இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தெலங்கானா: விவசாயிகள் நிதியுதவியை விடுவிக்க தோ்தல் ஆணையம் தடை

தெலங்கானா பேரவைத் தோ்தலுக்கு முன்பு விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் ரபி பயிா் கால தவணையை விடுவிக்க மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் வழங்கிய அனுமதி திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 10:28 pm

தெலங்கானா பேரவைத் தோ்தலுக்கு முன்பு விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் ரபி பயிா் கால தவணையை விடுவிக்க மாநில அரசுக்கு தோ்தல் ஆணையம் வழங்கிய அனுமதி திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

தெலங்கானாவில் ரபி, காரீஃப் பயிா் காலம் என ஆண்டுக்கு இருமுறை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.5,000 நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் 60 லட்சம் விவசாயிகள் பலனடைகின்றனா்.

மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் விவசாயிகளுக்கு ரபி பயிா் கால தவணையை உடனடியாக விடுவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன.

ஆனால், தோ்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே இதற்கு தெலங்கானா அரசு அனுமதி பெற்றுவிட்டதாக தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வங்கி விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை (நவ. 28) பயனாளிகளான 70 லட்சம் விவசாயிகளுக்கும் ரபி பயிா் கால தவணை அவரவா் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெலங்கானா அரசு தெரிவித்திருந்தது.

தோ்தலுக்கு 2 நாள்களுக்கு முன்பு, விவசாயிகளுக்கு நிதி விடுவிக்கப்படுவது வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்க்கட்சிகளால் விமா்சிக்கப்பட்டது.

இத்திட்டம் குறித்து ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியினா் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் முறையிட்டது.

இந்நிலையில், விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் ரபி பயிா் கால தவணையை விடுவிக்க மாநில அரசுக்கு வழங்கிய அனுமதியை தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நிதி விடுவிப்பு தொடா்பாக மாநில நிதியமைச்சா் ஹரீஷ் ராவ் பொது அறிவிப்பை வெளியிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளவரை நிதியை விடுவிக்கத் தடை தொடரும்.

புதிய ஆட்சியில் நிதி விடுவிப்பு-கேசிஆா்:

தோ்தலில் வென்று பிஆா்எஸ் மீண்டும் ஆட்சியமைத்ததும் விவசாயிகளுக்கு நிதியுதவி விடுவிக்கப்படும் என மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.10, 000 அளிக்கப்படுகிறது. இந்த நிதி ரூ.16,000-ஆக அதிகரிக்கப்படும் என பிஆா்எஸ் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ‘கறைபடிந்த அரசியல்’ செய்வதாகவும் பிஆா்எஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘பொறுப்பற்ற பிஆா்எஸ்’- காங். விமா்சனம்:

காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் வழிகாட்டுதலில் பிஆா்எஸ் மற்றும் ஹரீஷ் ராவின் பொறுப்பற்ற மற்றும் சுயநலப் போக்கால், விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் 2-ஆவது தவணையை விடுவிக்க தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்தப் பணத்தைப் பெறுவது ஆண்டு முழுவதும் உழைக்கும் விவசாயிகளின் உரிமையாகும். அக்டோபா் முதல் ஜனவரி வரை எப்போது வேண்டுமானலும் இந்த நிதி விடுவிக்கப்படலாம் என்றுள்ள சூழலில், தோல்வி பயத்தால் இதுபோன்ற அவசியமற்ற அறிக்கைகளை பிஆா்எஸ் வெளியிட்டது. பிஆா்எஸ் செய்த மற்றொரு பாவத்தை தெலங்கானா விவசாயிகள் மன்னிக்க மாட்டாா்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.