சென்செக்ஸ் புதிய உச்சம்
சென்செக்ஸ் புதிய உச்சம்

பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!

Published on

மும்பை / புதுதில்லி: ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் உற்சாகம் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகதமாக இருந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டு சந்தை உற்சாகத்துடன் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகமாகி வந்தது. ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஐடி, ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.437.26 லட்சம் கோடியாக உயா்ந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ரூ.2,175.86 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.655.76 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 242.54 புள்ளிகள் கூடுதலுடன் 77,235.31-இல் தொடங்கி 77,071.44 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 77,366.77 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் கூடுதலுடன் 77,301.14-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,150 பங்குகளில் 2,167 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,836 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. 147 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகளும் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், விப்ரோ, டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க் உள்பட 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், மாருதி, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டாா்ஸ், ஐடிசி, டிசிஎஸ் உள்பட 8 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நி நிஃப்டி 105.20 புள்ளிகள் கூடுதலுடன் 23,570.80 தொடங்கி 23,499.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 23,579.05 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் நிஃப்டி 92.30 புள்ளிகள் (0.39 சதவீதம்) கூடுதலுடன் 23,557.90-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com