இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:09 am

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திருவள்ளூர் வட்டத்தின் பெரும்பகுதி, நகராட்சியின் 27 வார்டுகள், திருவாலங்காடு ஒன்றியத்தில் 34 கிராமங்கள், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள், பூண்டி ஒன்றியத்தில் 27 கிராமங்கள், திருவள்ளூர் ஒன்றியத்தில் சேலை கிராமம் அடங்கியுள்ளன.

சிறப்புகள்: இத்தொகுதியில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை உள்ளன. சென்னை வாசிகளின் குடிநீர்த் தேவையை கணிசமாக தீர்க்கக் கூடிய பூண்டி நீர்த்தேக்கம் இத்தொகுதியில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

சமூக நிலவரம்: பட்டியலினத்தவர், வன்னியர், முதலியார், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

நீண்டகால பிரச்னைகள்: திருவள்ளூரில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி, கடம்பத்தூரில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு அமைத்தல், திருவாலங்காட்டில் சர்க்கரை ஆலை நவீனப்படுத்துதல், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து பேரம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அமைத்தல், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்ற செல்ல நடவடிக்கை எடுத்தல், மாவட்ட அளவில் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டுவரும் அரசு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அமைத்தல், பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத் தலமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.

2026 தேர்தல் களத்தில்: இத்தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் 3-ஆவது முறையாக களம் காண்கிறார். அதிமுக சார்பில் பி.வி.ரமணா 2011 தேர்தலில் வெற்றி பெற்று பத்திரப் பதிவு, துணிநூல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரானார். 2006 மற்றும் 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது 4-ஆவது முறையாக களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் கு.செந்தில்குமார், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தி.அருண்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ப.ராஜேஷ்குமார் உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வி.ஜி.ராஜேந்திரன் (திமுக): கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், திருவள்ளூர் அருகே பாண்டூரில் கல்வி நிலையங்கள் நடத்தி வருவதால் அங்கேயே வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

திருவள்ளூர் நகராட்சி பேருந்து நிலையம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறவழிச்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நவீன வசதியுடன் சுகாதார வளாகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய புதிய 20 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், திருவாலங்காடு அருகே உள்ளூர் இளைஞர்களுக்கு சிட்கோ தொழிற்பேட்டை, கூவம் ஆற்றில் தடுப்பணைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளார். இது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பி.வி.ரமணா (அதிமுக): திருவள்ளூரில் வசித்துவரும் இவர், பி.பார்ம் பட்டதாரி. தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர். கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்ததால் தொகுதி மக்களிடையே அனுதாபம் உள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது. இவர் அமைச்சராக இருந்தபோது செய்த வளர்ச்சிப் பணிகள், தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி கூட்டணிக் கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நாதக, தவெக வேட்பாளர்கள்: நாதக வேட்பாளரான கு.செந்தில்குமார், திருவள்ளூரைஅடுத்த மணவாள நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆவார். கட்சியில் தலைமை நிலையச் செயலராக உள்ளார். தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தவெக வேட்பாளர் தி.அருண்குமார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆவார். சென்னையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். வெளியூரைச் சேர்ந்தவர் என்பது திருவள்ளூர் தொகுதியில் இவருக்கு பலவீனம். கட்சித் தலைவர் விஜய்யின் செல்வாக்கை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

கடந்த 1951 முதல் 2021 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 7 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், தலா ஒரு முறை காங்கிரஸ், தமாகா வெற்றி பெற்றுள்ளன.

நடைபெறவுள்ள தேர்தலில் 14 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக-அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. தொகுதியைத் தக்கவைக்கும் முனைப்பில் திமுகவும், தட்டிப் பறிக்கும் முயற்சியில் அதிமுகவும் களமாடி வருகின்றனர்.

வாக்காளர்கள்

ஆண்கள்

1,22,198

பெண்கள்

1,28,784

மூன்றாம் பாலினத்தவர்

36

மொத்தம் - 2,51,018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.