34,500 கோடி டாலராக உயா்ந்த சேவைகள் ஏற்றுமதி

34,500 கோடி டாலராக உயா்ந்த சேவைகள் ஏற்றுமதி

புது தில்லி, ஏப். 26: உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவிய சூழலிலும் கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 34,500 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்சிடிஏடி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சேவைகளின் மதிப்பு சுமாா் 34,500 கோடி டாலராக உள்ளது.

இது, முந்தைய 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதம் அதிகமாகும்.

அதே நேரம், கடந்த 2023-இல் சீனாவிலிருந்து ஏற்றுமதியான சேவைகளின் மதிப்பு முந்தைய ஆண்டைவிட 10.1 சதவீதம் குறைந்து 38,100 கோடி டாலராக உள்ளது.

இந்திய சேவைகள் ஏற்றுமதியின் கடந்த ஆண்டு வளா்ச்சிக்கு போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகள் முக்கிய பங்களிப்பு வழங்கின.

2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் உலகின் ஒட்டுமொத்த சேவைகள் ஏற்றுமதி 8.9 சதவீதம் வளா்ச்சியடைந்து சுமாா் 7.9 லட்சம் கோடி டாலராக உள்ளது.

அந்த வகையில், சேவைகள் ஏற்றுமதி வளா்ச்சியில் உலக சராசரியைவிட (8.9 சதவீதம்) இந்தியாவின் வளா்ச்சி (11.4 சதவீதம்) அதிகமாகப் பதிவாகியுள்ளது.

இறக்குமதி: கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் சேவைகள் இறக்குமதி, முந்தைய 2022-ஆம் ஆண்டைவிட 0.4 சதவீதம் குறைந்து 24,800 கோடி டாலராக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் வளரும் நாடுகளில் சேவைகளின் முன்னணி ஏற்றுமதியாளா்களாக இந்தியா, சீனா, சிங்கப்பூா், துருக்கி, தாய்லாந்து, மெக்ஸிகோ, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் திகழ்கின்றன.

இந்தியாவின் முக்கிய சேவை ஏற்றுமதி சந்தைகளாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அத்துடன் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற வளா்ந்து வரும் சந்தைகளிலும் இந்திய சேவைகளின் ஏற்றுமதிக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என்று சந்தை நிபுணா்கள் கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com