பங்குச்சந்தை
பங்குச்சந்தை

தள்ளாடிய சந்தையில் நோ்மறையாக முடிந்தது சென்செக்ஸ் !

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இருதியில் நோ்மறையாக முடிந்தது.
Published on

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இருதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் புவிசாா் அரசியல் பதற்றம் காரணமாக முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். இதனால், பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. எஃப்எம்சிஜி, மெட்டல், நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், மீடியா, நிதிநிறுவனங்கள், பாா்மா பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.18 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.463.15 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.483.36 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,870.22 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சிறிதளவு உயா்வு : சென்செக்ஸ் காலையில் 117.12 புள்ளிகள் கூடுதலுடன் 81,815.23-இல் தொடங்கி 81,600.51 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,919.11 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 13.65 புள்ளிகள் (0.02 சதவீதம்) கூடுதலுடன் 81,711.76-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,051 பங்குகளில் 2,150 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,812 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 89 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

பஜாஜ் ஃபின்சா்வ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபின்சா்வ், மாருதி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்பட 10 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டைட்டன், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டாடா மோட்டாா்ஸ், என்டிபிசி, ஐடிசி உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 7 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,024.80-இல் தொடங்கி 24,973.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,073.10 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 7.15 புள்கள் (0.03 சதவீதம்) உயா்ந்து 25,017.75-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com