கரூரில் சாயப் பட்டறைப் பூங்கா: எதிர்பார்ப்பில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள்

கரூரில் சாயப்பட்டறைப் பூங்கா அமைவது எப்போது என்ற எதிர்பார்ப்பில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர்
கரூரில் சாயப் பட்டறைப் பூங்கா: எதிர்பார்ப்பில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள்
Updated on
2 min read


கரூரில் சாயப்பட்டறைப் பூங்கா அமைவது எப்போது என்ற எதிர்பார்ப்பில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர்.

உலக வரைபடத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்கு என்றென்றும் தனி இடமுண்டு. இங்கு நேர்த்தியாகத் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களான திரைச்சீலைகள், அலங்கார குஷன்கள், மேஜை விரிப்பான்கள், கால் மிதியடிகள் உள்ளிட்டவை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி வரை  நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் இத் தொழிலின் ஆணிவேராகவும், மூலத் தொழிலாகவும் கருதப்படும் சாய, சலவைப் பட்டறைகள் கரூரில் போதிய அளவில் இல்லாததால் தற்போது இத் தொழில் ஆட்டம் கண்டு வருகிறது. 

கடந்த 2008 வரை கரூரில் சுமார் 438 என்ற எண்ணிக்கையில் இத்தகைய பட்டறைகள் இருந்ததால், ஜவுளி உற்பத்திப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடிந்தது.  இந்நிலையில், இந்த பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நேரடியாக அமராவதி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால்களில் கலந்ததால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. 

சுத்திகரிக்கப்படாத கழிவு நீரில் அதிக அளவு உப்புத் தன்மை மற்றும் வேதிப்பொருட்கள் நிலத்தின் உவர் தன்மையை அதிகப்படுத்தியதால் விவசாய நிலங்கள்  மலட்டுத்தன்மை கொண்டதாக மாறின. இதனால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அமராவதி பாசன விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் சாய, சலவை ஆலைகள் ஆர்ஓ பிளாண்ட் என்னும் சுத்திகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே இயங்க வேண்டும். மற்ற ஆலைகளை உடனே மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனால் சிறிய அளவில் இயங்கி வந்த ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது 48 ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளால் கரூரில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான பணிகளை சமாளிக்க இயலாததால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்துச் செலவு, ஆள் பற்றாக்குறை, ஏற்றுமதி, இறக்குமதி செலவு என பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றன. 

இதனால் கரூருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சாயப் பட்டறை பூங்காவை தமிழக அரசு விரைவில் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு கூறியது:

2008-ஆம் ஆண்டுக்கு முன் கரூரில் அதிகளவில் சாய, சலவை ஆலைகள் இயங்கி வந்ததால் வெளிநாட்டினர் திடீரென ஆர்டர்கள் கொடுத்தாலும் அதற்கேற்றவாறு எங்களால் துணியை உற்பத்தி செய்துகொடுக்க முடிந்தது. காரணம், ஜவுளி உற்பத்திக்கு மூலத் தொழிலாக இருப்பது சாய, சலவை ஆலைகள்தான். 

ஆனால் இப்போது எதற்கெடுத்தாலும் ஈரோடு, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் போன்ற நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இப்போது ஜிஎஸ்டி, நூல் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் இந்தத் தொழில் ஆட்டம்கண்டு வரும் நிலையில் சாய, சலவை ஆலை பிரச்னையால் பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றன. 

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-இல் புன்னம்சத்திரத்தில் சுமார் 12 ஏக்கரில் ரூ. 50 கோடியில் சாயப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. 

பின்னர் 2013-இல் சுமார் ரூ.700 கோடியில் நாமக்கல், குமாரபாளையம், கரூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சாயப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்து, நிதியையும் ஒதுக்கினார். ஆனாலும் இத்திட்டம் கிடப்பில் இருக்கிறது. இந்தத் திட்டத்தையாவது தமிழக அரசு விரைந்து செயல்படுத்தினால் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள்  தங்கள் தொழிலை மேலும் மேம்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com