இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 446 புள்ளிகள் உயர்ந்து 59,744-இல் நிலைபெற்றது. மார்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.2, 612.00 வரை உயர்ந்து புதிய உச்ச விலையைப் பதிவு செய்தது. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.07 லட்சம் கோடி உயர்ந்தது.
இரண்டாவது நாளாக காளையின் ஆதிக்கம்: உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்தில் தடுமாற்றம் நிலவியது. பின்னர், நேரம் செல்லச் செல்ல முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததும், சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றது. முன்னணி நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு வருவாய் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களின் உணர்வுகளை வலுப்படுத்தியதே இதற்குக் காரணம் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
ஐடி, எரிசக்தித் துறை, பிஎஸ்யு வங்கிகள் தவிர்த்து நிதித் துறை பங்குகள் மீட்சி பெற்றன. குறிப்பாக, மார்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.2,612 வரை உயர்ந்து புதிய உச்ச விலையைப் பதிவு செய்தது மற்றும் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் வெகுவாக உயர்ந்தது சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சந்தை மதிப்பு ரூ.2.07 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,449 பங்குகளில் 2,073 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 1210 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 166 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 306 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 16 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 515 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 128 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன.
சந்தை மூலதன மதிப்பு ரூ.2.07லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.264.78 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,15,64,181-ஆக உயர்ந்துள்ளது.
மீண்டும் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 20.82 புள்ளிகள் கூடுதலுடன் 59,320.14 -இல் தொடங்கி, 59,127.04 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 59,778.87 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 445.56 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 59,744.88-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 172.28 புள்ளிகளை இழந்து தவிப்பில் இருந்த
சென்செக்ஸ், பிற்பகலில் எழுச்சி பெற்றது.
இன்டஸ்இண்ட் பேங்க் அபாரம்: தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் பேங்க் 4.60 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், டைட்டன் உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஏஷியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, மாருதி சுஸýகி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
சன்பார்மா சரிவு: மருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சன்பார்மா 1.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவர் கிரிட், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 131 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,103 பங்குகள் ஆதாயம் பெற்றன. 697 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 131.05 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 17,822.30-இல் நிலைபெற்றது. காலையில் 17,661.35-இல் தொடங்கிய நிஃப்டி, 17,640.90 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,833.45 வரை உயர்ந்தது.
ஆயில் அண்ட் காஸ் குறியீடு முன்னேற்றம்: துறை வாரியாகப் பார்த்தால், நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 2.77 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடி குறியீடு 1.19 சதவீதம் ஏற்றம் பெற்றது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஆட்டோ, மீடியா, கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. ஆனால், ரியால்ட்டி குறியீடு 1.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சி பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பார்மா, ஹெல்த்கேர், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...

முத்தான முத்தல்லவோ...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


