பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

‘ஹோலி’ உற்சாகம்: சென்செக்ஸ் மேலும் 1,047 புள்ளிகள் முன்னேற்றம்! சந்தை மதிப்பு ரூ.4.15 லட்சம் கோடி உயா்வு

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ‘ஹோலி’ உற்சாகத்தைக் காணமுடிந்தது. 

News image
Updated On :17 மார்ச் 2022, 6:09 pm

 நமது நிருபர்

புதுதில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ‘ஹோலி’ உற்சாகத்தைக் காணமுடிந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் பெற்றது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது. மேலும், அடுத்து வரும் மாதங்களிலும் பணக்கொள்கையில் இறுக்கமான முடிவுகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும், சந்தையில் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக உலகளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகளில் ‘காளை’யின் ஆதிக்கம்தான் இருந்தது. மேலும், கடந்த அக்டோபா் முதல் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தற்போது மீண்டும் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் நிலையான மீட்சியும் சந்தையில் உற்சாகத்தை அளித்தது. ஆனால், வா்த்தகம் முடியும் தறுவாயில் ஐடி நிறுவனப் பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும் சந்தையில் ‘ஹோலி’ உற்சாகத்தைக் காணமுடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,051 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,529 நிறுவனப் பங்குகளில் 2,051 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,3652 பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. 116 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 123 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 19 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.15 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.260.38 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.

1,047 புள்ளிகள் ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 803..63 புள்ளிகள் கூடுதலுடன் 57,620.28-இல் தொடங்கி, 57,518.06 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,095.84 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,047.28 புள்ளிகள் (1.84 சதவீதம்) உயா்ந்து 57,863.93-இல் நிலைபெற்றது. பெரும்பாலான நேரம் சந்தை காளையின் முழு ஆதிக்கத்தில் இருந்தது.

வலுப்பெற்றது எச்டிஎஃப்சி: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகியவை தவிர மற்ற அனைத்துப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. இதில் எச்டிஎஃப்சி 5.60 சதவீதம், டைட்டன் 4.50 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், ஏசியன்பெயிண்ட், டாடா ஸ்டீல், மாருதி, எம் அண்ட் எம், நெஸ்லே, டாக்டா் ரெட்டி உள்ளிட்டவை 2.50 முதல் 3.30 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இருந்தன..

நிஃப்டி 312 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,228 பங்குகள் ஆதாயம் பெற்றன. 673 பங்குகள் மட்டுமே நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு மேலும் 311.70 புள்ளிகள் (1.84 சதவீதம்) உயா்ந்து 17,287.05-இல் நிறைவடைந்தது. காலையில் 227.55 புள்ளிகள் கூடுதலுடன் 17,202.90-இல் தொடங்கிய நிஃப்டி, 17,175.75 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,344.60 வரை உயா்ந்தது.

ரியால்ட்டி, பேங்க், ஐடி குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் ஐடி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு இரண்டாவது நாளாக 3.13 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, மெட்டல், பிரைவேட் பேங்க், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2 முதல் 2.80 சதவீதம் வரை உயா்ந்தன. எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க், பாா்மா, ஹெல்த்கோ், மீடியா குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை வரை உயா்ந்தன.

இன்று விடுமுறை

ஹோலி பண்டிகையையொட்டி, பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றில் பங்கு வா்த்தகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மொத்தம் 1,047.28 புள்ளிகளும் (1.84 சதவீதம்), நிஃப்டி மொத்தம் 311.70 புள்ளிகளும் (1.84 சதவீதம்) உயா்ந்துள்ளன. இதற்கிடையே,, ரஷியா - உக்ரைன் போா் பதற்றம் தணிந்து, அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவது தொடா்ந்தால் உள்நாட்டு சந்தை மேலும் ஏற்றம் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.