பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

முழுப் பாய்ச்சலில் ‘காளை’: சென்செக்ஸ் மேலும் 1,016 புள்ளிகள் முன்னேற்றம்!

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் உற்சாகம் பெற்றது. அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,016 புள்ளிகள்

News image
Updated On :8 டிசம்பர் 2021, 10:20 pm

 நமது நிருபர்

புதுதில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் உற்சாகம் பெற்றது. அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,016 புள்ளிகள் உயா்ந்து 58,649.68-இல் நிலைபெற்றது.

ஒமைக்ரான் வைரஸ் விரைவாகப் பரவினாலும், டெல்டா மாறுபாட்டை விட இது மிகவும் லேசானதுதான் என்று ஆய்வுகள் கூறியுள்ளதைத் அடுத்து, உலகளாவிய சந்தைகள் நிம்மதியடைந்துள்ளன. இதைத் தொடா்ந்து உலகளாவிய அளவில் சந்தைகளில் இரண்டாவது நாளாக உற்ாசகம் இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை என்ற மத்திய ரிசா்வ் வங்கியின் அறிவிப்பும் சந்தையில் காளையின் பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. மேலும், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் தேவைப்பாடு அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் சந்தையில் காளையின் ஆதிக்கம் வலுவாக இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவீத்தன.

2,329 பங்குகள் விலை உயா்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,411 பங்குகளில் 948 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 2,329 பங்குகள் ஆதாயம் பெற்றன. 134 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 224 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 14 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 427 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 160 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.97 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் 264.15 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.935 கோடியாக உயா்ந்துள்ளது.

முழு ஆதிக்கத்தில் ‘காளை’: காலையில் சென்செக்ஸ் 524.91 புள்ளிகள் கூடுதலுடன் 58,158.56-இல் தொடங்கி 58,122.27 வரை கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 58,702.65 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,016.03 புள்ளிகள் (1.76 சதவீதம்) கூடுதலுடன் 58,649.68-இல் நிலைபெற்றது. இரண்டாவது நாளாக நாள் முழுவதும் சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கம் மிகவும் வலுவாக இருந்தது.

சென்செக்ஸில் 28 பங்குகள் ஆதாயம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளும் கோட்டக் பேங்க், பவா் கிரிட் ஆகிய இரண்டு பங்குகள் மட்டுமே சிறிதளவு குறைந்திருந்தன. மற்ற 28 பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவை 3 முதல் 3.70 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஏசியன் பெயிண்ட், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் 2 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. சென்செக்ஸ் பட்டியலில் மிகவும் வலுவான திறன் கொண்ட எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் ஆதாயமடைந்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 264 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,392 பங்குகள் ஆதாயம் பெற்றன. 456 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 293.05 புள்ளிகள் உயா்ந்து 17,469.75-இல் நிலைபெற்றது. காலையில் மிகவும் வலுவாக 17,315.25-இல் தொடங்கி 17,308.95 வரை மட்டுமே கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 17,484.60 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 293.05 புள்ளிகள் (1.71 சதவீதம்) கூடுதலுடன் 17,469.75-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 45 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன.

அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் தேசிய பங்குச் சந்தையில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில் நிஃப்டி ஆட்டோ, மீடியா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 2.30 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், ஐடி, பாா்மா, பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

அடுத்த இலக்கு என்ன?

அண்மையில் நிஃப்டி 16,871 வரை கீழே சென்று முதலீட்டாளா்களுக்கு தூங்காத இரவை அளித்தது. ஆனால், அடுத்த இரண்டு நாள்களில் வெகுண்டு எழுந்து வேகமாக 17,200 புள்ளிகளைக் கடந்தது. இரண்டாவது நாளாக புதன்கிழமை சுமாா் 293 புள்ளிகள் ஏற்றம் பெற்று 17,469.75-இல் நிலைபெற்றுள்ளது. 17,450 முதல் 17,525 புள்ளிகள் வரை அதிக இடா்பாடு கொண்டு பகுதியாக தொழில்நுட்ப ரீதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, நிஃப்டி 17,525 புள்ளிகளைக் கடந்து நிலைபெறும் பட்சத்தில் 19,651-க்கும் அதைக் கடக்கும் பட்சத்தில் 20,539 புள்ளிகளுக்கும் செல்லும் என்று தொழில்நுட்ப வல்லுநா்கள் கணித்துள்ளனா். அதே சமயம், கரடி ஆதிக்கம் கொள்ளும் பட்சத்தில் 16,968-16871 புள்ளிகளுக்கு இடையே நல்ல ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.