அரசு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட...
அரசு வங்கிகளில் வாராக் கடன், மறு சீரமைக்கப்பட்ட கடன் என நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சொத்து மதிப்பு ரூ. 7 லட்சம் கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.


டி.எஸ்.ஆர். வெங்கட்ரமணா
அரசு வங்கிகளில் வாராக் கடன், மறு சீரமைக்கப்பட்ட கடன் என நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சொத்து மதிப்பு ரூ. 7 லட்சம் கோடிக்கும் மேல் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வாராக் கடன் என்று கூறப்பட்டாலும் அவ்வாறு குறிப்பிடப்படும் தொகை முழுவதும் திரும்பக் கிடைக்காது என்று கூறிவிட முடியாது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வட்டியும் முதலும் உரிய காலத்தில் வராவிட்டால், வங்கியின் நிதி ஆரோக்கிய நிலை தொய்வடைகிறது.
வாராக் கடன் என்பது அரசு வங்கிகளில் மட்டும்தான் உள்ளதா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.
சில அரசு வங்கிகளின் மொத்த சொத்து மதிப்பைவிட அதிக சொத்துள்ள ஒரு சில தனியார் வங்கிகளில் இதுபோல வாராக் கடன் பிரச்னை இல்லையே, ஏன்?
இந்தக் கேள்விக்கு "அரசு வங்கிகளின் நிர்வாக முறை' என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.
பொதுத் துறை வங்கிகளுக்கும் நிர்வாகக் குழு உள்ளது. ஆனால் இந்தக் குழு முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகிறதா என்பதுதான் பிரச்னை.
முடிவுகள் எடுப்பதில் வங்கிகளின் நிர்வாகக் குழுக்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனவா? கடன் அளிப்பிலும், கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் பொதுத் துறை வங்கிகள் கண்டிப்புடன் நடந்து கொள்ள முடிகிறதா?
அரசு சார்ந்த திட்டச் செலவுகளுக்குப் பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் அளிக்க வேண்டியுள்ளன.
அந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருவது தாமதமானால், கொடுத்த பணம் திரும்பும் வரையில் வங்கிகள் காத்திருப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.
"வேண்டப்பட்ட' தொழிலதிபர்களுக்கு கடன் அளிப்பதும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
முக்கியஸ்தர்களுக்கு "வேண்டப்பட்டவர்' என்கிற பாதுகாப்பு நாட்டில் நிறைய பேருக்கு இருக்கிறது. வழங்கப்பட்ட கடன் தொகைக்கு முழுமையான, உரிய பாதுகாப்பு இருந்தாலும், "வேண்டப்பட்டவர்' என்ற பாதுகாப்பே சற்று தூக்கி நிற்கிறது.
வங்கிகளை தேசியமயமாக்கி 40 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், அந்த முடிவு வெற்றி அடைந்துள்ளதா என்றால் முற்றிலும் இல்லை என்பதுதான் பதில்.
எளியவர்களின் பணத்துக்கு பிளேடு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு என்பதுடன், கிராமப்புறங்களில் நிதி வசதி கிடைக்கச் செய்தல், விவசாயிகளுக்கு கடன் வசதி அளித்தல், சிறு தொழில்களுக்கு கடன் அளித்தல் போன்றவை தேசியமயமாக்கலுக்குப் பிரதானமான காரணங்களாக அன்று கூறப்பட்டன.
ஆனால் ஐயத்துக்கு இடமில்லாமல் இந்த நோக்கம் நிறைவேறியுள்ளதா என்றால், இல்லை.
கிராமப்புறங்களில் முழுத் திறனுடன் பொதுத் துறை வங்கிகள் செயல்பட்டனவா, என்றால் இல்லை.
கிராமப்புற மக்கள் பெருவாரியாக வங்கி அமைப்பில் இணைந்திருந்தனரா என்றால், அதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட அனைவருக்குமான வங்கி சேவைத் திட்டமான "ஜன்தன்' நடைமுறைக்கு வந்த பிறகுதான் ஏராளமான புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
வங்கிகளை தேசியமயமாக்குவதற்குத் தெரிவிக்கப்பட்ட காரணங்களில் ஒன்றான வங்கி சேவைகளைப் பரவலாக்குவது இத்தனை காலம் காகித அளவிலேயே இருந்தது.
வங்கி விவகாரங்களில் நிபுணத்துவம் உள்ளவர்கள்தான் வங்கியை தினசரி அளவில் நிர்வகிக்கிறார்கள் என்றாலும் அது பிரதானமாக அரசு - அரசியல் விருப்பங்களுக்கு உள்பட்டுதான் செயல்பட வேண்டியிருக்கிறது.
சமூக மேம்பாட்டை முன்னிட்டு கடன் அளிப்பு, முதலீடு போன்ற நிதி சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேசியமயமாக்கலின் முக்கியக் குறிக்கோள் என்றாலும், அவை மட்டுமே முழு செயல்பாடாக இருந்துவிட முடியாது.
தனியார் துறையைச் சேர்ந்த தொழில்களுக்குத் தேவையான நியாயமான மூலதன உதவிகளை அரசு வங்கிகள் வழியாகக் கிடைக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. அரசியல் தொடர்புள்ள நபர்களுக்கும் நிதி ஆதரவு கிடைப்பதும், அந்த தொடர்புகளே வங்கியின் செயல்பாடுகளை முடக்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவதும்தான் இன்று பொதுத் துறை வங்கிகளின் நிலை என்றாகிவிட்டது.
வாராக் கடன் விவகாரம் வங்கித் துறையை மிரட்டுவது இப்படித்தான்.
திரும்பி வராமல் நிலுவையில் உள்ள எல்லா கடன் தொகையுமே மோசடி செய்யப்பட்டது என்று கூறிவிட முடியாது. உரிய பாதுகாப்போடுதான் கடன் வழங்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வாராக் கடன் மீட்புக்கு, சொத்து ரொக்கமாக்குதல் போன்ற சட்ட ரீதியான வழிகள் உள்ளன. "பெரிய இடங்களுக்கு' அளிக்கப்பட்ட கடன்களைத் திரும்பப் பெறுவதில் இந்தப் பாதுகாப்புகள் காலா காலத்தில் கை கொடுப்பதில்லை என்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
கடந்த ஆண்டு மார்ச் அளவில் மொத்த கடனளிப்பில் வாராக் கடன் என்பது 5.43%. டிசம்பரில் இது 7.3%-ஆக அதிகரித்தது. மார்ச்சில் மொத்த அளவில் வாராக் கடன் மதிப்பு ரூ. 2.6 லட்சம் கோடியிலிருந்து, டிசம்பரில் ரூ. 3.6 லட்சம் கோடியாக அதிகரித்தது.
டிசம்பர் அளவில் வாராக் கடன்களை சமாளிக்க பொதுத் துறை வங்கிகள் ஒதுக்கிய தொகை ரூ. 1,35,938 கோடியாகும்.
கடந்த 3 நிதி ஆண்டுகளில் அரசு வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்களின் மதிப்பு ரூ. 1.14 லட்சம் கோடி. அதற்கு முந்தைய 9 ஆண்டுகளில் தள்ளுபடியான தொகையைவிட இது அதிகம்.
தற்போது பொதுத் துறை வங்கிகளில் அரசுப் பங்கை 52 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கிகளில் பொதுப் பங்குகளை அதிகரிப்பது, நேர்மையான, தொழில் முறை ரீதியிலான நிர்வாகிகள் வங்கி நிர்வாகக் குழுவில் இடம் பெறுவது போன்ற முடிவுகள் அதன் நிர்வாகத்தை செம்மைப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஆனால் இதெல்லாம் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அரசு வங்கிகளின் செயல்பாடுகளில் ரிசர்வ் வங்கி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவற்றின் முழுமையான கட்டுப்பாடு மற்றும் ஒழுங்காற்று அமைப்பாக ரிசர்வ் வங்கி திகழ வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் கூரிய கண்காணிப்பின் கீழ் அவை தங்களது அடிப்படை செயல்பாடுகளில் பாரபட்சமின்றி ஈடுபட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் வேளாண் துறை, நலிந்த துறைகளின் தேவைகளைக் கைவிட முடியாது. அவை அநியாயமான தனியாரின் பிடியில் சிக்குவதற்கு அனுமதித்து விட முடியாது.
வேளாண் துறை, பிற நலிந்த துறைகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற, வங்கிகளுக்கு ஒதுக்கீடு அடிப்படையில் அரசு நிதி வழங்க வேண்டும்.
கடன் அளித்தல் உள்ளிட்ட சமுதாய மேம்பாட்டு நோக்கத்துடன் பொதுத் துறை வங்கிகள் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை வரையறை செய்து, அவை முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று அரசு தொடர்ந்து மேற்பார்வையிட வேண்டும்.
முன்னுரிமை அளிக்கப்படும் துறைகள், சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொய்வடைந்துள்ள துறைகள் எனப் பாகுபாடு செய்து, கடன்கள் தொகுக்கப்பட வேண்டும்.
வாராக் கடன்களின் தன்மையை சரியாக அடையாளம் காண அது உதவும்.
மீட்பு நடவடிக்கையில் துணிச்சலுடன் வங்கிகள் செயல்படும் விதமாக விதிமுறைகள் இயற்ற வேண்டியது உடனடி அவசியம்.
வாராக் கடன் என்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்பதில் ஐயமில்லை. ஆனால், வங்கிகள் கடன் அளிக்கவே அஞ்சும் அளவுக்கு உரத்த குரலில் அலறினால், நிஜமான கடன் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமல், தொழில் துறை முடங்கும் ஆபத்தும் உள்ளது.
முன்னேறிய நாடுகளில் தற்போது பொருளாதார இருள் சூழ்ந்து வருகிறது. அதில் இந்தியா மட்டும்தான் ஒளிவிளக்காக உள்ளது. இதனை சர்வதேசப் பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், நமது பொருளாதாரக் கொள்கைகளையும் நிதிக் கொள்கைகளையும் நுட்பமாகக் கையாண்டு தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
- டி.எஸ்.ஆர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...