4-ஆவது நாளாக எழுச்சி: மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்
பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் எழுச்சி காணப்பட்டது.


பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமையும் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
பங்குச் சந்தையில் தொடர்ந்து எழுச்சி இருந்து வருகிறது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏறுமுகத்தில் காணப்பட்டன. அவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. தொடக்கத்தில் தடுமாற்றம் இருந்தாலும், பிற்பகல் வர்த்தகத்தின் போது காளையின் ஆதிக்கம் வலுப்பெற்றது.
குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேசமயம், கடந்த சில நாள்களாக ஏறுமுகம் கண்டிருந்த ஐடி, பார்மா பங்குகள் அதிகம் விற்பனையை எதிகொண்டன. இருப்பினும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சந்தை மேலும் முன்னேற்றம் கண்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.09 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,481 நிறுவனப் பங்குகளில் 1,555 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,830 பங்குகள் ஆதாயம் பெற்றன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 432 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 11 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 555 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 252 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.09 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.272.45 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9.24 கோடியாக உயர்ந்துள்ளது.
4-ஆவது நாளாக எழுச்சி: காலையில் சென்செக்ஸ் 66.05 புள்ளிகள் கூடுதலுடன் 59,921.98-இல் தொடங்கி, 59,661.38 வரை கீழே சென்றது. அதன் பிறகு தொடர்ந்து எழுச்சி பெற்று அதிகபட்சமாக 60,332.72 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 367.22 புள்ளிகள் (0.61 சதவீதம்) கூடுதலுடன் 60,223.15-இல் நிலைபெற்றது.
காலையில் தடுமாற்றம் இருந்தாலும், பிற்பகலுக்கு பிறகு காளையின் ஆதிக்கம் வலுப்பெற்றது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 18 பங்குகள் ஆதாயம் பெற்றன.
பஜாஜ் ஃபின்சர்வ் அபாரம்: பிரபல தனியார் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் 5.09 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.44 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி பேங்க், ஏஷியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸýகி உள்ளிட்டவை 2 முதல் 3.70 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் சரிவு: அதேசமயம், பிரபல ஐடி நிறுவனங்களான டெக் மஹிந்திரா பங்குகள் 2.87 சதவீதம், இன்ஃபோசிஸ் பங்குகள் 2.71 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
மேலும், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, பவர் கிரிட், டாக்டர் ரெட்டீஸ் லேப், என்டிபிசி, டிசிஎஸ் உள்ளிட்டவையும் 0.50 முதல் 1.70 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 120 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 961 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 924 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 120 புள்ளிகள் (0.67சதவீதம்) உயர்ந்து 17,925.25-இல் நிலைபெற்றது. காலையில் 17,820.10-இல் தொடங்கி 17,748.85 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,944.70 வரை உயர்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.
பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் முன்னேற்றம்:
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 1.93 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பார்மா, ஐடி ஹெல்த்கேர், மீடியா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க் 2 முதல் 2.40 சதவீதம் வரை உயர்ந்தன. ஆட்டோ, மெட்டல், பிஎஸ்யு பேங்க், ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன.

கடந்த நான்கு வர்த்தக நாள்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.9,30,419.3 கோடி அதிகரித்து ரூ.2,72,44,894.96 கோடியை எட்டியுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...