சமண சமய பெண் தெய்வங்கள் (தொடர்ச்சி)

தமிழகத்தில் கிடைத்த மிகவும் பழமையானதும், காலத்தால் முந்தையதுமானது, வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகே உள்ள திருப்பான்மலையில் காணப்படும் இயக்கியின் சிற்பமே ஆகும்.

சமண சமய மறுமலர்ச்சி

தமிழகத்தில் பொ.ஆ. 2-ம் நூற்றாண்டுக்குப் பிறகு மக்கள் உருவ வழிபாட்டில் தனிக்கவனம் செலுத்தத் துவங்கினர். அதன் வெளிப்பாடே, சமண சமயத்தைச் சார்ந்த மக்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களிலேயே தங்களது சமண சமயத்தைச் சார்ந்த தெய்வ உருவங்களைச் சிற்பமாகப் படைத்து, அதற்கென தனிக்கோயில்களையும் எழுப்பி, சிறப்பு பூஜைகளும் செய்யத் துவங்கினர் எனலாம். இந்தக் காலகட்டத்தில், தமிழகத்தில் சைவமும் வைணவமும் தங்களது சமயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பல வழிகளைக் கையாண்டன எனலாம்.

பொ.ஆ. 6-ம் நூற்றாண்டுக்குப் பிறகு சைவ, வைணவ குகைக் கோயில்களிலும், கட்டடக் கோயில்களிலும் பெண் தெய்வங்களை நிறுவி போற்றி வழிபடலானார்கள். இதற்கு இணையாக, சமண சமயத்து மக்களும் தாங்கள் ஏற்கெனவே வழிபட்டுவந்த பெண் தெய்வமான இயக்கியம்மனை தமிழக மக்களிடம் வெகுவாகப் பரவச் செய்ய முற்பட்டனர். வைதீகச் சமயங்களில் போற்றப்பட்ட பெண் தெய்வங்களும், சங்க காலத்திலிருந்து வழக்கத்தில் இருந்த தாய் தெய்வ வழிபாட்டையும், ஒருங்கிணைந்த தாய் தெய்வங்களைப் பல்வேறு வடிவங்களில், பல்வேறு பங்களிப்பாகவும், பயனளிப்பவையாகவும் மக்களிடம் கொண்டுசென்று பரவச் செய்தனர். அவ்வாறு வழிபாட்டில் இடம்பெற்ற வைதீக சமயத்துப் பெண் தெய்வங்களாக மகிஷாசுரமர்த்தினி, காளி, துர்க்கை, சப்தமாதர்கள், சேட்டை போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் அனைவரும், காலம் காலமாக நம் முன்னோர்கள் வழிபட்டுவந்த பெண் தெய்வங்களாகும். இவற்றையே நாம் ஒருங்கிணைந்த தாய் தெய்வ வழிபாடு என்று குறிப்பிடுகின்றோம்.

பெண் தெய்வங்களின் பெயர்கள், அதன் தோற்றம், செயல்பாடுகள் போன்ற அனைத்தும் மாறுபட்டாலும், இவை அனைத்தும் தாய் தெய்வ வழிபாட்டின் அடியொற்றியதே என்பதை அறிதல் வேண்டும். வைதீக மதங்களுக்கு இணையாக, சமண சமயத்திலும் இயக்கியம்மனை பல்வேறு வடிவில் அமைத்து, அவற்றை மக்களிடம் கொண்டு சர்க்க முற்பட்டனர் எனலாம். அவ்வாறு உருவான சமண சமயத்துப் பெண் தெய்வங்களாக சிலவற்றை மட்டும் மக்கள் மிகவும் சிறப்பு செய்து வழிபட்டதைக் காணமுடிகிறது. அம்பிகா, பத்மாவதி, சித்தாக்கியா, சக்கரேசுவரி, ஜீவாலாமாலினி போன்றோர், இவ்வகையில் சிறப்புக்கு உரியவர்களாக விளங்குகின்றனர். மேற்குறித்த இயக்கியம்மன்கள் தமிழக மக்களிடம் பரவலாக அறிமுகமானவர்கள் என்றால் அது மிகையல்ல.

தமிழகத்தில், இக்காலத்தில்தான் சமண சமயம் மறுமலர்ச்சி பெற்று, இயக்கியம்மன் வழிபாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது எனலாம். தமிழகத்தில், இக்காலத்தில்தான் பாண்டிய நாட்டிலும், தொண்டை நாட்டிலும், சமண சமயத்தைச் சார்ந்த இயக்கியம்மன் உருவங்களைத் தாங்கிய சிற்பங்கள் பலவற்றைக் காணமுடிகிறது என்பதால்தான், இக்கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

பல்லவர் காலத்து இயக்கியம்மன்

பொன்இயக்கியார் - அமர்ந்த கோலம்

தமிழகத்தில், சமண சமயப் பெண் தெய்வங்களின் சிற்பங்கள் நிறைந்த அளவு கிடைத்துள்ளன. அவை புடைப்புச் சிற்பங்களாகவும், பாறைகளைக் குடைந்து குகைச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டவையாகவும், கற்சிற்பங்களாகவும், செப்புப் படிமங்களாகவும், சுதை உருவங்களாகவும் காணக் கிடைக்கின்றன. இவ்வாறு, பல்வேறு வடிவில் சமண சமயப் பெண் தெய்வங்களான இயக்கியம்மன் திருவுருவங்கள், தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் கிடைத்த மிகவும் பழமையானதும், காலத்தால் முந்தையதுமானது, வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகே உள்ள திருப்பான்மலையில் காணப்படும் இயக்கியின் சிற்பமே ஆகும். இச்சிற்பம், புடைப்புச் சிற்பமாக பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சிறப்பு சர்க்கும் செய்தி என்னவெனில், அச்சிற்பத்தின் அருகிலேயே கல்வெட்டு ஒன்றும் வெட்டிவைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில், இச்சிற்பம் ‘பொன்இயக்கியார்’ என்று குறிக்கப்படுகிறது. இந்த இயக்கி எந்த தீர்த்தங்கரருக்கு உரியது என்பது தெளிவாக அறிய முடியவில்லை. இந்தப் புடைப்புச் சிற்பத்தின் காலம் (780) பொ.ஆ.8-ம் நூற்றாண்டு எனக் குறிக்கப்படுகிறது. பல்லவ வம்சத்தைச் சார்ந்த இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் தனது 50-வது ஆட்சி ஆண்டில் இச்சிற்பத்தை வெட்டியிருக்க வேண்டும் என்பர்*1. பல்லவர்கள் காலம் என்பதை உணர்வதற்காக, அருகிலேயே சிம்மத்தின் உருவமும், அதன் அருகில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

சிம்மத்தின் உருவம் - பல்லவர் சான்று

பொன்இயக்கியாரைக் குறிப்பிடும் திருப்பான்மலை - பல்லவர் காலக் கல்வெட்டு

அம்பிகாதேவி

தமிழகத்தில், கழுகுமலையில் அம்பிகாதேவியின் புடைப்புச் சிற்பம் அழகிய நேர்த்தியுடன் செதுக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அம்பிகா இயக்கியின் புடைப்புச் சிற்பங்கள், போதிய அளவுக்குத் தமிழகத்தில் காணக் கிடக்கின்றன. திருப்பான்மலை, ஆனைமலை, வள்ளிமலை, திருமலை, சித்தாமூர் போன்ற பல இடங்களில் அம்பிகா இயக்கியின் சிற்பங்களைக் காணலாம். அம்பிகாவின் செப்புப் படிமங்கள் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்த திருநறுங்கொண்டை, சேலம் மாவட்டம் ஆறகளூர், கடலூர் மாவட்டம் செங்கேனிகுப்பம், திருவண்ணாமலை மாவட்டம் அறும்பாளூர் போன்ற இடங்களில் காணக் கிடைக்கின்றன. இச்சிற்பங்களில், அம்பிகா சிற்பம் கற்பகவிருட்ச மரத்தின் அடியில் நின்ற நிலையிலும், சுகாசனத்தில் அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறது. இவரது வாகனமாக சிம்மம் காட்டப்பட்டுள்ளது. அருகில், அவளது இரண்டு குழந்தைகள் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளதையும் காணலாம்.

கழுகுமலை அம்பிகா இயக்கி

*

தமிழகத்தில் காணப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த சமணச் சிற்பங்களைக் கொண்ட இடம் கழுகுமலையாகும். அதன் பழைய பெயர் பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம் என்பதாகும். இவ்வூர்க் கல்வெட்டுகளில், ‘இராஜஇராஜப்பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு நெச்சுறநாட்டு நெச்சுறம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இங்கு வடிக்கப்பட்டுள்ள சமணச் சிற்பங்கள் மிகவும் அழகுடனும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள், தீர்த்தங்கரர்கள் சிற்பமும் அம்பிகா சிற்பமும் சிறப்பானதாகும்.*2. பல சமணத் துறவிகள் இங்கு தங்கி வழிபட்ட சமணத் தலமாக இது விளங்கியுள்ளது. கழுகுமலையில், பாறையில் புடைப்பச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ள அம்பிகாவின் சிற்பம் கலையழகு கொண்ட ஒன்றாகும். நின்ற நிலையில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அம்பிகாவுக்குக் கீழே இரண்டு குழந்தைகள் காட்டப்பட்டுள்ளனர். சுமார் 8-ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட இச்சிற்பம், தமிழக சமண அம்பிகா இயக்கி கற்சிற்பங்களுக்கு ஓர்  எடுத்துக்காட்டாகும். பொ.ஆ. 8-ம் நூற்றாண்டு முதல் 300 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் சமணம் தழைத்தோங்கியுள்ளது.

தமிழக சமண சமயத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் கே. அஜீத்தா தாஸ் குறிப்பிடும்போது, தமிழக சமண மதத்தில் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்ட இயக்கியம்மன்கள் சிலரே என்றும், அவர்களுள் அம்பிகா, பத்மாவதி, ஜீவாலமாலினி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சக்கரேஸ்வரிக்கும் சில இடங்களில் தனி ஆலயம் அமைத்து வழிபட்டுள்ளதைக் காணமுடிந்தது. பொதுவாக, அம்பிகா இயக்கியம்மன் பெரும்பான்மையான சமணத் தலங்களில் செப்பப் படிமமாகவோ அன்றி கற்சிற்பமாகவோ வைத்து வணங்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.*3

சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் தனது செல்வாக்கை இழந்தவுடன், இயக்கியம்மன் வழிபாடு பெயரளவில் மறைந்தாலும், அவை தமிழகக் கிராமங்களில் நாட்டார் வழக்காக மீண்டும் புத்துயிர் பெற்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்று, வழிபாடுகள் தொடர்ந்து வருவதை இன்றும் கிராமங்களில் நாம் காணலாம்.

கழுகுமலை – அம்பிகா இயக்கியம்மன் - தோழி மற்றும் தன் மக்களுடன்

சமண சமயத்தில் இயக்கி வழிபாடு

சமண சமயத்தில் இயக்கி வழிபாட்டை ஏற்றுக்கொள்ள சில காரணங்கள் உள்ளதாகக் கருத்தப்படுகிறது. அதாவது, தீர்த்தங்கரர்களும் புத்தரும் முற்றும் துறந்தவர்கள். இவர்களிடம் தமது ஆசைகளையும், குறைகளையும் கூறி எந்தப் பயனையும் பெற இயலாது என்று மக்கள் கருதினர். எனவேதான், மக்கள் தங்களது குறைகளைச் செவிமடுக்கும் தாய் தெய்வங்களிடம் முறையிட்டனர். இப்பெண் தெய்வங்கள் தங்களது குறைகளைப் போக்கி, தாங்கள் வேண்டியதை இவர்களிடம் கேட்டுப் பெறவும் முடியும் என்ற நம்பிக்கையால், பெண் தெய்வங்களான இயக்கியம்மன் வழிபாடு மக்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வமாக மாற்றம் பெற்றது. எனவே, சமணம் போன்றே பிற சமயங்களும் தங்களது சமய வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருக்கும் என இப்பெண் தெய்வத்தை ஏற்றுக்கொண்டனர். அதன் அடிப்படையில்தான், சமண சமய இயக்கியர் திருவுருவங்கள் அதிகரிக்கத் துவங்கின. பொ.ஆ. 8-ம் நூற்றாண்டு திருப்பான்மலையில், பொன்இயக்கியார் புடைப்புச் சிற்பம், நாகநந்திக்குரவர் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், திருமலையில் இயக்கியின் உருவம் செய்யப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களுக்குத் தனியாக இயக்கியர்களையும் படைத்துள்ளனர். தமிழகத்தில் இயக்கியம்மன்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டும் வகையில் அமைப்பட்டுள்ளன.

திருமலை - இயக்கியம்மன் புடைப்பச் சிற்பம்

தீர்த்தங்கரர் சிற்பங்களைச் செய்யும்போதே இயக்கியம்மன் சிற்பங்களையும் அமைத்துள்ளனர். இயக்கன் உருவத்தை வலப்புறமும், இயக்கி உருவத்தை இடப்புறமும் அமைத்தனர். இதற்கென தனியாக சிற்பக்கலை அமைப்புகள் தனியாக இல்லாமையால், தீர்த்தங்கரர்களின் இடப்புறத்தில் அமைப்பதை ஆரம்பக் காலகட்டத்தில் பின்பற்றினர். வடஇந்தியாவில், குறிப்பாக பிகார் போன்ற மாநிலங்களில் இயக்கியம்மனை வலப்புறம் அமைத்துள்ளனர். சிற்ப அமைப்பில் எவ்வித மரபையும் பின்பற்றாத நிலையில், இவ்வாறு தாங்கள் இடப்புறமும், வலப்புறமும் அமைத்துக்கொண்டனர். இயக்கியம்மன் வழிபாடு சிறப்புபெற்ற நிலையில், பல இடங்களில் இயக்கியம்மனுக்குத் தனியாகக் கோயில்கள் எடுப்பித்தலும், சிறப்புப் பூஜைகளும் பெருகின. பின்னர், பொ.ஆ. 8-9-ம் நூற்றாண்டுக்குப் பிறகு, இயக்கியம்மன் திருவுருவங்களை இடப்புறமே அமைத்தல் வேண்டும் என திட்டவட்டமாகச் செயல்பட்டுள்ளனர்.*4

தமிழகத்தில், ஆரம்பக் காலகட்டங்களில் செய்யப்பெற்ற இயக்கியம்மன்கள் திருவுருவங்கள் பெரும்பாலும் எளியமுறையில் வடிக்கப்பட்டன. பின்னர், இயக்கியரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் தெளிவான முறையில் அமைக்கப்பட்டன. அதற்குச் சான்றாக கழுகுமலை, சிதறால் போன்ற சிற்பங்களைக் குறிக்கலாம்.

24 தீர்த்தங்கரர்களும், இயக்கியம்மன்களும்

தமிழகத்தில், திகம்பரப் பிரிவுச் சமணமே செல்வாக்கு பெற்று விளங்கியது. அவர்களது வழிபாட்டு முறையின் அடிப்படையிலேயே இயக்கியம்மன் உருவங்களும் படைக்கப்பட்டன. சமண சமயத்தில் காணப்படும் இயக்கியர்களும், அவர்களுக்குரிய மூலதெய்வங்களையும் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளது.*5

மேற்குறித்த 24 தீர்த்தங்கரர்களின் சாசனா தெய்வங்களாக விளங்கியவர்கள்தான் இங்கு தீர்த்தங்கரர்களுக்கு எதிரே குறிக்கப்பட்டுள்ள இயக்கியம்மன்கள் ஆகும். தமிழகத்தில், தாய் தெய்வ வழிபாடு சிறப்புற்றிருந்த நிலையில், சமணப் பெண் தெய்வங்களான இயக்கியம்மன்களும் மக்கள் மனதில் இடம்பிடித்தனர் எனலாம். எனவேதான், தமிழகத்தில் இயக்கியம்மன்கள் வழிபாடும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தீர்த்தங்கரர்களைக் காக்கும் இந்த சாசனா தெய்வங்கள் மிகவும் வலிமையுடையவை என மக்கள் கருதினர். ஏனெனில், இறைவனையே காக்கும் காவல் தெய்வங்களாக விளங்கி, அவருக்கு வரும் இன்னல்களை அகற்றி மனஅமைதியுடன் இருக்க தீர்த்தங்கரர்களுக்கு உதவி புரிந்தமையால், இவ்வியக்கி பெண் தெய்வங்களான காவல் தெய்வங்களை, மக்களும் தங்களது இன்னல்களையும் போக்குவார்கள் என்ற கருத்துடன் போற்றி வழிபடத் துவங்கினர்.

தமிழகத்தில் காணப்பட்ட 24 தீர்த்தங்கரர்களின் இயக்கியம்மன்கள் அனைவரும் சிறப்பான இடத்தைப் பெறமுடியவில்லை. அவற்றில் ஒரு சில இயக்கி பெண் தெய்வங்களே மிகவும் சிறப்பான இடத்தையும், பல இடங்களில் தனிக்கோயில்களும், கற்சிற்பங்களும், செப்புப் படிமங்களுமாக வைத்து வழிபட்டுவந்துள்ளதைக் காணமுடிகின்றது.

அடுத்து, தமிழகத்தில் வணங்கப்பட்ட சமண பெண் தெய்வங்களான இயக்கியம்மன்களும், அவற்றின் சிறப்புகளையும், அவை சிற்பங்களாகவும், செப்புப் படிமங்களாகவும் காட்சி அளித்ததைப் பற்றியும் தொடர்ந்து காண்போம்.

(தொடரும்)

சான்றெண் விளக்கம்

  1. Epigrapica Indica, IV pp.136-137.
  2. A.R.E., 251- 1936-37.
  3. T.S.Subramanian and V.Vedachalam, icons of grace, Frontline, Vol.29. Issue 11, jun 2-15, 2012,
  4. P.B.Desai, Jainism in South India., pp.88.
  5. ச. செல்வராஜ், தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும், பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், 2014.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com