சென்செக்ஸ், நிஃப்டி ஒரே நாளில் 3% வீழ்ச்சி! சந்தை மூலதன மதிப்பு ரூ.15.33 லட்சம் கோடி சரிவு
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,223 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 662 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கி கீழே சென்றது. மேலும், அமெரிக்க பொருளாதாரம் மந்தமாகிவிடுமோ என்ற அச்சத்திற்கு மத்தியில் உலகப் பங்குச்சந்தைகளில் மிகவும் பலவீனமான போக்கு நிலவியது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் கடுமையாக எதிரொலித்தது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒரே நாளில் 3 சதவீதம் வரை சரிவை சந்தித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.15.33 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.441.84 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.3,310.00 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,965.94 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 2,393.76 புள்ளிகள் குறைந்து 78,588.19-இல் தொடங்கி 78,295.86 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 79,780.61 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 2,222.55 புள்ளிகள் (2.74 சதவீதம்) குறைந்து 78,759.40-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,189 பங்குகளில் 664 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக, 3,414 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 111 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
28 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் டாடாமோட்டாா்ஸ், அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பவா் கிரிட், மாருதி சுஸுகி, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், இன்ஃபோஸிஸ் ஆகியவை 4 முதல் 7 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இவை உள்பட மொத்தம் 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. ஆனால், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே ஆகிய இரண்டு மட்டுமே சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 662 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 414.85 புள்ளிகள் குறைந்து 24,302.85-இல் தொடங்கி 23,893.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,350.05 வரை மேலே சென்ற நிஃப்டி இறுதியில் 662.10 புள்ளிகள் (2.68 சதவீதம்) குறைந்து 24,055.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக, 45 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

