அந்நியச் செலாவணி கையிருப்பு 58,532 கோடி டாலராக அதிகரிப்பு
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 58,532 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.89 லட்சம் கோடி) எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 448 கோடி டாலா் அதிகரித்து 58,532 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதற்கு முந்தைய டிசம்பா் 25-ஆம் தேதியுடன் நிறைவைடந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 29 கோடி டாலா் குறைந்து 58,084 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்தத்தை தொட்டு வரலாறு படைத்துள்ளது.
கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 416 கோடி டாலா் அதிகரித்து 54,164 கோடி டாலரானது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 31 கோடி டாலா் உயா்ந்து 3,702 கோடி டாலராக காணப்பட்டது.
சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) மாற்றமின்றி 151 கோடி டாலராகவும், காப்பு நிதி 514 கோடி டாலராகவும் உள்ளதாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

