இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சென்செக்ஸ் கடும் சரிவு: மேலும் 1,024 புள்ளிகள் இழப்பு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’யின் பிடி மேலும் இறுகியது.

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 5:23 pm

 நமது நிருபர்

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’யின் பிடி மேலும் இறுகியது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,024 புள்ளிகளை இழந்து 57,621.19-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.88 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.264.83 லட்சம் கோடியாக இருந்தது.

உலக அளவில் மற்ற நாடுகளின் சந்தைகள் ஸ்திரமாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை காலையில் பலவீனத்துடன் தொடங்கியது. 3 நாள் நடைபெறவுள்ள மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தனா். மேலும், லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் கரடியின் பிடி மேலும் இறுகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வருவது முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலையில், வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டதால் கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகதா்கள் தெரிவித்தனா்.

2,101 பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,650 பங்குகளில் 1,405 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,101 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 249 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 445 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 304 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.2.88 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.264.83 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.62 கோடியாக உயா்ந்துள்ளது.

3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 95.15 புள்ளிகள் குறைந்து 58,549.67-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,707.76 வரை உயா்ந்தது. பின்னா், தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 57299.055 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,023.63 புள்ளிகளை (1.75 சதவீதம்) இழந்து 57,621.19-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1,408.71 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

எச்டிஎஃப்சி பேங்க் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபல தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் 3.65 சதவீதம், எல் அண்ட் டி 3.20 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.15 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், விப்ரோ, டைட்டன், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. மேலும், முன்னணி நிறுவனப் பங்குகளான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், மாருதி சுஸுகி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் முன்னேற்றம்: அதே சமயம், பொதுத்துறை மின் நிறுவனமான பவா் கிரிட் 1.88 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

நிஃப்டி 303 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 619 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,317 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி பட்டியலில் 42 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. நிஃப்டி குறியீடு 302.70 புள்ளிகள் (1.73 சதவீதம்) குறைந்து 17,213.60-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 60 புள்ளிகள் குறைந்து 17,456.30-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,536.75 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் தொடா் தாக்குதலால் 17,119.40 வரை கீழே சென்றது.

பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டும் 0.92 சதவீதம் உயா்ந்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 2 முதல் 2.50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், ஆட்டோ, ஐடி, மீடியா, பாா்மா, ரியால்ட்டி, ஹெல்த்கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.