

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. இரண்டு நாள் தொடா் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம் பெற்றுள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி தொடா்ந்து மேலே சென்றது. குறிப்பாக தனியாா் வங்கி, உலோகம், பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, மீடியா, எரிசக்தித் துறை பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், ஐடி, பொதுத் துறை வங்கி, எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடிஉயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.328.13 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த திங்கள்கிழமை ரூ. 645.72 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 205.31 புள்ளிகள் கூடுதலுடன் 65,860.46-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,849.17 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,082.36 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 275.62 புள்ளிகள் (0.42 சதவீதம்) உயா்ந்து 65,930.77-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,853 பங்குகளில் 2,018 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,701 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 134 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில்18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 89 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 76.90 புள்ளிகள் கூடுதலுடன் 19,770.90-இல் தொடங்கி 19,754.05 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,829.10 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 89.40 புள்ளிகள் (0.45 சதவீதம்) உயா்ந்து 19,783.40-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,144 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 964 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.....................1.81%
டாடா ஸ்டீல்....................................1.45%
டைட்டன்.........................................1.44%
ரிலையன்ஸ்......................................1.24%
சன்பாா்மா.......................................1.18%
டாடா மோட்டாா்ஸ்......................1.02%
சரிவைக் கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா...............................0.50%
எல் அண்ட் டி...................................0.47%
என்டிபிசி..........................................0.44%
எஸ்பிஐ.............................................0.41%
மாருதி...............................................0.34%
டிசிஎஸ்.............................................0.26%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.