திருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) - உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்) - தொடர்ச்சி

விஷ்ணு சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இறைவனின் திருமார்பின் வலதுபுறத்தில் திருமகள் வாசம் புரிவதுபோல் ஒரு குறியீட்டுடன் படைக்கப்படுகின்றன.

சைவ சமயத்தில், சிவனே முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுபவர். இவர் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், உண்மை விளம்புபவர் எனப் பல தோற்றங்களைப் பெற்று, மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர் என்று குறிப்பிடப்படுகிறது. இவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அனைத்திலும் சைவ சமய மக்களால் போற்றப்பட்டவராவார். பொ.ஆ.மு. 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று குறிப்பிடக்கூடிய சிந்து சமவெளி நாகரிகத்திலும் சிவ வழிபாடு போற்றப்பட்டுள்ளது என்பதை அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. பசுபதியின் வழிபாட்டினை அகழாய்வில் கிடைத்த முத்திரை ஒன்று தெளிவுபடுத்துகிறது. இதுவே, சிவனின் முன்னோடி வடிவமாகவும் கருதுகின்றனர்.

பசுக்கூட்டங்களின் தலைவன் என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். இம்முத்திரையில், யோக நிலையில் அமர்ந்துள்ளதும், தலையில் இரண்டு கொம்புகள் காட்டப்பட்டுள்ளதும், அதனைத் தொடர்ந்து பசுக்கள் இவரைச் சுற்றி நிற்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. விலங்குகள் சூழ அமர்ந்த நிலையில், கொம்புகளுடன் தியான நிலையில் காட்டப்பட்டுள்ளது ஆதிசிவனின் வடிவமே என்று அகழாய்வு புரிந்த சர் ஜான் மார்ஷல் தெரிவிக்கிறார். மேலும், சிந்துவெளி நாகரிகத்தோடு பெண்தெய்வ வெளிப்பாடு மறைந்துவிடவில்லை என்ற கருத்தையும் வலியுறுத்துகிறார்.*1 அத்தகைய பழமைவாய்ந்த சிவன், பல அவதாரங்களை நாட்டு மக்களுக்காக எடுத்துள்ளார் என்பது புராணக்கூற்றாகும்.

சிவனின் அறுபத்தி நான்கு அவதாரங்களில் ஒன்றுதான், இந்த மாதொருபாகன் காட்சி ஆகும். இந்த அவதாரம், மக்களின் நன்மைக்காகவும், உலகில் வாழும் தம்பதிகள், அதாவது கணவனும் மனைவியும் ஒற்றுமையாக எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கும் வழிகாட்டியாகும். உலக மக்களுக்கு இக்கருத்தை உணர்த்தும் முன், சிவனும் பார்வதியும் எவ்வாறு ஒற்றமையாகவும் தங்களுக்குள் மனமுவந்து இல்வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு வாழ்ந்தனர் என்பதை அறிவிக்கவே, உமை வாயிலாக சிவன் நடத்திய நாடகமாகும்.

அர்த்தநாரீஸ்வரர்

அர்த்தநாரீஸ்வரர்; மூன்று கால்களைக் கொண்ட பிருங்கு முனிவர் -திருச்செங்கோடு

அர்த்தநாரீஸ்வரர் என்பதில், அர்த்த என்பது பாதி என்ற பொருளையும், நாரி என்பது பெண்ணையும் குறிக்கும் பொருளையும் குறிப்பது. இது வடமொழிச் சொல். ஆண்பாதி - பெண்பாதி கொண்ட சிவனின் உருவத்தையே அர்த்தநாரீஸ்வரர் என்றழைத்தனர். எனவே, சிவன் ஆண்பாதி பெண்பாதி உருவைக் கொண்டு திகழ்ந்தான் என்பது கருத்து. அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் இடப்பக்கம் பார்வதியும், வலப்பக்கம் சிவனின் தோற்றமும் காணப்படும். தமிழகத்தில், கொங்கு நாட்டில் அமைந்த திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் அவதரித்ததைக் கூறும்பொழுது, ‘திருச்செங்கோடு திருக்கொடிமாட செங்குன்றூர்” என்று அழைக்கப்படும் இவ்வூரில் அமைந்த மலையின் மீது சுயம்புவாகத் தோன்றினார் என்று கூறுவர். செம்மலை, நாகமலை, நந்திமலை என்று பலவாறு அழைக்கப்படும் இம்மலை மீது, அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.

தேவகோட்டச் சிற்பம்

அர்த்தநாரீஸ்வரர் செப்புத் திருமேனி

இந்நாயனாருக்கு அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தும் பொருட்கள் வெள்ளெருக்கு, வில்வம், தாமரை, சம்பை, மந்தாரை, பாதரி, செங்கழுநீர், பொன்னரளி, இவற்றுடன் சந்தனம், கும்கும், விபூதி போன்றவையும் கலந்து அபிஷேகம் செய்வது வழக்கம். மேல்தளத்தில் கர்ப்பக்கிருகத்தில் நீரூற்று இருந்துகொண்டே உள்ளது. இறைவன் எப்பொழுதும் குளிச்சியாகவே வைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள நீர் மருத்துவக் குணம் கொண்டது என்பர். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம், சிவன் கோயில்கள் அனைத்திலும் காணப்படும் ஒன்று. ஆனால், இவருக்கென்று தனிக்கோயில் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க இடம் திருச்செங்கோடு ஆகும்.

சிவபுராணம் கூறும் செய்தி

விஷ்ணு, பிரம்மா, இந்திரன், பிருங்கு முனிவர் ஆகியோருடன் பல ரிஷிகளும், சித்தர்களும் இறைவன் சிவபெருமானைக் கயிலாயத்திலேயே சென்று வணங்கி அவனருள் பெறுதல் வேண்டி கயிலாயம் சென்றனர். சிவன் தனது வாகனமான நந்தியின் மேல் பார்வதியடன் வீற்றிருந்தார். விஷ்ணு, பிரம்மா, இந்திரன் மற்றும் ரிஷிகள் அனைவரும் கயிலாயத்தில் நுழைந்தவுடன், நந்திம்பெருமானையும், முதலில் அமர்ந்திருந்த பார்வதியையும் வணங்கி, பின்னர் சிவபெருமானை வணங்கிச் சென்றனர். ஆனால், பிருங்கு முனிவரோ நேராக சிவனிடம் சென்று வணங்கிச் சென்றார். அவர், பார்வதியை வணங்க மறுத்தார். இதனைக் கண்ணுற்ற பார்வதி கோபமுற்றார். பிருங்கு முனிவர் மேலும் நடக்க இயலாதவாறு, இறைவனை சென்று அடைய முடியாதவாறு அவரின் உடலில் உள்ள சதைகளைக் கரையச் செய்தார்.

இதையறிந்த சிவன், பிருங்கு முனிவர் தன்னிடம் நடந்து வருவதற்கு ஏற்ப மூன்றாவது காலை வழங்கினார். அவரும் சிவனை நெருங்கி அவர் அருளைப் பெற்றார். அதன் பின்னர் மலையின் உச்சிக்குச் சென்ற அவர், அங்கும் பார்வதியை வணங்க மறுத்தார். இதைக் கண்ட பார்வதி, சிவனிடம் முறையிட்டார். நாம் தனித்தனியாக இருப்பதால்தான் எனது சக்தியை யாரும் மதிப்பதில்லை. எனவே, நானும் உங்களில் ஒருத்தியன்றோ. எனவே எனக்கும் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்று கோரினார். அப்படி உரிய மரியாதையை வழங்க வேண்டுமெனில், என்னுள் சரிபாதி நீயானால் யாரும் உன்னைத் தனித்துப் பார்க்க இயலாது. எனவே இன்றுமுதல், என் உடலில் பாதி நீயாவாய் என்று அவருக்கு அருளினார். இனி நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை. எனவே, நாம் இருவரும் ஒன்றே. இனி இப்புவியுலகில் கணவன் - மனைவி இருவரும் ஒன்றே. இருவரும் ஒருவருக்குள்ளே ஒருவர் அடங்குவர் என்றும், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல் வேண்டும் என்றும் உரைத்தார்.

இதனால், புவியுலகில் சிவனும் பார்வதியும்போல ஒருமித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்த வந்த அவதாரமே அம்மையப்பன் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் ஆகும். தனது தலைவிக்கு, அதாவது உலகம் போற்றும் பெண் தெய்வமாகிய பார்வதிக்குத் தனது உடலில் சரிபாதி வழங்கியமையால், மாதொருபாகனாகவும் தோற்றம் பெற்று மக்களுக்கு நல்வழிகாட்டி வருகின்றார். இவற்றில் நாம் அறிவது என்னவெனில், சிவனும் சக்தியும் ஒன்றே. உயிரைப் படைப்பவள் தாய், வளமைக்கு உரியவள் தாய். எனவேதான் நாம் பெண் தெய்வத்தைப் போற்றுகிறோம். எனவே பெண்ணுக்கு ஆணாதிக்க சமுதாயத்திலே துணையாக நிற்பவளும், முழுமையான வளர்ச்சியை வழங்கும் தாய்மையும் பொறுமையின் சிகரமாகத் திகழ்பவளும் பெண் தெய்வமாகிய பார்வதி தேவி. அவளைப் போற்றுதல் வேண்டும் என சிவனின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.

ஆணாதிக்க சமுதாயமாகத் திகழ்ந்தாலும், உலகம் உருண்டை என்பதுபோல, ஆரம்பக் காலகட்டங்களில் பெண் தெய்வங்களைப் போற்றியதுபோல, சமுதாய மாற்றம் பெற்ற காலத்திலும் தாய் தெய்வங்களே மீண்டும் முதன்மையாக அமையப்பெறக் காரணமாகத் திகழ்ந்ததுதான் இம் மாதொருபாகன் அவதாரம் ஆகும். இந்நிகழ்வால், ஆண்கள் அனைவரும் தனது இல்லத்தரசிக்கு சரிபாதி உரிமை அளித்துப் போற்ற வேண்டும் என்பதே இதன் உட்கருத்தாகும்.*2

திருவுறைமார்பன்

சைவமும் வைணவமும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்து வந்தவை. எனவே, சிவனின் செயல்களுக்கு இணையாக வைணவத்தில் ஸ்ரீவிஷ்ணு தனது துணைவியாரை மார்பில் சுமக்கிறார். திருமாலின் மார்பில் திருமகள் உறைவதால்தான் ஸ்ரீவிஷ்ணுவை திருவுறைமார்பன் என்றும், ஸ்ரீ வாசம் புரிவதால் ஸ்ரீநிவாசன் என்றும் அழைக்கப்படுகின்றார். நாம் அன்றாட வணங்கும் தெய்வங்கள் நமக்கு நல்வழிகாட்டவும் இல்லறம் செழிக்க நல்லறங்களை நமக்கு அவர்கள் வாழ்க்கை மூலம் காட்டுகின்றனர்.

திருமகள் உறையும் மார்பினன் - விஷ்ணு செப்புப் படிமம் – சோழர் காலம்

சகஸ்ரநாமம் கூறும் தகவல்

பிருங்கு முனிவர், முப்பெரும் தெய்வங்கள் தனக்கு எவ்வாறு மரியாதை செலுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ள, அதிரடி நிகழ்வை நிகழ்த்தினார். சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் தங்கள்  துணைவியாருடன் இருக்கும்பொழுது திடீரெனப் பிரவேசிக்கும் தனக்கு அவர்கள் வழங்கும் மரியாதையை உலகுக்குக் காட்ட வேண்டும் எனக் கருதினார். அதன்படி, முதலில் சிவனும் பார்வதியும் உறையும் இடமான கயிலாயத்துக்குச் சென்றார்.

தனது வருகையைத் தெரிவிக்காமல் திடீரென கயிலாத்துக்கு உள்ளே நுழைய முற்பட்டபொழுது, நந்தி அவரைத் தடுத்து சிவன் பள்ளிகொண்டுள்ளார், தற்போது பிரவேசிக்க இயலாத என்று கூறினார். அதனையும் மீறி உள்ளே நுழைய முற்பட்ட பிருங்கு முனிவரை, சிவன் தனது சூலத்தை தூக்கியெறிந்து தடுத்து நிறுத்தினார். இதைக் கண்ணுற்ற பிருங்கு முனிவர், பூலோகத்தில் உனக்கு கோயில்கள் பல எழுப்பினாலும், உன் சுய உருவத்தை அதில் காணமுடியாமல் போவதாகுக. மேலும், அருவமான லிங்கமும் ஆவுடையாருமாகக் காட்சியளிக்க ஆசி வழங்குவதாக அருளாசி வணங்கினார். அதனால்தான், கோயில்களில் சிவனை அருவ வடிவமாகவே மக்கள் வழிபடுகின்றனர்.

அடுத்து பிரம்மாவும், சரஸ்வதியும் உறையும் இடத்துக்குச் சென்றார். பிரம்மனின் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட, மிகுந்த ஆவேசம் கொண்ட பிருங்கு முனிவர், உனக்கு பூலோகத்தில் தனிக் கோயில்களே இல்லாமல் போகக்கடவதாகச் சபித்தார். அதனால்தான், பிரம்மாவுக்கு தனிக்கோயில்கள் ஏதும் இந்த உலகில் இல்லை. சோழர்கள் காலத்தில், தஞ்சைப் பகுதியில் ஒரே ஒரு கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரம்மா, சிவன், விஷ்ணு மூவரையும் சந்திக்கும் பிருங்கு முனிவர் சந்திக்கும் காட்சி

இறுதியாக, ஸ்ரீவிஷ்ணு, திருமகளுடன் உறையும் திருப்பாற்கடலுக்குச் சென்றார் பிருங்கு முனிவர். இறைவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். தான் வந்ததை விஷ்ணு பொருட்படுத்தவில்லையே என்று கோபம் கொண்டு, தனது பாதத்தால் அவரது நெஞ்சின் வலதுபுறத்தில் தனது பாதத்தை வைத்து அழுத்தினார். இதனைக் கண்ட இறைவன் எழுந்து, தங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன் என்றார். பிருங்கு முனிவர் இதை ஏற்றுக்கொண்டாலும், எனது பாதம் உனது நெஞ்சில் பதிந்துவிட்டது. இதனை மறைக்க, திருமகளை உனது மார்பில் உறைவதுபோல அதன் வடிவத்தை மாற்றி, திருமகளுடன் வாசம் புரிபவர் என்ற கருத்துடன் அனைவரும் வணங்குவதுபோல அமைவாய் என்று அருளினார்.

அதற்கேற்ப, விஷ்ணு சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இறைவனின் திருமார்பின் வலதுபுறத்தில் திருமகள் வாசம் புரிவதுபோல் ஒரு குறியீட்டுடன் படைக்கப்படுகின்றன. திருமாலை வணங்குபவர்கள் திருமாலின் வலதுபுறத்தில் வாசம் புரியும் திருமகளையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். லட்சுமிகடாட்சம் பெற, அனைவரும் இத்திருமாலையும் ஸ்ரீவத்சமாகத் திகழும் லட்சுமியையும் வணங்கினால்தான் செல்வச் செழிப்புடன் வாழலாம் என்ற கருத்தைப் புகுத்தினர். எனவே, இங்கு ஆண் கடவுளர்களுக்குத் துணையாக மட்டுமின்றி இணையாகவும் அமைத்து வழிபடும் காலம் இதன்வாயிலாக உருவானது எனலாம்.*3

சான்றெண் விளக்கம்

1. J.Marshall, Mohanjodaro and the Indus civilization Vol.I.

2. சிவபுராணம்.

3. Shridhar Iyyangar, Shrivishnu Sahasranamam, Dyana Sloka, Part-7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com