2 நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிவு

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை சரிவைச் சந்தித்தது.
2 நாள் தொடர் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 263 புள்ளிகளை இழந்தது.
 பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளன. குறிப்பாக வெகுவாக எதிர்பார்க்கப்படும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் வட்டி விகித முடிவுக்கு முன்னதாக உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. எஃப்எம்சிஜி பங்குகளுக்கு மட்டும் ஆதரவு கிடைத்தது. மற்ற துறை பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.
 சென்செக்ஸ் சரிவு: காலையில் 215.16 புள்ளிகள் குறைந்து 59,504.14-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 59,799.04 வரை உயர்ந்தது. பின்னர், 59,275.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 262.96 புள்ளிகளை (0.44 சதவீதம்) இழந்து 59,456.78-இல் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.
 ஹெச்யுஎல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) 1.60 சதவீதம், ஐடிசி 1.59 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும்,
 பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், எம் அண்ட் எம்,
 நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்தன.
 இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 3.19 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவர் கிரிட், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, என்டிபிசி, ஹெச்சிஎல் டெக், டாக்டர் ரெட்டி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், சன்பார்மா, ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், விப்ரோ உள்ளிட்டவை
 1 முதல் 2.70 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.281.18 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,196.19 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
 நிஃப்டி 98 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 17,766.35-இல் தொடங்கி, அதிகபட்சமாக 17,838.70 வரை உயர்ந்தது. பின்னர், 17,663.60 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 97.90 புள்ளிகளை (0.55 சதவீதம்) இழந்து 17,718.35-இல் முடிவடைந்தது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com