பௌத்த, சமண சமயத்தில் பெண் தெய்வங்கள் - 2 (இயக்கியர் வழிபாடு)

அன்னலட்சுமியாக பெண் தெய்வத்தைப் போற்றியுள்ளதும், பசித்தவர்களுக்குக் கருணையுடன் அன்னம் வழங்குபவை பெண் தெய்வங்கள் என்ற கருத்தையும் இப்பெண் தெய்வத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சிலம்பும், மணிமேகலையும் பெண் தெய்வங்களை போற்றுவது போலவே, பௌத்த மதத்தில் தாராதேவி, மங்களாதேவி, சிந்தாதேவி, போன்ற பெண் தெய்வங்களும் போற்றப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தில் பெரிதும் போற்றி வணங்கப்பெற்ற பிற பெண் தெய்வங்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஜாங்குலி (Janguli)

மேய்த்தல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வணங்கிய தெய்வம் நாககன்னி என்பது குறிப்பிடத்தக்கது. காடும் மலைகளும் சூழ்ந்த பகுதிகளில் பாம்பினால் அதிக பாதிக்கப்பட்ட மக்கள், அதன் தலைவியாக கருதப்பட்ட நாகக்கன்னி வழிபாடே அனைத்து சமுதாயத்துக்கும் முதன்மையானதாக விளங்கியுள்ளது. அவ்வாறு இந்தியாவில் தொன்றுதொட்டு வந்த இந்த நாக வழிபாடு, பௌத்த சமயத்தில் ஜாங்குலி (Janguli) என்ற பெண் தெய்வமாக வணங்கப்பட்டுள்ளாள். இத்தெய்வத்தைக் குறிப்பிடும்பொழுது, இவள் தனது தலையில் அரவக்குடையும், காதுகளில் நாக குண்டலங்களும், தனது மெல்லிய இடையில் நாகமேகலையையும் அணிசெய்து காட்சியளிப்பாள். இவையனைத்தையும், அவளது திருவுருவச் சிற்பத்தில் காணலாம். இத்தெய்வம், பாம்புகளால் ஏற்படும் இடர்களைப் போக்கவல்லது.*1

சிந்தாதேவி

சங்க இலக்கியமான மணிமேகலையில், ஆபுத்திரனுக்கு அட்சயபாத்திரத்தை வழங்கியவள் சிந்தாதேவி எனும் பெண் தெய்வமாவாள் என்று சாத்தனாரால் குறிப்பிடப்படுகிறது. பொ.ஆ.2-ம் நூற்றாண்டில் பௌத்த சமய நூல்களில் குறிப்பிடப்படும் தெய்வம் சுண்டாதேவி எனக் குறிக்கப்படுகிறது. இத்தெய்வம், கைகளில் கிண்ணங்களை ஏந்தியவாறு காட்சியளிக்கிறாள். எனவே, சுண்டாதேவியும் சிந்தாதேவியும் உருவ ஒற்றுமையாலும், கருத்து ஒற்றுமையாலும் ஒத்துப்போவதால், இருவரும் ஒன்றே எனக் கொள்ளலாம்.*2 அன்னலட்சுமியாக இங்கு பெண் தெய்வத்தைப் போற்றியுள்ளதும், பசித்தவர்களுக்குக் கருணையுடன் அன்னம் வழங்குபவை பெண் தெய்வங்கள் என்ற கருத்தையும் இப்பெண் தெய்வத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தாராதேவி

தாராதேவி என அழைக்கப்படுபவள், அழகுக்கே உரிய உணர்வை வழங்கிய பௌத்த சமயத்து பெண் தெய்வமாவாள். சீன யாத்ரீகரான யுவான் சுவாங், தனது இந்திய நாட்டுப் பயணக் குறிப்பில், இத்தெய்வத்தைப் பெருமைபடக் குறிப்பிட்டுள்ளார். இவர் பௌத்த சமயத்தில், அவலோகீஸ்வரரின் சக்தியாக விளங்கும் பெருமை பெற்றவள். இத்தாராதேவியே, கிராமங்களில் வழிபடப்படும் திரௌபதி அம்மன் எனும் கிராமதேவதையாகும். தாராதேவி பல வண்ணங்களைக் கொண்டவள் என்றும் குறிப்பர்.

தமிழகத்தில், பொ.ஆ.6-ம் நூற்றாண்டுக்குப் பின்னர், சமண சமய இயக்கியர் உருவங்கள் சிறந்து விளங்கியதுபோல, பௌத்த மதப் பெண் தெய்வ உருவங்கள் சிறப்புற்று விளங்கப்படவில்லை. தமிழகத்தில், தொடக்க காலத்தில் இருந்த பௌத்த சமய பெண் தெய்வ உருவங்கள் வழிபாடு பிற்காலத்தில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது எனலாம். இவை இடத்துக்கு இடம் வேறுபட்டு, தனது உருவங்களையும், பெயர்களையும் மாற்றம் செய்துகொண்டு வலம் வரத் துவங்கின என்றே கூறலாம்.

{pagination-pagination}

சான்றாக, தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில் பகுதியில், சென்னைப் பல்கலைக் கழக பண்டைய வரலாறும் தொல்லியலும் பயிலும் மாணவர்கள் மேற்கொண்ட அகழாய்வில், இக்கட்டுரை ஆசிரியரும் மாணவனாகப் பங்குபெற்றவர். அதுசமயம், அங்கு மேற்கொண்ட அகழாய்வில் பௌத்த விகாரத்தின் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்து வெளிக்கொணரப்பட்டது.*3. இதனடிப்படையில், காமாட்சியம்மன் கோயில் பகுதி முன்பு பௌத்த சமயத்தின் இருப்பிடமாக விளங்கியது என்றும், தற்பொழுது காணப்படும் ஸ்ரீகாமாட்சியம்மன், முன்பு பௌத்தர்களால் வணங்கப்பெற்ற தாராதேவியாக விளங்கியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.*4.

ஆரிதி (Hariti)

இவள், ராஜகிருக நகரத்தின் காவல் தெய்வமாக விளங்கியவள். பாஞ்சகனுக்கும் ஆரிதிக்கும் ஐநூறு குழந்தைகள் பிறந்தன. இறுதியாகப் பிறந்த குழந்தை பிரியங்கரன் என்ற மகனிடம் மட்டும் பொல்லாத ஆசையும் அதிக அன்பும் வைத்திருந்தாள். ஆரிதி, குழந்தைகளைத் திருடி உண்ணும் பழக்கத்தைக் கொண்டவள். இவளது கொடுமையைத் தாளாத ராஜகிருகத்தின் மக்கள், புத்தரிடம் முறையிட்டனர். புத்தர் இவர்களது குறையை தீர்ப்பதாகக் கூறி, ஆரிதியின் அன்பு மகனான பிரியங்கரனை கவர்ந்து கொண்டுவந்த மறைத்து வைத்துக்கொண்டார். எங்கு தேடியும் கிடைக்காத தனது மகனைப் பற்றி புத்தரிடம் ஆரிதி  முறையிட்டாள்.

புத்தர் அவளிடம், நீ இனிமேல் குழந்தைகளைத் திருடி உண்ணும் பழக்கத்தை முழுமையாகக் கைவிடுவதாக எனக்கு உறுதி அளித்தால், உனக்கு உன்மகன் கிடைப்பான் எனக் கூறினார். அவளும் புத்தரிடம் அந்த உறுதியை வழங்கியதால், அவரும் அவளது மகன் பிரியங்கரனை அவளிடம் ஒப்படைத்தார். இதற்குப் பின்னர், ஆரிதிக்கும் அவளது மகனுக்கும் ராஜகிருக மக்கள் வேண்டிய உணவும், பலி கொடுத்தும் சிறப்பாக வழிபட்டனர். புத்த விகாரங்களிலும் ஆரிதி போற்றி வழிபடப்பட்டாள் என்று யுவான் சுவாங் தனது குறிப்பில் பௌத்த மதப் பெண் தெய்வமாகக் ஆரிதியைக் குறிப்பிடப்படுகின்றார். இவளது உருவச் சிற்பங்கள் அஜந்தா, எல்லோரா போன்ற இடங்களிலும் காணப்படுவதே இதற்குச் சான்று.*5 வடஇந்தியாவில் அமைந்த பௌத்த விகாரங்களில் ஆரிதி போற்றி வழிபடப்பெற்றாள்.

கந்திற்பாவை

கந்திற்பாவை, கடவுளால் எழுதப்பெற்ற பாவையாவாள். இப்பாவையை புகார் மக்கள் பெரிதும் போற்றி வழிபட்டுள்ளனர். சாத்தனார் தனது காவியத்தில் வரும் தீயவர்களின் கணங்களை மாற்றி அவர்களை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வதுபோல, காப்பியத்தில் வரும் கதாபாத்திரங்களையும் தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார். இது, சாத்தனார் அவர்களின் தனித்திறமையாகும். காயசண்டிகை என்ற தனது மனைவியின் உருக்கொண்டிருந்த மணிமேகலையை அடைய முற்பட்ட உதயகுமாரனைக் கொன்று, பின்னர் மணிமேகலை செய்வதறியாது நின்றபோது அவளை நெருங்க முற்பட்ட காஞ்சனையைத் தடுத்து, அவள் உருமாறிய மணிமேகலை என்ற உண்மைக் கதையைக் கூறிக் காத்தது இந்த கந்திற்பாவை.

காவிரிபூம்பட்டினத்தில் இருந்த குச்சரக்குடிகை என்னும் பெயருள்ள சம்பாபதி அம்மன் கோயிலில் உள்ள ஒரு தூணில் கந்திற்பாவை எனும் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கந்து (தூண்) - பாவை (பதுமை), இவை இரட்டைத் தெய்வங்களின் உருவங்களாகும். இவள், பௌத்தர்களால் போற்றப்பட்ட பெண் தெய்வமாகும்.

{pagination-pagination}

மகாமயூரி

மகாமயூரி, புத்த மத சாதகக் கதைகளில் காணப்படும் மற்றுமொரு பௌத்தப் பெண் தெய்வமாவாள். தங்க மயிலிறகை தன் கையில் ஏந்தியிருக்கும் நிலையில் காணப்படுபவள். புத்தரின் உருவைத் தன் தலையில் சுமந்து நிற்கும் நிலையில், மூன்று முகங்களும் ஆறு கரங்களும் கொண்டு காட்சி அளிப்பவள். இப்பெண் தெய்வமும் நாகதேவதைகளைப் போன்றே கொடிய பாம்புகளால் ஏற்பட்ட நஞ்சினைப் போக்க வல்லவள். இதனால், இத்தெய்வத்தை மக்கள் பயபக்தியுடன் வணங்கியுள்ளனர். இவள் மந்திர தந்திர சக்தியுடையவளாகப் போற்றப்பட்ட பெண் தெய்வமாவாள்.

பிருகுடி

இப்பெண் தெய்வம், விரிந்த சடாபரம் கொண்டவளாக சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளாள். கைகளில் அக்கமாலையும் திரிசூலமும் காணப்படும்.

சரஸ்வதி

பெண் தெய்வங்களின் வழிபாட்டில் பௌத்த சமயத்தவரால் பெரிதும் போற்றி வழிபடப்பட்ட தெய்வம், கல்விக் கடவுளாகிய சரஸ்வதியே எனலாம். இத்தெய்வம், இந்து சமயத்தவரிடம் இருந்து பௌத்த சமயத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண் தெய்வமாகும். ஒருங்கிணைந்து பார்த்தால், அனைத்து சமயங்களும் ஒரே நீதியைத்தான் கூறுகின்றன. ஒரே எண்ணங்களைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆனால், வழிபடும் தெய்வங்களின் பெயர்களும், வழிபாட்டு முறையும் மாறுபடுகின்றனவே தவிர, பெண் தெய்வங்கள் ஒன்றே. அதுவே தாய்மையைப் போற்றும் பெண் தெய்வம் என்பதும் அனைத்துப் பிரிவினருக்கும் முதன்மைக் கடவுளும் தாய் தெய்வமே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

சாஞ்சி ஸ்தூபி (Sanchi Stupa)

பொ.ஆ.மு.2-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், பௌத்த மதத்தில் இயக்கி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றிருந்தது. ஆந்திர மாநிலத்தில் சாதவாகனர்களின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவர்கள் வாயிலாக தமிழகத்துக்குப் பௌத்தம் வந்தது. இதற்குச் சான்றாக, வடதமிழகத்தில் சாதவாகனர்களின் காசுகளும், சில அச்சு வார்ப்புகளும் (Mould) கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்திலும் சாதவாகனர்களின் சான்றுகள் பல கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.*6 பௌத்த மதத்தைச் சார்ந்த சாஞ்சி ஸ்தூபிகளில், இயக்கி அம்மன்களுக்குச் சிறப்பான இடத்தை வழங்கியுள்ளனர். பௌத்த மத ஸ்தூபிகளில் மட்டுமின்றி, அவர்கள் காலத்து சைத்தியாஸ் மற்றும் விகாரங்கள் (Chaityas and Viharas) போன்ற இடங்களில், நுழைவு வாயிலின் தூண்களிலும், தோரணவாயிலின் வளைவுகளிலும் இப்பெண் தெய்வங்களை சிற்பங்களாகச் செதுக்கி அலங்கரிக்கப்பட்டு கௌரவித்துள்ளனர்.*7

Chaitya at Karle near Lonavala at Maharashtra, First Cen. B.C.E.,

பௌத்த மதத்தினர் தங்களது மதத் துறவிகளுக்காகவும், தங்களது சமூகத்தினருக்காகவும் பல கட்டடக் கலைச் சிறப்பு வாய்ந்த கட்டடங்களை எழுப்பினர். இவை மூன்றுவிதமான கட்டடக் கலையை நமக்குத் தெரிவிக்கின்றது அவை, பௌத்தத் தூண்கள் (Stupas), விகாரா (Vihara), அடுத்து சைத்யா (Chaityas). இந்த மூன்றும் மூன்றுவிதமான கட்டடக் கலைச் சிறப்பு கொண்டவை. இவை பௌத்த மதத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டடக் கலைகளாகும்.

{pagination-pagination}

தூண்கள் - புத்தரின் சாம்பலும், எலும்புகளும் கொண்டு புதைக்கப்பட்ட பகுதி. அங்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னமே பௌத்த ஸ்தூபி ஆகும். இங்கு புத்தரின் கொள்கைகளும் அவற்றைச் சார்ந்தவையும் காணப்படும்.

விகாரா – பௌத்த மதத் துறவிகள் தங்கி தியானம் செய்யும் இடம்.

சைத்யா – பௌத் தமதத் துறவிகளும் மக்களும் கூடும் மண்டபம்.  இதன் அமைப்பு நீள்செவ்வக வடிவில் அமைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதி அரைவட்ட வடிவ அமைப்பில் அமைக்கப்பட்டு, மையப் பகுதியில் ஸ்தூபி ஒன்று எழுப்பப்பட்டிருக்கும். இதன் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்தூபியைச் சுற்றிவருவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும். இரண்டு பக்கங்களிலும் பளபளப்பான தூண்கள் அமைக்கப்பட்டிருக்கும். பிராகாரத்தைப்போல் காணப்படும். இதன் நுழைவுவாயில்களிலும் பிற இடங்களிலும் வழிபாட்டுத் தெய்வங்கள் வடிக்கப்பட்டிருக்கும்.

சைத்யாஸ் - பாஜா, இந்தியா. முதல் பொ.ஆ.

பர்கூத், புத்தகயா, மற்றும் சாஞ்சியில் உள்ள ஸ்தூபிகளில் காணப்படும் நுழைவுவாயிலில் மாமரக் கிளைகளின் மீது ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருப்பதுபோல இயக்கி அம்மன் சிற்பங்கள் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாஞ்சி ஸ்தூபியின் நான்கு நுழைவுவாயிலிலும், அழகிய நிலையில் எட்டு இயக்கி அம்மன் உருவங்களைக் காட்டியுள்ளனர். பௌத்த மதத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடுகள் அனைத்தும், பௌத்த மதத்தில் வஜ்ராயன பௌத்தம் நடைமுறைக்கு வந்த பிறகே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வஜ்ராயன பௌத்தம் மிகவும் எளிய முறையில் அனுமதிகளை வழங்கியதால், பௌத்த மதத்தில் அதிக அளவில் பெண் தெய்வங்கள் போற்றி வணங்குதலைச் செய்துள்ளனர். இயக்கி அம்மனை பௌத்த மதத்தினர் ஏற்றுக்கொண்ட பின்னரே, பௌத்த சமயத்தில் பல பெண் தெய்வங்கள் வழிபாட்டுக்கு வரத் துவங்கின எனலாம்.

சாஞ்சி ஸ்தூபி

இயக்கி அம்மன் - மாமரம் மற்றும் வாழை மரத்தில் சாய்ந்துகொண்டுள்ள நிலை - சாஞ்சி ஸ்தூபி

சான்றெண் விளக்கம்

  1. R.S.Gupta, Iconography of the Hindus, Buddhist and Jains, D.P.Taraporevala sons & co. pvt. Ltd, Bombay.
  2. Ibid.pp.116.
  3.  K.S. Ramachandran, Archaeology of south India, Tamil Nadu, Sundeep Prakashan, New Delhi, 1980. pp.93.
  4. T.A.Gopinatha Rao., Article in Indian Antiquary, Vol-VII and Dr,Meenakshi., Article ‘Buddhism in South India’ in south indian studies Vol.II, Dr.R.Nagasamy (Ed), saher, Madras.pp.107.
  5. R.S. Gupta, Iconography of the Hindus, Buddhist and Jains, D.P.Taraporevala sons & co. pvt. Ltd, Bombay. pp.119.
  6. Archaeology of south India-Tamil Nadu. Op.cit., p.9
  7.  T.S.Subramanian &V.Vedhachalam, Icons of Grace, The Hindu-Frontline Vol-29 Issue-11, Jun-02-15, 2012.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com