ஆர்பிஐ அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் 378 புள்ளிகள் உயர்வு

இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை பங்குச் சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 378 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை பங்குச் சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 378 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 150.80 புள்ளிகள் (0.85 சதவீதம்) உயர்ந்து 17,871.70-இல் நிலைபெற்றது.
 மத்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த பரிந்துரைத்திருந்தது. இதன்படி, சந்தை எதிர்பார்த்ததைவிட குறைவாக 0.25 சதவீதம் மட்டுமே வட்டி உயர்வு இருந்தது சந்தையில் காளையின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. குறிப்பாக இரண்டு நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த உலோக நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. ஹெல்த்கேர், ஃபார்மா, ஐடி உள்ளிட்ட அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாய பட்டியலில் வந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு புதன்கிழமை ரூ.2.57 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.268.62 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாயன்று ரூ.2,559.96 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 60,332.99-இல் தொடங்கி 60,792.10 வரை மேலே சென்றது. பின்னர், 60,324.92 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 377.75 புள்ளிகள் (0.63 சதவீதம்) கூடுதலுடன் 60,663.79-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 25 பங்குகள் ஆதாயம் பெற்றன.
 பஜாஜ் ஃபைனான்ஸ் முன்னேற்றம்: பிரபல தனியார் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 31.4 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், மாருதி சுஸýகி, ஐசிஐசிஐ பேங்க், சன்ஃபார்மா, டைட்டன், ஐடிசி, எஸ்பிஐ, எம் அண்ட் எம் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 எல் அண்ட் டி சரிவு: அதே சமயம், பிரபல உள்கட்டமைப்பு மற்றும் இன்ஜினீயரிங் நிறுவனமான எல் அண்ட் டி 1.62 சதவீதம், தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 1.31 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோட்டக் வங்கி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com