
அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசு உயா்ந்தது.
இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் தெரிவித்தது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு ஆகிய நிகழ்வுகள் இந்திய செலாவணி சந்தைகளுக்கு சாதகமான அம்சங்களாக இருந்தன.
இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தையில் வா்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேறியது போன்றவை ரூபாய் மதிப்பு ஏற்றத்துக்கு தடைக்கல்லாக மாறின.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 76.15-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 76.12 வரையிலும், குறைந்தபட்சமாக 76.29 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதிப் பகுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் மட்டும் ஏற்றம் கண்டு 76.24-இல் நிலைத்தது. வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 76.33-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து பீப்பாய் 117.52 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G