தாய் தெய்வங்கள் - பகுதி 1

பெண்கள், மரத்தையும் செடியையும் தோற்றுவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதற்கு, சிந்துச் சமவெளியில் கிடைத்த முத்திரைகள் சான்றாக உள்ளன. 

உலகில் மனிதன் தோன்றிய காலம் முதல் வழிபாடுகளும் துவங்கிவிட்டன. வழிபாடு என்ற சொல்லில் இல்லாமல், அதனை வேண்டுதலாகக் கருதி ஆதிகால மனிதன் செய்தான்.

அவன் உணவைத் தேடி வேட்டைக்குச் செல்லத் துவங்கும்பொழுது, அதற்கு முன் ஏற்பட்ட கொடிய அனுபவங்களால் இன்று உணவு தேடுதல் வேட்டையில் நல்ல மாமிசங்களும், காய்கனிகளும் கிடைக்க வேண்டும் என்றும், எவ்வித கொடிய விலங்குகளின் இடையூறும் இருத்தல் கூடாது, அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றலை தாம் பெற வேண்டும் என்றும் தங்களை திடப்படுத்திக்கொண்டுதான் வேட்டைக்கு புறப்படுவார்கள். இவை தன்னை அறியாமல் ஒரு பாதுகாப்பு கருதிய வேண்டுதலாகத் துவங்கப்பட்டது. இதுவே நாளடைவில் வழிபாடாக மாற்றம் பெற்றது. பின்னர், பூசைகள் பலவிதமாக நடத்தப்பட்டு, அனைவரும் ஒன்று கூடி ஆடல் பாடலுடன் கூத்தாடி நிகழ்த்துவதாக வளர்ச்சி அடைந்தது. வழிபாட்டுக்குப் பிறகு குழுக் கூட்டத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு தேடுதல் பொருட்டு வேட்டைக்குச் செல்பவர்களை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பியும் வைத்துள்ளனர்.

பழைய கற்கால மக்கள் வேட்டைக்குச் செல்லும்பொழுது, கடுமையான மழையையும், சூறாவளிக் காற்றையும், இடி, மின்னல் போன்றவற்றையும், காடுகளில் இயற்கையாக ஏற்பட்ட நெருப்பபையும் கண்டனர். இவற்றை தங்களின் மனிதச் சக்திக்கு அப்பாற்பட்டது எனக் கருதி அவர்கள் சற்று ஒதுங்கினர். பல நேரங்களில், இயற்கையின் சீற்றத்தைக் கண்டு பயந்தனர். இந்தப் பயத்தின் வெளிப்பாடுதான் பின்னர் வழிபாடாகத் தோன்றியது. இயற்கைச் சூழலோடு மனிதன் இணையும்பொழுது பக்குவமடைகின்றான். இந்தப் பக்குவத்தின் வெளிப்பாடே சிந்தனையைத் தூண்டும் அறிவைப்பெற வழிவகுக்கிறது. நாளடைவில், ஆதிகால மனிதன் இன்று ஐம்பெரும் பூதங்களாக வர்ணிக்கப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை வணங்கி, அவற்றை தன் கைக்குள் கொண்டுவர முற்படுகின்றான்.

பழைய கற்கால மக்கள், பாதுகாப்பு கருதி கூட்டம் கூட்டமாக வாழத் துவங்கினர். தங்களுக்குள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்தனர். சூரிய ஒளியையும், சந்திர ஒளியையும் அனுபவித்த மக்கள், உண்ண போதிய உணவுகள் கிடைத்ததும், நன்கு உண்டு உறங்க ஆரம்பித்தனர். இருக்க இடம், தங்களுக்கென ஒரு குழுக் கூட்டத்தையும் அமைத்துக்கொண்டனர். குழுக் கூட்டங்கள் பெருகின. தங்களது கூட்டத்திலேயே உள்ள பெண்கள் ஓர் உயிரைப் பெற்றெடுக்கும் அதிசயமான நிகழ்வைக் கண்ட பழைய கற்கால மக்கள், ஓர் உயிரைப் படைக்கும் சக்தி பெண்களுக்கே உண்டு என்பதையும் அறிந்தனர். ஓர் உயிரைப் படைப்பவளும், தங்கள் இனத்தை விருத்தி செய்பவளுமாகிய பெண்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் என்ற கருத்தை கைக்கொண்டனர். இக் குழுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஏற்க சிலர் தயங்கினர். அதன் வெளிப்பாடுதான், பின்னர் ஓர் உயிர் உடலில் எங்கிருந்து வெளிவருகின்றதோ அந்த இடத்தைப் போற்றி வழிபட்டனர். இதுவே, தாய் தெய்வம் தோன்ற அடிப்படைக் காரணமாக அமைந்தது எனக் கருதலாம்.

{pagination-pagination}

ஆண், பெண் என்ற இருவருக்கும் இடையே மாற்றங்கள் காணப்படும் உடற்கூறுகள், அதனால் அவர்கள் அடையும் வேறுபாடுகளும் பெண்ணை மட்டுமே வேறுபடுத்திக் காட்டியது. பெண், கன்னிப் பருவத்தில் இருந்து தாய்மைப்பேறு பெறுகின்றாள். இங்கே அவள் தாய்மைப் பருவத்தை அடைந்தாள் என்று எங்கும் எவரும் குறிப்பதில்லை. ஏனெனில், தாய்மை என்பது ஒரு சிறப்பு நிலை என்பதால், அதனைக் குறிக்கும்பொழுது தாய்மைப்பேறு அடைந்தாள் என்று பெருமிதத்துடன் கூறுவர். முதன்முதலில் தன்னை அறியாமலேயே தன்னுள் உண்டான கருவை பல மாதங்கள் காத்து வருகின்றாள். தன்னுடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அவளும் அவளைச் சுற்றி இருந்த குழுக் கூட்டமும் வியந்து உற்று கவனிக்கத் துவங்குகின்றனர். பின்னர், பொறுமையுடன் ஓர் உயிரை ஈன்றெடுக்கின்றாள். இவை அனைத்தும் தாய்மை என்ற பேற்றினைப் பெற்ற பெண்மை அடையும் உயர்நிலையாகும். இவ்வாறு, பல்வேறு உயர்நிலைகள் பெண்மைக்கே உண்டு. அதனால்தான், தாய்மையை வணங்கினார்கள். அதுவே, தாய் தெய்வமாக வழிபாட்டில் நிலைத்துவிட்டது. கற்கால மனிதர்கள் காலத்திலேயே தாய் தெய்வம் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என கொசாம்பி அவர்கள் குறிப்பிடுகிறார்*1.

தாய் தெய்வ வழிபாடு

தெய்வங்கள், வழிபடுவோரின் வாழ்க்கை முறையில் இருந்து எழுகின்றன. ஒரு சமுதாயத்தின் புறவாழ்க்கை முறை எவ்வாறு அமைக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில்தான் தெய்வ நம்பிக்கைகளும் வழிபாடுகளும் தோன்றும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களின் வாழ்க்கை முறையை, கார்டன்சைல்டு மூன்று காலகட்டமாகப் பகுக்கிறார்*2.

1. உணவைத் தேடித் திரிந்த காலம்.

2. கால்நடைகளை தாங்களே வளர்த்த காலம்.

3. விவசாயம் - உணவின் இன்றியமையாத இடத்தைப் பெற்ற காலம்.

கற்கால மக்கள் கற்கருவிகளை அதிகம் பயன்படுத்தினர். கல்லெறிதல்,  கவண் கல் கொண்டு குறிபார்த்து எரிதல் போன்றவை வேட்டைத் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. காடுகள், மலைகள், வனதேவதைகள், பேய்கள் போன்ற அனைத்தையும் அடக்கக்கூடிய பல தெய்வங்களை நம்பினர். குழு நடனங்கள் என்பது, அவர்களது பயத்தைப் போக்கிக்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஒன்று. இதனைப் பெருங் கற்கால நினைவுச் சின்னங்களில் காணப்படும் ஓவியங்களில் கண்டு தெளியலாம்*3.

(பழனி அருகே அமைந்த ஆண்டிப்பட்டி மலைப்பகுதி - பாறை ஓவியங்கள் - குழு நடனக் காட்சி)

(குழு நடனக் காட்சி - பிம்பேட்கா வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள்)

{pagination-pagination}

பாவை நோன்பு

பண்டைய மக்கள், பயமூட்டும் பெண் தெய்வங்களை நம்பினர். அவற்றைப் பாவை என அழைத்தனர். அதுவே கொல்லிப்பாவை என்ற நம்பிக்கையும் கொண்டனர். பாவை நோன்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாவைகள் பலவகை. அல்லிப்பாவை, தெற்றிப்பாவை, மணற்பாவை, வண்டாற்பாவை என்பவை அவற்றில் சில. உட்கருத்து என்னவெனில், நாடுவளம் செழிக்க இவற்றைப் பெண்கள் பூசை செய்வார்கள். மழைவளம் சுரக்கவும், ஆற்று நீர் நிலத்தை அடைந்து விதையேற்கும் பருவமாக்கவும், முளை வளரவும், பயிர்வளம் பெருகவும், பாவையை வாழ்த்தி வழிபடுவர்*4. மழையை மாரி என்ற தெய்வமாக வணங்கினர். அதுதான் மாரியம்மன், மாரியாத்தா என்று இன்றும் தொடர்கிறது. பாம்புத் தெய்வங்களும், அவை குடியிருக்கும் புற்றுகளும் இயற்கைச் சக்திகளாக வணங்கப்பட்டன. தமிழர்கள் இன்றளவும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் ஊற்றி அபிஷேகம் செய்து முட்டையை புற்றில் வைத்து வணங்கி வருகின்றனர். இவை புற்று அம்மன் வழிபாடு, நாகாத்தம்மன் வழிபாடு எனப்படுகின்றன. இருப்பினும், இது பாம்புக்கான வழிபாடு என்பதே உண்மை. இதுவும் வளமையின் அடிப்படையில் அமைந்த வழிபாடுதான். இவ்வழிபாடு மிகவும் பழமையான வழிபாடாகும்.

கால்நடை வளர்ப்பு காரணமாக, சமுதாயத்தில் கால்நடைகளுக்குத் தேவையான புல், பூண்டு, தளைகள், நீர் போன்ற தேவைகள் அதிகரித்தன. இதற்காக, வானத்தையும், மழையையும் நம்பி வாழ்ந்தனர். இதனால், வருணனை வணங்கத் தலைப்பட்டனர். செழிப்புத் தெய்வங்களும், மந்திரச் சடங்குகளும், பூமியின் செழிப்புத் திறனை மிகுதியாகக் கற்பனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டன. வளமை, செழிப்பு இவை அனைத்தும் பெண்களுக்கே உரியவை என்று கருதினர். பெண்கள்தான் முதன்முதலில் வேட்டைத் தொழிலில் இருந்து பிரிந்து விவசாயம் செய்யத் துவங்கினர்*5. விதையைச் செடியாக வளர்க்கும் பூமியின் திறனுக்கும், குழந்தையைப் பெற்று வளர்க்கக்கூடிய சக்தி பெண்களுக்கும் உண்டு என்பதால்தான், பூமியையும் பெண்களையும் இணைத்து பூமித்தாய் என்று அழைத்தனர்.

ஒரு மரத்தில் காய்கனிகள் செழிப்பாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பெண்கள் நன்கு உணர்வர். விவசாயம், மந்திரச் சடங்குகள் போன்றவற்றில் பெண்களே அதிகம் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில்தான் மர வழிபாடுகளும் தோன்றின. பெண்கள், மரத்தையும் செடியையும் தோற்றுவிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதற்கு, சிந்துச் சமவெளியில் கிடைத்த முத்திரைகள் சான்றாக உள்ளன. கருவுற்றிருக்கும் பெண் விதை விதைத்தால், அவை பன்மடங்கு பெருகும் என்பது இன்றைக்கும் நடைமுறையில் காணப்படும் ஒன்று. எனவேதான், பூமியை உயிருள்ள, உயிரில்லாத அனைத்துக்கும் தாய் என்று போற்றினர். இப்படித்தான் தாய் தெய்வம் தோற்றம் பெற்றது எனலாம். பெண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி வளர்ந்தபோதுதான் பெண் தெய்வங்கள் அதிகமாகத் தோன்றின என்ற கருத்தும் உள.

ஸ்டார்பரச் கூறும்பொழுது, ‘தெய்வங்களில் பெண் தெய்வங்கள் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வணங்கப்பட்டன என்பார்*6. பெண்ணுக்குச் சமுதாய வாழ்க்கையில் எவ்வித இடம் இருக்கின்றதோ, அதன் அடிப்படையில் பெண் தெய்வங்களும் போற்றப்படும். ஒருவிதத்தில், பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கையில், பெண்ணே தாயாகவும், தலைவியாகவும், துணைவியாகவும் பல்வேறு பரிமாணங்களில் தோற்றமளிக்கின்றாள். எனவே, சமுதாயத்தில் தாய் தெய்வங்களே எல்லாத் தெய்வங்களுக்கும் முதன்மையானவையாகத் திகழ்கின்றன.

வேட்டைத் தொழிலில் பெண்களுக்கு உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அக்கால மக்கள் உணவு தேடுதலுக்காக வேட்டைக்குச் செல்லும்பொழுது பெண்டிரைத் தவிர்த்தனர். வேட்டைத் தொழிலை விடுத்து விவசாயத் தொழிலுக்கு வந்த பெண்கள், தாவரங்களைப் பற்றிய அனுபவ அறிவு பெறும் வாய்ப்பினைப் பெற்றனர். எனவே, அவர்கள் விவசாயத்தில் வெற்றியையும் அதிக பலனையும் பெற்றனர். வேட்டைச் சமுதாயத்தில் இருந்து பெற்ற உணவைவிட, வேளாண் சமூகத்திலிருந்து பெற்ற உணவு அதிகமாகும். இவை சேமிக்கத் தகுந்ததாகக் காணப்பட்டதால், விவசாயத்தில் ஈடுபட்ட மகளிருக்கு உயர்வை வழங்கியது. எனவே, உலகம் முழுவதிலும் செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன.

{pagination-pagination}

பூமியும் பெண் தெய்வமாகவே கருதப்படுகிறது. பெண்கள் விவசாயத்தின் மூலம் சமூக ஆதிக்கம் பெற்றது, சக்தி வாய்ந்த தெய்வங்கள் அனைத்தும் பெண் தெய்வங்களாகவே அமையக் காரணம். பல நாடுகளிலும், செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருந்திருக்கின்றன. பெண்மையைப் போற்றாத நாடுகளே இல்லை என்றுகூட சொல்லலாம். கிரேக்க தெய்வங்களான சைபீல் டெடோனா, டெல்பி போன்றவை பெண் தெய்வங்களே. செழிப்பை வேண்டி நடத்தப்படும் விழாக்களில் ஆண்கள் இடம்பெறுவதில்லை.

நம் நாட்டு தாய் தெய்வங்களைப் போன்ற இயல்புகளைக் கொண்ட செமிடிக் நாடுகளைச் சார்ந்த அஸ்டர்டே என்ற தெய்வமும், எகிப்திய தெய்வமான ஐஸிஸ் என்ற தெய்வமும், பிரிஜிய நாட்டைச் சார்ந்த ஸைபீல் என்ற தெய்வமும் வணங்கப்படுகின்றன*7. உலக நாடுகளிலும் பெண் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளதையே இது சுட்டுகிறது. இச்செய்தி குறித்து தனியாக ஒரு அத்தியாயத்தில் விவரிக்கப்பட உள்ளது.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

1. D.D. Kosambi, An Introduction to the study of Indian History, P.60.

2. V. Gorden Child, The Aryans.

3. ஆண்டிப்பட்டி பாறை ஓவியங்கள்

4. நா. வானமாமலை - தமிழர் வரலாறும் பண்பாடும் - தமிழ்நாட்டில் தாய்வழிச் சமுதாயம், பக்.73.

5. மேலது. பக்.75.

6. J.G. FRAZER, The Golden Bough Vol-II  

7. கலாநிதி க. கைலாசபதி - பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், மக்கள் வெளியீடு, 1966.

இத்தொடர் ஆசிரியரின் முந்தைய வெற்றித் தொடர் ‘புதையுண்ட தமிழகம்’ - படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com