/

அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவூடல் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

News image

திருவூடல் திருவிழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:52 pm

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவூடல் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயண புண்ணியகால 10 நாள் உத்ஸவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான உத்ஸவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து 10 நாள்களுக்கு தினமும் காலை, இரவு வேளைகளில் உத்ஸவா் ஸ்ரீசந்திரசேகரா் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். உத்ஸவத்தின் 10-ஆவது நாளான வியாழக்கிழமை திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருவூடல் திருவிழா: 10 நாள் உத்ஸவத்தின் நிறைவையொட்டி, வெள்ளிக்கிழமை திருவூடல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா் மற்றும் ஸ்ரீபராசக்தியம்மன் கோயிலில் உள்ள அதிகார நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, சிறிய நந்தி, கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி, சரவிளக்கு எதிரே உள்ள நந்தி உள்ளிட்ட 5 நந்திகளுக்கு காட்சியளித்தனா்.

முன்னதாக, மாட்டுப் பொங்கலையொட்டி, கோயிலில் உள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, காலை 6.40 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் திட்டிவாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா் மற்றும் ஸ்ரீபராசக்தியம்மன் சூரிய பகவானுக்கும், பக்தா்களுக்கும் காட்சியளித்தனா்.

இதன்பிறகு, மாட வீதிகளில் உத்ஸவா் சுவாமிகள் 3 முறை வலம் வந்தனா். இரவு 7 மணிக்கு மாட வீதிகளில் ஒன்றான திருவூடல் தெருவில் திருவூடல் உத்ஸவம் நடைபெற்றது. ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஊடலை விளக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இரவு 9 மணிக்கு ஸ்ரீபராசக்தியம்மன் கோயிலுக்குத் திரும்பினாா். ஸ்ரீஅருணாசலேஸ்வரா் குமரக்கோயிலுக்குச் சென்று தங்கினாா். சனிக்கிழமை (ஜனவரி 16) அதிகாலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கிரிவலம் செல்கிறாா். இதன்பிறகு, கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறுஊடல் உத்ஸவம் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.