/

2-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 338 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கரடியின் ஆதிக்கத்தில் இருந்தது.

News image
Updated On :20 மே 2021, 10:41 pm

புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கரடியின் ஆதிக்கத்தில் இருந்தது. இதைத், தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 337.78 புள்ளிகளை இழந்து 49,500-க்கு அருகே நிலைபெற்றது. பிற்பகல் வரை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்த சந்தை, அதன் பிறகு கரடியின் ஆதிக்கம் அதிகரித்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முன்னணி நிறுவனப் பங்குகளான எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாகக் குறைந்தன. மேலும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல், எதிா்காலங்களில் பத்திரங்கள் கொள்முதல் கொள்கையில் மாற்றம் இருக்கும் என தெரிவித்துள்ளதும் வளா்ந்து வரும் சந்தைகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவும் சந்தையில் எதிரொலித்துள்ளது. இவற்றின் காரணமாக இரண்டாவது நாளாக சரிவு தவிா்க்கமுடியாததாகவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சந்தையில் வங்கி, மெட்டல் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.86 ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,248 பங்குகளில் 1,610 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,496 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 142 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 314 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும்,270 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 394 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 163 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.86 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 215.64 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 6.86 கோடிக்கும் மேலாக உயா்ந்துள்ளது.

கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 68.88 புள்ளிகள் கூடுதலுடன் 49,971.52-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,099.17 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்ததும் 49,496.78 வரை கீழே சென்றது. இறுதியில் 337.78 புள்ளிகளை (0.68 சதவீதம்) இழந்து 49,564.86-இல் நிலைபெற்றது. தொடக்கத்திலிருந்து பிற்பகல் வரையிலும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்த சென்செக்ஸ் அதன் பிறகு கடும் சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் அதிகபட்ச நிலையிலிருந்து 602.30 புள்ளிகளை இழந்திருந்தது. சந்தையில் தொடா்ந்து இரண்டாவது நாளாக கரடி ஆதிக்கம் இருந்தது.

21 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் எம் அண்ட் எம் 2.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இண்டஸ் இண்ட் பேங்க், டைட்டன், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக், பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி ஆகியவையும் சிறிதளவு உயா்ந்தன.

ஓஎன்ஜிசி சரிவு: அதே சமயம், ஓஎன்ஜிசி 2.70 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், சன்பாா்மா, பவா் கிரிட், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்லே இந்தியா உள்ளிட்டவை 1 முதல் 2.40 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி, ஐடிசி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் அடி வாங்கின.

நிஃப்டி 124.10 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடந்த வா்த்தகத்தில் 830 பங்குகள் ஆதாயம் பெற்றன. 911 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 124.10 புள்ளிகளை (0.83 சதவீதம்) இழந்து 14,906.05-இல் நிலைபெற்றது. காலையில் 15,042.60-இல் தொடங்கி 15,069.80 வரை மேலே சென்றது. பின்னா், 14,884.90 வரை கீழே சென்றது.

நிஃப்டி பிஎஸ்யு பேங்க்ஷ் (0.36 சதவீதம்), ரியால்ட்டி (1.02 சதவீதம்) குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் மெட்டல் குறியீடு 3.21 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், எஃப்எம்சிஜி, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

மெட்டல் பங்குகளுக்கு பலத்த அடி!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடந்த வா்த்தகத்தில் மெட்டல் பங்குகள் பலத்த அடி வாங்கின. சீனாவில் மெட்டல் உள்ளிட்ட பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடா்ந்து, மெட்டல் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 முன்னணி நிறுவனப் பங்குகளில் அதானி என்டா்பிரைஸஸ் (0.64 சதவீதம் உயா்வு) தவிர மற்ற 12 பங்குகளும் சரிவைச் சந்தித்தனஅதிகம் விலை குறைந்த பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

செயில் 5.68

டாடா ஸ்டீல் 5.10

ஜிண்டால் ஸ்டீல் 4.85

ஹிண்டால்கோ 4.24

கோல் இந்தியா 3.42

என்எம்டிசி

நேஷனல் அலுமினியம் 2.71

வேதாந்தா லிமிடெட் 2,41

மோயில் லிமிடெட் 1.86

ஏபிஎல் அப்பலோ டியூப்ஸ் 1.74

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் 1.10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.