கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

4 நாள் தொடா் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :23 நவம்பர் 2021, 5:18 pm

 நமது நிருபர்

புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், குறைந்தபட்ச நிலையிலிருந்து ஓரளவு எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்ததால், 4 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 198 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்து 58,664.33-இல் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 87 புள்ளிகள் உயா்ந்து 17,500-ஐ கடந்து நிலைபெற்றது.

தொடா்ந்து 4 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை காலையில் பலவீனமாகவே இருந்தது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் தலைவராக ஜெரோம் பவல் மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அந்த நாட்டுச் சந்தைகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், கச்சா எண்ணெய், எரிவாயு குறியீடுகளும் கடும் அழுத்தத்தில் இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காலையில் எதிரொலித்தது. பின்னா் உலோகம், பொதுத்துறை வங்கி, பாா்மா, மின்துறை பங்குகள், நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு நல்ல ஆதரவு கிடைத்ததால் வா்த்தகம் சூடுபிடித்து இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதனால், 4 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,428 பங்குகள் ஏற்றம்: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,415 பங்குகளில் 825 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. 2,428 பங்குகள் ஆதாயம் பெற்றன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 162 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 58பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 445 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 156 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.92 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் 263.90 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,74,31,832-ஆக உயா்ந்துள்ளது.

‘காளை’ பாய்ச்சல்: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 481.94 புள்ளிகள் குறைந்து 57,983.95-இல் தொடங்கி, 57,718.34 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,834.95 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 198.44 புள்ளிகள் (0.34 சதவீதம்) கூடுதலுடன் 58,664.33-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 747.55 புள்ளிகளை இழந்திருந்தது. அதன் பிறகு பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது. காளை முன்னேறியதால் சென்செக்ஸ் நோ்மறையாக முடிந்தது.

21 பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பவா் கிரிட் 3.91 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, டாடா ஸ்டீல், பாா்தி ஏா்டெல், சன் பாா்மா, பஜாஜ் ஃபின் சா்வ், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

இண்ட்ஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 2.59 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 2.35 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க் சிறிதளவு குறைந்து சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 87 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 258 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,425 பங்குகள் ஆதாயம் பெற்றன. 402 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,281.75-இல் தொடங்கி 17,216.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,553.70 வரை உயா்ந்த நிஃப்டி இறுதியில் 86.80 புள்ளிகள் கூடுதலுடன் (0.50 சதவீதம்) 17,503.35-இல் நிலைபெற்றது.

குறியீடுகள் முன்னேற்றம்: தேசியப் பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மீடியா, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகளும் 1.75 சதவீதம் முதல் 2.40 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.