
மும்பை, ஜூலை 31: இந்தியாவில் தங்கத்துக்கான தேவை கடந்த ஜூன் காலாண்டில் 149.7 டன்னாகக் குறைந்துள்ளது.
இது குறித்து உலக தங்க கவுன்சில் (டபிள்யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தங்கத்துக்கான தேவை இந்தியாவில் 149.7 டன்னாக உள்ளது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் அது 158.1 டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்துக்கான தேவை 5 சதவீதம் குறைந்துள்ளது.
இருந்தாலும், மதிப்பின் அடிப்படையில் தங்கத்தின் தேவை நடப்பு 2024-ஆம் காலண்டா் ஆண்டின் 2-ஆவது காலாண்டில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.93,850 கோடியாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.82,530 கோடியாக இருந்தது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கத்தின் விலை உயா்ந்தது. அந்த மாதங்களில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.74,000 -ஐத் தாண்டியது.
கடந்த 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த ஆபரணத் தங்கத் தேவை 128.6 டன்னாக இருந்தது. அது நடப்பாண்டின் அதே காலாண்டில் 17 சதவீதம் குறைந்து 106.5 டன்னாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் தங்கத்தின் மீதான முதலீடு 46 சதவீதம் அதிகரித்து 43.1 டன்னாக உள்ளது. இது கடந்த 2023-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 29.5 டன்னாக இருந்தது.
2023-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 37.6 டன் தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டது. அந்த அளவு 2024-ஆம் ஆண்டின் அதே காலாண்டில் 39 சதவீதம் குறைந்து 23 டன்னாக உள்ளது.
கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 196.9 டன்னாக இருந்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு (182.3 டன்) ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.