ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது "அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது'' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க விழையும் ஓர் அரசுக்கு இது முக்கியமான பிரச்னை. நாட்டை நிலைகுலையச் செய்யும் ஊழலுக்கும் இதுவே அடிப்படைக் காரணம்.
பிரச்னையின் காரணத்தைக் கண்டறிந்த ராஜீவ் காந்தியால் அதை சரிப்படுத்த முடியவில்லை. அதற்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அடுத்து 1990-களில் அறிமுகமான உலக மயமாக்கலால் இந்தியா பல துறைகளில் அசுர வளர்ச்சி பெற்றது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், தொழில்நுட்ப மேம்பாடு, வாழ்க்கை வசதிகள் உயர்வு ஆகியவற்றுடன், கூடவே ஊழலும் பல மடங்கு வளர்ந்தது.
இது இயல்பான ஒன்றே. எந்த இடத்தில் வளர்ச்சி அதிகமாக இருக்கிறதோ, அங்கு உடன்விளைவாக முறைகேடுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதுமே காணக் கிடைக்கும் காட்சிதான் இது. இன்று உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சந்திக்கும் பிரதான சவால் இதுவே.
இதற்குத் தீர்வு என்ன என்பதை ஆராயும் முன், ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும். சாமானியருக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 17 சதவீதம் மட்டுமே பயனாகிறது என்ற கசப்பான உண்மையை ராஜீவ் காந்தி குறிப்பிட்டதன் காரணம் இதுவே.
ஆகவே பொருளாதார சீர்திருத்தம் என்பது உலக மயமாக்கலும், நவீன மயமாக்கலும், வர்த்தகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதும், வரிவிகித சீரமைப்பும் மட்டுமே அல்ல என்பது தெளிவாகிறது.
கசிவுகள் நிறுத்தப்படாத வரை, பொருளாதார சீர்திருத்தம் அதன் முழுமையான பயனை அளிக்க இயலாது. இதனை உறுதிப்படுத்த, அரசின் கண்காணிப்பும், சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன.
ஆதாரின் பிறப்பு
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நோக்கத்துடன்தான் மக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டைகளை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கென தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில், 2009-இல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ.) அமைக்கப்பட்டது.
2014-இல் காங்கிரஸ் ஆட்சி மாறி பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பணிகள் மேலும் வேகம் பெற்றன. குஜராத் முதல்வராக இருந்தபோது ஆரம்பத்தில் ஆதாரை சந்தேகத்துடன் எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானவுடன் ஆதாரின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டார். முந்தைய அரசின் திட்டம் என்பதால் அதை நிராகரிக்காமல், ஆதாரை மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிக்கும் துருப்புச் சீட்டாக அவர் மாற்றியமைத்தார். இது காங்கிரஸ்காரர்களே எதிர்பாராதது.
இன்று நாட்டின் மக்கள்தொகையான 132 கோடியில் 117 கோடிப் பேருக்கு (2017, ஆகஸ்ட் 15 நிலவரம்) ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைந்தோரில் 99 சதவீதம் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டது. உலக அளவில் இது மாபெரும் சாதனை. இது குடிமக்களுக்கான அடையாள அட்டையல்ல; மக்களின் இருப்பிட அடையாள அட்டை மட்டுமே என்றும் அரசு அறிவித்துள்ளது.
கண் கருவிழி, கைரேகை உள்ளிட்ட உயிரியல் அடையாளங்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் 12 இலக்க எண்ணும், கியூ.ஆர். குறியும் கொண்ட ஆதார் அட்டைகளை போலி செய்ய முடியாது. இருப்பிட முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்களை ஆதாரில் குறிப்பிட்டுள்ளதால், பொதுவான அடையாள அட்டையாக அது மக்களால் ஏற்கப்பட்டுவிட்டது.
கண்காணிக்கும் கருவி
இதன் காரணமாக, ஆதார் அட்டை மிக விரைவில் நாட்டு மக்களை ஒழுங்குபடுத்தும் கருவியாக மாறி இருக்கிறது. இருப்பினும், ஆதார் அட்டையை பிற சேவைகளுடன் இணைப்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று அதிருப்தி எழுந்து, அதுதொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆதாருக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உண்டா என்பதையும் உச்ச நீதிமன்றம் ஆராய்கிறது.
இதனிடையே, ஆதார் கட்டாயப்படுத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. ஆதார் உருவாகக் காரணமான காங்கிரஸ் கட்சியே, அரசியலுக்காகப் புகார் கூறுவதுதான் கொடுமை.
ஆயினும், அரசு தொடர்புள்ள அனைத்துச் சேவைகளிலும் ஆதாரை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவுகள் தொடர்பான செய்திகள், ஆச்சரியமளிப்பவையாக உள்ளன (காண்க: பெட்டிச் செய்தி-1).
குறிப்பாக, அரசு நலத்திட்டங்களில் புரையோடி இருந்த ஊழல்கள் கட்டுப்படுத்தப்பட்டு, போலிப் பயனாளிகள் களையெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி நிதி மிச்சமாகியுள்ளதும் தெரியவந்திருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கில் இதையே மத்திய அரசு தனது தரப்பு வாதமாக முன்வைத்து வருகிறது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது நாட்டு மக்கள் அதிருப்தி கொள்வது இயல்பு. எனவேதான், தேர்தல் வெற்றிகளுக்காக மக்களைக் கட்டுப்படுத்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்புவதில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் லாப- நஷ்டங்களைப் பற்றிய அச்சமின்றி, தனது அரசின் பொருளாதாரச் சீர்திருத்தத்துக்கு அடிப்படைக் கருவியாக ஆதாரை மாற்றி இருக்கிறார்.
முதலில் வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் இணைக்கப்பட்டது. அடுத்து பொது விநியோகத் திட்ட ரேஷன் அட்டை, சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி எண்கள் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றுமே துறை வாரியாக பிரமாண்டமான பணிகள். பல்வேறு அரசியல் எதிர்ப்புகள், நடைமுறைச் சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகளை மீறி, ஆதார் இப்போது அனைத்துக்கும் ஆதாரமாகி வருகிறது.
உடனடி விளைவுகள்:
வருமான வரித் தாக்கலுக்கும் ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆதார் இணைப்பு வாயிலாக ஒருவரே பல நிரந்தரக் கணக்கு எண்களை வைத்திருந்தது தடுக்கப்பட்டுள்ளது முக்கியமான மாற்றமாகும். அதுபோலவே போலி பான் எண்கள் ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, பெயரளவில் இயங்கிவந்த 1.75 லட்சம் போலி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுள்ளது. இதன் மூலமாக, கருப்புப் பணப் புழக்கம் முடக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண், நிரந்தர கணக்கு எண், செல்லிடப்பேசி எண்ணை இணைக்கும் கே.ஒய்.சி. (வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) நடவடிக்கையால், வங்கிச் செயல்பாடுகளை முறைகேடாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இது கருப்புப் பண ஒழிப்புக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் நலம் விளைவிப்பதாகும்.
செல்லிடப்பேசி எண்களுடன் (சிம்) ஆதார் எண்ணை இணைக்குமாறு அரசு தற்போது கட்டாயப்படுத்தி வருகிறது. மொபைல் வங்கிப் பரிமாற்றம் பெருகிவரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை உண்மையான வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது. தவிர, போலி முகவரியில் செல்லிடப்பேசி வைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் கட்டுப்படுத்த முடிகிறது.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் படிப்படியாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. இதன்மூலமாக உண்மையான பயனாளிகளை மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. போலிப் பயனாளிகள் குறைவதால் அரசின் மானியச் செலவுகள் குறைந்துள்ளன (காண்க: பெட்டிச் செய்தி- 2). வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிட ஆதார் அட்டை சிறப்பான ஆதாரமாகவே உள்ளது.
எனினும், அரசு சேவைகளுடன் ஆதாரை இணைக்க மக்கள் சிரமப்படுவதையும் காண முடிகிறது. குறிப்பாக ஆதார் இணைப்பு இல்லாததால் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. ஆதார் எண்ணை அரசு திட்டங்களில் இணைப்பதை அரசு நூறு சதவீதம் உறுதி செய்யும் வரை, நலத்திட்ட உதவிகள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது. இல்லையேல், அரசின் நோக்கம் வீணாகிவிடும்.
ஆதார் அட்டை பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும், நலத்திட்டங்களுடன்ஆதாரை இணைக்கவும் தாலுகா மையங்களில் பொது சேவை மையங்கள் இயங்குகின்றன. மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள் ஆங்காங்கே இயங்குகின்றன. ஆயினும், மக்களுக்கு இன்னமும் சிரமங்கள் நீடிக்கின்றன. தவிர, மக்களுக்கு அரசு நடவடிக்கைகளின் நோக்கம் இன்னமும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை அரசு உருவாக்குவதும் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

