சுடச்சுட

  

  பெருங் கற்காலப் பண்பாட்டில் தாய் தெய்வங்கள்

  By ச. செல்வராஜ்.  |   Published on : 06th July 2017 04:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தென்னிந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் குழுக்கூட்டமாக வாழத் துவங்கினர் எனலாம். தமிழகத்தில் கோவை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய கற்கால மக்களுக்குப் பின்னர், பெருங் கற்கால பண்பாட்டைச் சார்ந்த மக்கள் பரவலாக ஆங்காங்கே குழுக் கூட்டங்களாக வாழ்ந்துள்ளனர் என்பது தொல்லியல் மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

  மோதூர் (தருமபுரி மாவட்டம்)*1, மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி மாவட்டம்)*2, பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்)*3 போன்ற இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் காணப்பட்ட மண்ணடுக்குகளில், பண்பாட்டுத் தொடர்ச்சியை தெள்ளத்தெளிவாகக் காண முடிகிறது. பெருங் கற்கால பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் சைவ சமயத்தோடு தொடர்புடையவை என்பது அவர்கள் அமைத்த நினைவுச் சின்னங்களைக் கொண்டு அறியமுடிகிறது. மேலும், இவை வழிபாட்டோடும், சடங்குகளோடும் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. பெரிய பெரிய கற்களைக் குத்திட்டு நிற்கவைத்து அதனை குத்துக்கல் என்றும், அதனைச்சுற்றி வட்டமாகக் கற்களை நட்டும் அமைத்துள்ளனர். இதனை கல்வட்டம், கற்குவை என்று அதன் அமைப்பை வைத்து ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைத்தனர். வட்டமாக காணப்பட்டதால் கல்வட்டம்; நெடுங்குத்தாக நடப்பட்டதால் குத்துக்கல் என்றும் குறித்தனர்.

  குத்துக்கல் - லிங்க வழிபாடு

  குத்துக்கல் நினைவுச் சின்னமே லிங்க வழிபாட்டின் ஆரம்பகால (Primitive Stage)  வழிபாட்டின் தோற்றமாக இருந்திருத்தல் வேண்டும்*4. தமிழகத்தில் காணப்படும் குத்துக்கல் வகையை நன்கு ஆய்வு செய்தால் அதன் உண்மை புலப்படும். தேவனூர் குத்துக்கல், நன்கு செதுக்கப்பட்ட நீள்செவ்வக வடிவில் அமைக்கப்பட்ட ஒன்று. இதன் தலைப்பகுதி அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டிருக்கும். இதனை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் லிங்க வடிவத் தோற்றத்தையே அதில் காணமுடியும். இந்த வகை குத்துக்கற்களே நடுகல் வகையின் தோற்றம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

  தமிழகத்தில் கிடைத்த குத்துக்கல் நினைவுச் சின்னங்களில் தேவனூர் குத்துக்கல்தான், மனித வேலைப்பாடு அதாவது குத்துக்கல்லை நேர்த்தியாகச் செதுக்கி அதனை ஒழுங்கான வடிவில் அமைத்து அதற்கு உருவம் அளித்த முதல் பெருங் கற்கால நினைவுச் சின்னமாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இதன் தலைப்பகுதி அரைவட்ட வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய காலகட்டங்களில் நடப்பட்ட குத்துக்கற்கள் ஒழுங்கற்றதாகவும், அடிப்பகுதி பருத்தும் மேல்பகுதி சிறுத்தும் காணப்படும். இதுவும் லிங்க வடிவின் முதன்மைத் தோற்றம் என்று கொள்ளலாம். எனவே, லிங்க வடிவ அமைப்பு, ஆவுடையார் அமைப்பு இரண்டும், முறையே குத்துக்கல்லும் அதனைச் சுற்றி அமைந்த கல்வட்டமுமே என்பதில் ஐயமில்லை.{pagination-pagination}

  எனவே, பெருங் கற்காலப் பண்பாட்டு நினைவுச்சின்னங்களில் காணப்படும் குத்துக்கல் அமைப்பு, லிங்க வழிபாட்டு முறையினை எடுத்தியம்புவதாகவே கருதலாம். கற்குவை, கல்வட்டங்கள் போன்றவை ஆவுடையாரைக் குறிப்பதாகவே இருத்தல் வேண்டும். இக்கருத்தை வலியுறுத்துவதுபோல், லிங்க வழிபாடானது உழவுத்தொழில் மேற்கொண்டிருந்த பல புராதன நாகரிகங்களில் காணப்படும் வழிபாட்டு முறையாகும். நீண்டு குவிந்த கல்வடிவம் ஆண்குறியின் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்து காணப்படும் வட்டக் கல்வடிவம் பெண்குறியின் அடையாளமுமாகவே முன்னோரால் கருதப்பட்டது என மறைமலையடிகள் குறிப்பிடுகின்றார்*5.

  பெருங் கற்காலப் பண்பாட்டு நினைவுச்சின்னங்களில் காணப்படும் மனித உருவ அமைப்பை (Anthromorphic Menhir) தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடி என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.*6 எனவே, சிவ வழிபாடும், சக்தி வழிபாடும் அதாவது பெண் தெய்வ வழிபாடும், நம் முன்னோடிகளான பெருங் கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த மூதாதையர்களின் சடங்குகளும், வழிபாட்டின் முன்னோடிகளே என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவற்றின் வழியாக, பொ.ஆ.மு.1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சைவ வழிபாட்டில் தமிழர்கள் நாட்டம் கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது. கொடுமணல், திருமல்வாடி, தேவனூர் போன்ற குத்துக்கல் அமைப்புகளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

  பெண் தெய்வ வழிபாட்டிலும் முதன்மையாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு, மோட்டூர், உதயநத்தம் போன்ற இடங்களில் காணப்பட்ட ஒரு பெண்ணின் (தாய்) உருவ அமைப்பு உடைய குத்துக்கல்லைக் குறிப்பிடலாம்*7. தமிழக மக்கள் தமக்கென அமைத்த தெய்வ வழிபாட்டு முறையினையே பெரும்பாலும் கடைப்பிடித்து வந்தனர் என்பதை சங்க கால இலக்கியங்களும், அகழாய்வுச் சான்றுகளும் இக்கருத்துக்குத் துணைபுரிகின்றன.

  கொற்றவை

  கொற்றவை, முருகன் போன்ற பழமையான தெய்வங்களை சங்க கால மக்கள் வணங்கி வந்துள்ளனர். கொற்றவை, நம் தமிழ் மக்களின் வெற்றித் தெய்வமாகப் போற்றப்படுபவள். முருகன், மலையும் மலைசார்ந்த இடங்களிலும், வேட்டுவ மக்களாலும் போற்றப்படுபவர். “மாயோன் மேய காடுறை உலகம்” என்கிறது தொல்காப்பியம்*8. கொற்றவை, முருகன் ஆகிய பழந்தெய்வங்களோடு நாகரிகக் கலப்பின் பயனாக, சில பழைய தெய்வங்கள் புதிய உருவிலும், சில புதிய தெய்வங்கள் பழைய உருவிலும் தோன்றுவதைக் காணலாம். அதனால்தான் வேலவன், வேட்டுவக் கடவுளாகத் திகழ்ந்தான். நமது வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, ஆரம்ப கால மக்கள் வேட்டையாடியதையும், உணவு கிடைத்த மகிழ்ச்சியில் ஆடிப்பாடியதையும் இயற்கையான ஒன்று. ஆடிப்பாடியது பின்னர் கூத்தாகவும் ஆடலாகவும் பரிணமித்தன எனலாம். உண்மை வாழ்க்கையில் செய்யும் ஒன்றை அபிநயத்துச் செய்து பார்க்கும்போது, மனதில் எழிச்சியும், துணிவும், களிப்பும் ஏற்படும். தன் சக்திக்கு மீறிய செயலைச் செய்யும்போது, தன்னிடம் அபார சக்தி இருப்பதாக நம்பினான். அதன் அடிப்படையில் தோன்றியதே வேட்டுவக் கடவுள் என்று போற்றப்படும் வேலவன் ஆகும்.

  அன்னை அல்லது பெண் தெய்வம், பிற்காலத்தில் தோன்றிய சக்தியைத் தோற்றுவித்த மூலப்பொருளின் முதல் உரு ஆகும். அவளுடைய பிரதிநிதிகளே கொற்றவையும் பிற கிராம தேவதைகளும். கிராமங்களில் வழிபடும் பெண் தெய்வங்களும், கிராம தெய்வங்களின் வரிசையில் இடம்பெறுகின்றன. தீப்பாய்ஞ்சம்மன், தீப்பாய்ஞ்ச நாச்சியார், அரியக்கா, பெரியக்கா போன்ற கிராம தெய்வங்களை (இத்தெய்வங்கள் குறித்து தனியாக விவரிக்கப்பட உள்ளது) இன்றைக்கும் போற்றி வழிபட்டு வருகின்றனர். இவற்றை, நம் தாய் தெய்வ வழிபாட்டின் ஓர் அங்கமாகவே கருதலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராம தெய்வங்களாக பெண் கடவுளையே போற்றி வணங்கி வருகின்றனர் என்பது ஆய்வின் தெளிவு ஆகும்.{pagination-pagination}

  சிந்துவெளி நாகரிகத்துடன் பெண் தெய்வ வழிபாடு மறைந்துவிடவில்லை. இப்பண்பாடு நீண்ட இடைவெளிக்குப் பின்னரும் இந்தியாவில் தொடர்கிறது. இதனைப்பற்றி ஏரன்பெல்ஸ் கூறும்போது, இந்தியாவில் ஆதிவாசிகள் வணங்கிய பெண் தெய்வங்களாக நீண்ட பட்டியலைத் தருகிறார். அவற்றில் குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்களாக பிலிமக்கா, புடுபுடுக்கி, கொல்லா, அத்தி, ஏலவை, இதிகை என்று நீண்டுகொண்டே செல்கிறது*9. இதன் அடிப்படையில், பழந்தமிழரது தலையாய தெய்வம் பெண் தெய்வமே என்பதில் ஐயமில்லை.

  சங்க இலக்கியங்களில் பல இடங்களில், கொற்றவை வழிபாட்டு முறை குறிப்பிடப்படுகிறது. இவற்றையெல்லாம் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலப் பண்பாட்டில் காணப்படும் தாய் உருவ வடிவில் (Anthromorphic Menhir)  காணப்படும் ஒருவகைக் குத்துக்கல், தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடி என்பதை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். இக்கருத்தை நாகசாமி அவர்கள் கூறும்போது, தமிழகத்தில் காணப்படும் தாய் உருவ வடிவில் காணப்படும் நினைவுச்சின்னம், பெண் தெய்வ வழிபாட்டின் முதன்மைச் சான்று என்றும், இந்தியாவில் பிற இடங்களில் காணப்படுபவை இவற்றின் தொடர்ச்சியே என்று கூறுகின்றார். ஐரோப்பிய தேசமான இத்தாலி நாட்டில், சார்டினியா (Sardinia) என்ற இடத்தில் மனித உருவில் காணப்படும் நினைவுச்சின்னத்தை, பெண் தெய்வ வழிபாட்டின் முன்னோடி என குறித்துள்ளார். இதன் காலம், பொ.ஆ.மு. 1700.

  மேலும், ஆந்திராவில் கோதாவரி ஆற்றுப்படுகையில் இரண்டு உருவங்கள் கண்டறியப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் செம்பு உலோகத்தால் ஆன இத்தகைய கிடைத்துள்ளது. இதனை வேத காலத்து பெண் தெய்வமான அதிதி எனக் குறிப்பிடுகிறார் நாகசாமி. அதிதியை, லண்டன் மக்கள் இந்திய நாட்டுத் திருவிழா அமைப்பில் காட்சிப் பொருளாக வைத்து பெண் தெய்வமாக வழிபடுகின்றனர். தமிழக செப்புத் திருமேனிகளில் விஷ்ணுவின் இடப்பாகத்தில் காணப்படும் ஸ்ரீவத்ஸம், பெண் தெய்வமான லட்சுமியைக் குறிப்பதாகும். இவ்வாறு, தாய் தெய்வ வழிபாடு என்பது பண்டைக் காலம் தொடங்கி, பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று, இன்று ஆண் பாதி - பெண் பாதி என்று சிவனும் சக்தியும் ஒன்று என்ற அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம்.

  சங்க இலக்கியங்களையும், அகழாய்வுச் சான்றுகளையும் ஒப்பிட்டு, தென்னிந்தியாவிலேயே சைவ சமய வளர்ச்சி நிலையை ஆராய்ந்த நூல் ஒன்றை சி.வி. நாராயண ஐயர் எழுதியுள்ளார். அவர் குறிப்பிடுவதாவது - “தொல்காப்பியத்தில் வேத காலத் தெய்வங்கள் சில மதிப்போடு கூறப்படுவதிலிருந்தே, மக்கள் மத்தியில் அவை எவ்வளவு தூரம் இடம்பெற்றிருந்தன என்பது புலனாகிறது. மக்கள் புதிய தெய்வங்களில் நம்பிக்கை கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால் அதே சமயத்தில், காலம் காலமாக நமது முன்னோர்கள் வழிபட்டு வந்த வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும், பழைய முறையிலேயே வழிபட்டனர்.*10

  நடுகல் வழிபாடும் நம்பிக்கைகளும்

  நடுகற்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் இருந்தும், தொல்காப்பியம், புறப்பொருள், வெண்பா மாலை போன்ற இலக்கண நூல்களில் இருந்தும் நாம் அறிகிறோம். ஆநிரைகளைப் பாதுகாக்கவும், தன் மன்னனைப் பாதுகாக்கவும் போர் செய்து உயிர் நீத்தவர்களுக்கு நடுகல் நாட்டி அதனை பண்டையத் தமிழ் மக்கள் வணங்கி வந்தனர்.{pagination-pagination}

  பெருங் கற்காலப் பண்பாடு, வரலாற்றின் துவக்க காலமாகக் கருதப்படுகிறது. அகழாய்வுகளில் கிடைத்த பெருங் கற்கால நினைவுச் சின்னங்களில் ஏராளமான குறியீடுகளும், தமிழ் எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டுதான், இக்காலத்தை வரலாற்றுக் காலத்தின், அதாவது சங்க காலத்தின் துவக்க காலம் எனக் குறிப்பிடுவர். இலக்கியங்களில், பெருங் கற்காலப் பண்பாட்டு புதைகுழிகள், அதன் அமைப்புகள் பற்றிய பல்வேறு செய்திகள் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் “தொடுவோர், சுடுவோர், புதைகுழிப்படுவோர்” என முறைப்படுத்தியமையும் அவை சுட்டுகின்றன. எனவே, பெருங் கற்கால மக்கள் சடங்குகளையும், வழிபாட்டையும் முறையாகக் கடைப்பிடித்தனர் என்பது தெளிவாகிறது. மேலும், இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவர் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் மேலோங்கி இருந்துள்ளது.

  இவை அனைத்தும், பெருங் கற்கால மக்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதும், அதன் தொடர்ச்சிதான் குத்துக்கல் வகை அமைப்பாக வெளிப்பட்டுள்ளதும் அறியமுடிகிறது. இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பெருங் கற்கால மக்கள் தாய் தெய்வ வழிபாட்டைப் போற்றியுள்ளனர் என்பதற்கு, மனித உருவ (தாய்) வடிவில் காணப்படும் குத்துக்கல் வகையே சான்றாகும். மனித உருவ வடிவில் காணப்படும் இவ்வகை குத்துக்கல் சக்தி வழிபாடாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இடுதுளைகள் வழிபாட்டின் எச்சம் ஆகும். சடங்குகளையும் பூசைகளையும் இவர்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது இதன்வாயிலாகத் தெளிவாகிறது. சைவ சமயத்தின் அடிப்படையில்தான் பண்டைய தமிழ் மக்கள் நினைவுச்சின்னத்தை அமைத்துள்ளனர். மேலும், அவற்றை வளமைச் சடங்காகவும் கருதியதால், அந்த இடத்தை வணங்கி வழிபட்டுள்ளனர். எனவேதான், காலம்காலமாக அந்நினைவுச்சின்னங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதையும் அறியமுடிகிறது.

  குத்துக்கல் வகையை பெருங் கற்காலப் பண்பாட்டின் இறுதி நிலை என்று கருதலாம். ஏனெனில், குத்துக்கல் வகையின் வளர்ச்சி நிலையே நடுகல் ஆகும். குத்துக்கல்லில் வீரனின் உருவம் பதித்தனர். பின்னர் அவரது பீடும் பெயரும் எழுதப்பட்டது என இலக்கியங்கள் பகருகின்றன. எனவே, தொடர்ந்து உருவ வழிபாடும் தோன்றியது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்த குடிமல்லம், புகழ்வாய்ந்த ஒன்று. இங்கு காணப்படும் உருவ வடிவிலான லிங்கம், நடுகல் வகையைச் சார்ந்தது எனலாம். இதனை, வீரனுக்குரிய நடுகல் என ஐ.கே. சர்மா குறிப்பிடுகிறார். இங்கு அவர் மேற்கொண்ட அகழாய்வில், இச்சிற்பத்துக்கு அடியில் எலும்புகள் இருப்பதைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இது போர் வீரன் ஒருவனுக்காக எடுப்பித்த வீரக்கல். குத்துக்கல் என்பது சிவ வழிபாடு தொடர்புடையது என்பதையும், அவை லிங்கத்தின் முன்னோடி என்பதையும், குடிமல்லம் குத்துக்கல் வகை நடுகல் நிரூபித்துள்ளது எனலாம்.

  குடிமல்லம் – நடுகல் சிற்பமும், சிவன் கோயிலின் தோற்றமும்

  ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைய காலம்தொட்டு லிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்கால சைவ சித்தாந்த சாத்திர நூல்களால் அறியமுடிகிறது.

  “சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம்

  ஓத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாக

  ஐவத்தனன் அவளால் வந்த ஆக்கம் இல்லாழ்க்கையெல்லாம்

  இத்தையும் அறியார்பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்.”

  என்று சொல்கிறது சிவஞானசித்தியார்.*11

  {pagination-pagination}தத்துவ விளக்கத்தோடு உரைப்பது தொன்றுதொட்டு வந்த உண்மையே என்பதில் ஐயமில்லை. இவற்றில், வளமைச் சடங்கின் அடிப்படையில், அதற்குரிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி அமைத்துள்ளதை ஆழமாகச் சிந்தித்து உணர்தல் வேண்டும். மனிதனின் வாழ்க்கையோடு இணைந்ததுதான், சமயமும் சடங்குகளும் வாழிபாடுகளும் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். இத்தத்துவத்தின் விளக்கமே, தாய் தெய்வத்தின் பல்வேறு திருவுருவங்கள் ஆகும்.

  தமிழகத்தில் காணப்படும் தொடர்ச்சியான தாய் தெய்வத் திருவுருவங்கள், அதன் தனித்தன்மையை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. தாய் தெய்வத்தின் வெவ்வேறு வடிவங்களில் பெயர் வேறுபடினும், அதன் உள்கருத்து, நாட்டின் வளமையை அடிப்படையாகக் கொண்டதே எனலாம். அத்தகு சிறப்பினைப் பெற்ற தாய் தெய்வங்கள், எந்தெந்த உருவில் வலம்வந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அமைதியை வழங்கி, தனிமனிதனையும், நாட்டையும் மகிழ்வித்தன என்பதை பின்னர் வரும் அத்தியாயங்களில் காணலாம். அடுத்து, உலக நாடுகளில் தாய் தெய்வங்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டுள்ளன என்பதைக் காண்போம்.

  சான்றெண் விளக்கம்

  1. S. Selvaraj - Excavations at Modhur - 2004.

  2. K. Rajan - Excavationas at Mayiladumparai.

  3. Ancient India - Vol.II

  4. P.R. Srinivasan, Beginning of the Traditions of South Indian Temple Architecture.

  5. மறைமலையடிகள் - சைவ சித்தாந்த ஞானபேதம்.

  6. நாகசாமி - தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி, 10.09.1990.

  7. Magdalena S. Midgley. Monuments and Monumentality: The cosmological Model of the World Megaliths, Documenta Praehistorica xxxvii, 2010

  8. தொல்காப்பியம்.

  9. O.R. Ehrenfels - Mother rights in India, pp.79-80.

  10. C.V. Narayana Iyyar, Origin and early History of saivisim in South India.

  11. க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai