ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சரிந்து மீண்டது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே பங்குச் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை ஏற்ற, இறக்கத்துக்கிடையே பங்குச் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 243 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 86.00 புள்ளிகள் (0.48 சதவீதம்) உயர்ந்து 18,015.85-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், நேரம், நேரம் செல்லச் செல்ல முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, ஐடி, ஆயில் அண்ட் காஸ், குறிப்பிட்ட சில வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. எஃப்எம்சிஜி, பார்மா குறியீடுகள் தவிர்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு புதன்கிழமை ரூ.1.26 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.267.25 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,305.30 கோடி அளவுக்கு
 பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 42.21 புள்ளிகள் குறைந்து 60,990.055-இல் தொடங்கி 60,750.32 வரை கீழே சென்றது. பின்னர். அதிகபட்சமாக 61,352.55 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 242.83 புள்ளிகள் (0.40 சதவீதம்) கூடுதலுடன் 61,275.09-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
 டெக் மஹிந்திரா அபாரம்: பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா 5.79 சதவீதம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 2.22 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 இவற்றுக்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், கோட்டக் பேங்க், நெஸ்லே, டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக், மாருதி, டைட்டன், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு ஆதாயப் பட்டியலில் வந்தன.
 ஹெச்யுஎல் சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனி லீவர் (ஹெச்யுஎல்) 1.22 சதவீதம், ஐடிசி 1.14 சதவீதம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பார்மா 1.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 இதற்கு அடுத்ததாக, ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, பவர் கிரிட், ஆக்ஸிஸ்
 பேங்க் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com