதைந்த நிலையில் காணப்படுவதால், பெரும்பாலும் சடங்குகள் அல்லது சமய வழிபாடு தொடர்பானதாக இருக்கலாம். ஆய்வாளர்கள் பெரும்பாலும், இவற்றை பெண் தெய்வங்கள் என்றே குறிக்கின்றனர். குறிப்பாக, வளமைச் சடங்ககள் குறித்த வழிபாட்டில் இடம்பெற்றவை என்ற கருத்தும் உள்ளது.

அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட சுடுமண் பாவைகளின் தலைப் பகுதிகள் (போளுவம்பட்டி - கோவை)

சுடுமண் பெண் தெய்வம் - மோதூர் அகழாய்வு (தருமபுரி)

வருண பகவானை வேண்டி கரகம் எடுக்கும் திருவிழாவில், அமாவாசை அன்று பெண்கள் இரவு நேரங்களில் உடலில் ஆடை இல்லாமல் கோயிலை வலம் வருவார்கள். இதற்கு முந்தைய நாள், ஆடவர்கள் அனைவரும், கிராமத்தின் மன்றில் குடியேற வேண்டும். அடுத்த நாள், பெண்கள் பூங்கரகம் எடுத்து இறைவனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். இவ்வாறு, ஊர் மக்கள் அனைவரும் சாதி வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு வருணனை வேண்டி சக்தி கரகம் எடுக்கும் வழக்கம், தருமபுரி மாவட்டம், பைரநத்தம் கிராமத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது.*5 பூங்கரகம் போன்றே, திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் பூச்சொரிதல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அது சமயம், அம்மனை குளிர்ச்சிப்படுத்த கூடை கூடையாக பூக்களைக் கொண்டுவந்து அம்மன் மீது சாற்றுவர். இதுவும் வளமைச்சடங்கின் ஒரு விழாவாகவே கருதி, அப்பகுதி மக்கள் அனைவரும் இதனை பயபக்தியுடன் கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு, திருவிழாக் காலங்களில் கையால் செய்யப்பட்ட பெண் தெய்வ உருவத்தை வழிபடுவதற்காக சிறிய அளவில் செய்துவைத்து வழிபட்டுள்ளனர். பின்னர் அதனைச் சிதைத்துப் போடுதல் சடங்கில் ஒரு வழிமுறையா என்பதும் ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

தமிழகக் கிராமங்களில் காணப்படும் பெண் குலதெய்வங்கள்

சேலம் மாவட்டம், கே.ஆர்.தோப்பூர், பெரியாண்டிச்சி அம்மன் தாய் தெய்வம்

தமிழகத்தின் வடமாவட்டங்களிலும் தென்மாவட்டங்களிலும் ஒவ்வொரு குழுக் கூட்டத்துக்கும் தனித்தனியான குலதெய்வங்களை அமைத்து வழிபாடுகள் செய்து வருகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இவை ஒவ்வொரு குலத்துக்கும், அதில் காணப்படும் ஒவ்வொரு பிரிவுக்கும் தனியாக குலதெய்வங்களை அமைத்துக்கொள்வர். இவை அனைத்தும் பெண் தெய்வங்களே ஆகும். இவை களிமண்ணால் செய்யப்பட்டு, அதன் மீது கதம்பப் பொடிகள், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவற்றைத் தூவி மலர்களால் அலங்காரம் செய்து வழிபடுவர். இக்குலதெய்வத்தை பெரியாண்டிச்சி அம்மன் என அழைக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தனது குழுக் கூட்டத்தைச் சார்ந்த பங்காளிகள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து, சிறந்த முறையில் வழிபாடு செய்வர். இத்திருவிழா மூன்று தினங்களுக்கு நடைபெறும்.

இத்திருவிழாவின் சிறப்பம்சம் என்னவெனில், ஆண் மக்கள் அனைவரும், தங்கள் உடன்பிறந்த பெண்மக்களையும் அவர்கள் பெண் கொடுத்த வீட்டாரையும், பெண் எடுத்த வீட்டாரையும் உரிய முறையில் அழைத்து கௌரவித்து சிறப்பு செய்து, அப்பெண் மக்களைப் போற்ற வேண்டும் இதுவும் தாய் தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவே கருதலாம். அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கி, மாமிச உணவு அளித்து, அப்பெண் மக்களை மனம் வருந்தாதவாறு உபசரித்து வழியனுப்புதல் வேண்டும். இத்திருவிழா இன்றளவிலும் சேலம் மாவட்டத்திலும், அதன் அருகமை மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. மேலும், இவ்வாறு வழிபட்டால் தங்கள் குலம் தழைக்கும் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. தென்மாவட்டங்களில் இசக்கியம்மன் என்ற பெயரில் குலதெய்வங்கள் அமைந்துள்ளதையும் இங்கு குறிப்பிடலாம். இவை அனைத்தும், நமது பழமையான தா ய்தெய்வ வழிபாட்டு முறை கிராமங்களில் தோன்றியவை என்பதையும், இன்றைக்கும் தொடர்கிறது என்பதையும் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

பௌத்த, சமண சமயங்கள் வழிபட்ட தாய் தெய்வங்கள் (பெண் தெய்வங்கள்)

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட பழமையான தெய்வங்கள் பல உண்டு. அவற்றில் மிகவும் தொன்மையானது தாய் தெய்வங்களே என்பது அனைவருடைய கருத்தும் ஆகும். அத்தாய் தெய்வங்கள் பண்டைய கால மக்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்து வழிபடப்பட்டுள்ளன. குறிப்பாக, இத்தாய் தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் மிகப்பரவலாக நடைமுறையில் இருந்துள்ளது.

பௌத்த, சமண, வைதீக சமயங்களோடு சேராத நிலையில், மிகப் பழங்காலத்தில் இத்தாய் தெய்வங்கள் வணங்கப்பட்டுள்ளன. பின்னர் ஏற்பட்ட பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களின் விளைவாக, பல்வேறு முறையில் பல சமயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சமயங்கள் சார்ந்த பெண் தெய்வங்களாக மாற்றம் பெற்று, இப்பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டுள்ளன. இறுதியில், இவை இரண்டும் கலந்த நிலையில், நாட்டுப்புற மக்களால் வழிபடப்பட்டு தொடர்ந்து போற்றப்பட்டு வருகிறது.

பௌத்த, சமண சமயங்களில் வழிபடப்பட்ட பெண் தெய்வங்களில் ஒருத்தியே இயக்கியம்மன். இத் தெய்வத்தை வடஇந்தியாவில் யக்ஷி என்று அழைத்தனர். இசக்கி, பேச்சி போன்ற பெண் தெய்வ உருவ அமைதிகள், பௌத்த - சமண சமயங்களின் எச்சங்களாக இருப்பினும், மக்கள் அவற்றுக்குரிய அச்சமயப் பொருண்மைகளை மறந்த, மிகப் பழங்காலம்தொட்டே வழிபாட்டில் இருந்த பெண் தெய்வங்களுக்குரிய பண்பு நலன்களை மேற்கொண்டு, வைதீக சமயங்களின் பெண் தெய்வங்களை அவற்றுக்குரிய கூறுகளோடும் சேர்த்து வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு, பௌத்த - சமண சயங்கள் வணங்கிய இயக்கி அம்மனைப் பற்றியும், அவை சைவ, வைணவ சமயங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும், இத்தொடரில் தெளிவாகக் காண்போம். அத்தகைய இயக்கி அம்மன், கிராமங்களில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதன் விளவாக உருவான பல புதிய பெயர் வடிவில் தோன்றிய கிராம, நாட்டுப்புறத் தெய்வங்களையும், அந்நாட்டார் வழக்குகளையும் தெளிவாகக் காணலாம்.

சான்றெண் விளக்கம்

1. நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும், தமிழ்நாட்டில் தாய்வழிச் சமுதாயம், ஜனசக்தி அச்சகம், சென்னை, 1992.

2. E.O.James, The cult of the mother goddess, pp. 13-17.

3. Hutton Webster, Magic - A Sociological Studies, pp.191.

4. கலாநிதி. க. கைலாசபதி. பண்டைத் தமிழா; வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, 1966.

5. இக்கட்டுரை ஆசிரியரால் கள ஆய்வில் சேகரிக்கப்பட்டவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com