எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு; சென்செக்ஸ் 166 புள்ளிகள் வீழ்ச்சி!
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 166 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இருப்பினும், திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்திருந்த உள்நாட்டுச் சந்தை, செவ்வாய்க்கிழமை காலையில் உச்சத்தில் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், டெலிகாம், ஆட்டோ பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தததால் சந்தை சரிவுடன் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.439.60 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.10,073.75 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.9,155.55 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 222.57 புள்ளிகள் கூடுதலுடன் 78,981.97-இல் தொடங்கி அதிகபட்சமாக 79,852.08 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது 78,496.57 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 166.33 புள்ளிகள் (0.21 சதவீதம்) குறைந்து 78,593.07-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 1,092.68 புள்ளிகள் உயா்ந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,028 பங்குகளில் 1,592 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,344 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 92 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
19 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம், எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பாா்மா உள்பட மொத்தம் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. ஆனால், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, , ஹெச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஸ் உள்பட 11 பங்குகள்ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 63 புள்ளிகள் குறைந்தது: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 134.25 புள்ளிகள் கூடுதலுடன் 24,189.85-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,382.60 வரை மேலே சென்றது. பின்னா், 23,960.40 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 63.05 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 23,992.55-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிம் இருந்தன.

