இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 107 புள்ளிகளை இழந்தது.
ஆசியா, ஐரோப்பிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவு வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. அமெரிக்காவின் பணவீக்கத் தரவுகள் வரவுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த சில நாள்களாக முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.305.36 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.1,892.77 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 95.33 புள்ளிகள் கூடுதலுடன் 66,048.81-இல் தொடங்கிய சென்செக் ஸ், அதிகபட்சமாக 66,057.53 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 65,752.63 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 106.98 புள்ளிகளை (0.16 சதவீதம்) இழந்து 65,846.50-இல் முடிவடைந்தது.
20 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 984 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,057 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 26 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 29.90 புள்ளிகள் கூடுதலுடன்19,627.20-இல் தொடங்கி, அதிகபட்சமாக 19,634.40 வரை மேலே சென்றது.
பின்னர், 19,533.10 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 26.45 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்து 19,570.85-இல்நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டெக் மஹிந்திரா 1.82%
விப்ரோ 1.34%
பஜாஜ் ஃபைனான்ஸ் 0.98%
எஸ்பிஐ 0.89%
ஆக்ஸிஸ் வங்கி 0.59%
பஜாஜ் ஃபின்சர்வ் 0.56%
சரிவைக் கண்ட பங்குகள்
பவர்கிரிட் 2.62%
எம் அண்ட் எம் 1.78%
ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் 1.48%
சன்ஃபார்மா 0.99%
ஹெச்சிஎல் டெக் 0.88%
நெஸ்லே இந்தியா 0.88%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.