கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இருந்து எட்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் களம் காணும் நிலையில் இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடிவேரி அணை, வயல்வெளிகள் என இயற்கைச் செழிப்போடு கோபி தொகுதி விளங்குகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, கீழ்பவானி வாய்க்கால் மூலம் தொகுதியின் பெரும்பாலான விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல், கரும்பு என பணப் பயிர்கள் விளைவதால் கோபி தொகுதி வளமான தொகுதியாகவே இருந்து வருகிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: கோபி நகராட்சி, கோபி, நம்பியூர் ஊராட்சி ஒன்றியங்கள், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் சில பகுதிகள், எலத்தூர், கொளப்பலூர், நம்பியூர், பெரியகொடிவேரி, லக்கம்பட்டி, காசிபாளையம் பேரூராட்சிப் பகுதிகள்.
சமூக நிலவரம்: கொங்கு வேளாளக் கவுண்டர், பட்டியல் வகுப்பினர் அதிகமாகவும், நாடார், முதலியார், பழங்குடியினர் மற்றும் பிற வகுப்பினர் பரவலாகவும் உள்ளனர்.
பிரச்னைகள்: கோபி அரசு மருத்துவமனை மேம்பாடு, கொடிவேரி தடுப்பணை சுற்றுலா மேம்பாடு, புதை சாக்கடைத் திட்டம், போக்குவரத்து மேம்பாடு, நெல் மற்றும் மஞ்சள் மதிப்புக்கூட்டு ஆலை உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
விவசாயத்துக்கு நீராதாரமாக இருக்கும் கூகலூர் வாய்க்கால், நகரத்துக் கழிவுநீர் கலந்து சாக்கடையாக ஓடுகிறது. இதனால் பயிர்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன. நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளும் அரசு அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து முறைகேடு செய்வதாகப் புகார் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு போன்றவையும் தீர்க்கப்படாத பிரச்னைகளாக உள்ளன.
வரலாறு படைத்த அதிமுக: அதிமுக தொடங்கிய பிறகு, இந்தத் தொகுதியில் 1977 முதல் 2021 வரை நடந்த 11 தேர்தல்களில் 10 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. இங்கு கே.ஏ.செங்கோட்டையன் எட்டு முறை வெற்றிபெற்றுள்ளார். 1957 முதல் 2021 வரை 16 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறை, சுதந்திரா கட்சி ஒரு முறை, திமுக இரண்டு முறை, அதிமுக 10 முறை வெற்றி பெற்றுள்ளது.
2026 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்: அதிமுக சார்பில் வி.பி.பிரபு, திமுக சார்பில் என்.நல்லசிவம், தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். செங்கோட்டையன் என்ற "கோட்டை'... கடந்த 46 ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் தொகுதியின் அடையாளமாக, இரட்டை இலைச் சின்னத்தின் முகமாக வலம் வந்தவர் செங்கோட்டையன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு நிலைகளிலும் செங்கோட்டையன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
கட்சி நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்லக் கூடாது என எப்போதும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுரை கூறி வந்த செங்கோட்டையனே தவெகவுக்கு மாறியபோதும், அதிமுகவில் உள்ளவர்களைத் தன் பக்கம் அவரால் பெரிய அளவில் ஈர்க்க முடியவில்லை. எளிமையான அணுகுமுறை, இரட்டை இலைச் சின்னம், அயராத உழைப்பு ஆகிய மூன்றை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு இந்தத் தொகுதியின் அடையாளமாகவே மாறிவிட்டவர் செங்கோட்டையன்.
ஒரு மாதத்துக்கு முன்பே விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பைத் தொடங்கிவிட்டார். தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம், தேர்தல் நேரத்தில் வாக்குகளை ஈர்க்கும் அனைத்து உத்திகளையும் நன்கு அறிந்தவர் என செங்கோட்டையன் என்ற கோட்டை பலமாகவே இருக்கிறது. அதை அசைப்பது எளிதானது அல்ல.
முதல் முறை திமுக வேட்பாளர்: திமுக சார்பில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் என்.நல்லசிவம் போட்டியிடுகிறார். கட்சியில் இளைஞரணி, ஒன்றியச் செயலர் எனப் படிப்படியாக மாவட்டச் செயலர் வரை வளர்ந்து வந்துள்ள இவர், பேரவைத் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார்.
செங்கோட்டையன் பிரிக்கும் அதிமுக வாங்கு வங்கி, காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கணிசமான வாக்குகளை ஒருங்கிணைப்பது, திமுகவினரை அரவணைத்துச் செல்வதன் மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது என்ற வரலாற்றை உருவாக்க முடியும்.
தொடர் வெற்றியைத் தக்கவைக்குமா அதிமுக?: அதிமுக சார்பில் புதுமுகம் வி.எஸ்.பிரபு களம் காண்கிறார். 10 முறை அதிமுக வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், செங்கோட்டையன் என்ற ஆளுமையை வீழ்த்தி மீண்டும் அதிமுகவுக்கு வெற்றிக் கனியை 11-ஆவது முறையாகப் பெற்றுக்கொடுப்பது என்பது பிரபு முன் உள்ள மிகப்பெரிய சவால்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் செல்லாமல் கட்சிதான் முக்கியம் என தொடர்ந்து அதிமுகவில் உள்ள தொண்டர்களின் உழைப்பும், இந்தத் தொகுதிக்கான அதிமுக தலைமையின் தனிப்பட்ட வியூகமும், தேர்தல் களத்தின் சூட்சுமங்களை பிரபு அறிந்துகொள்ளும் திறனிலும்தான் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு உள்ளது.
எளிமையான நாதக வேட்பாளர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி கடந்த 2021 தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட்டு 11,719 வாக்குகள் பெற்றுள்ளார். 2016 முதல் 2021 வரை சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் மொத்தம் 6 முறை போட்டியிட்டுள்ளார்.
விவசாயிகள் நிறைந்த பகுதியில் எளிமையாகப் பழகும் விதம், 2021 தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் மூலம் தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்ட வாக்குகளில் சேதத்தை ஏற்படுத்தி செங்கோட்டையனுக்கு சவாலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கோபி தொகுதியில் செங்கோட்டையன் கட்டமைத்து வைத்துள்ளது அதிமுக என்ற கட்சியின் பலமா அல்லது தனது தனிப்பட்ட ஆளுமையா என்பது வரும் மே 4-ஆம் தேதி தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடசந்தூா்: திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கும் நாதக, தவெக!

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

கோபி தொகுதியில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவில் புதுமுகம்!

தொடர்ந்து 6 முறை வெற்றி! 26 ஆண்டுகளாக எம்எல்ஏ!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

