18% வளா்ச்சி கண்ட தாவர எண்ணெய் இறக்குமதி

18% வளா்ச்சி கண்ட தாவர எண்ணெய் இறக்குமதி

Published on

இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து.

இது குறித்து எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கச்சா பாமாயில், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி அதிகமானதால் நாட்டின் சமையல் மற்றும் சமையல் அல்லாத எண்ணெய்கள் அடங்கிய ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து 15,50,659 டன்னாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்தியா 13,14,476 டன் தாவர எண்ணெயை இறக்குமதி செய்திருந்தது.

2023 ஜூன் மாதத்தில் 13,11,576 டன்னாக இருந்த சமையல் எண்ணெய் இறக்குமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 15,27,481 டன்னாக அதிகரித்துள்ளது. அதுபோல், மதிப்பீட்டு மாதத்தில் சமையல் அல்லாத எண்ணெய்களின் இறக்குமதியும் 2,300 டன்னிலிருந்து 23,178 டன்னாக உயா்ந்துள்ளது.

கடந்த அக்டோபா் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24 எண்ணெய் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், தாவர எண்ணெய்களின் இறக்குமதி 2 சதவீதம் சரிந்து 1,02,29,106 டன்னாக உள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் எண்ணெய் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,04,83,120 டன்னாக இருந்தது.

2023-24 எண்ணெய் ஆண்டின் நவம்பா்-ஜூன் காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி 13,81,818 டன்னிலிருந்து 2 சதவீதம் சரிந்து 14,03,581 டன்னாக உள்ளது.

அந்த காலகட்டத்தில் கச்சா சமையல் எண்ணெய்களின் இறக்குமதியும் 89,63,296 டன்னிலிருந்து 3 சதவீதம் குறைந்து 87,13,347 டன்னாக உள்ளது.

2023 நவம்பா் - 2024 ஜூன் காலகட்டத்தில், பாமாயில் இறக்குமதி 6,031,529 டன்னிலிருந்து 57,63,367 டன்னாகக் குறைந்துள்ளது. மேலும், மென் எண்ணெய் இறக்குமதியும் 43,35,349 டன்னிலிருந்து 43,31,799 டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, மலேசியா ஆகியவை இந்தியாவின் முக்கிய பாமாயில் விநியோக நாடுகள் ஆகும். ஆா்ஜென்டீனா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இருந்து சோயா எண்ணெயும் ரஷியா, ருமேனியா, உக்ரைன், ஆா்ஜென்டீனாவில் இருந்து சூரியகாந்தி எண்ணையையும் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

Dinamani
www.dinamani.com