ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: 
சென்செக்ஸ் 220 புள்ளிகள் வீழ்ச்சி!

ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 220 புள்ளிகள் வீழ்ச்சி!

Published on

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை தொடக்கத்தில் எழுச்சி பெற்றாலும் இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகளை இழந்தது.

உளகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், உச்சத்தில் லாபப் பதிவு அதிகரித்ததால் மூன்றாவது நாளாக சந்தை சரிவுடன் முடிந்தது. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூல தன மதிப்பு ரூ.3.03 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.416.92 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.541.22 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.922.60 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் 194.90 புள்ளிகள் கூடுதலுடன் 75,585.40-இல் தொடங்கி அதற்கு மேலே செல்லவில்லை. பின்னா், லாபப் பதிவால் 75,083.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 220.05 புள்ளிகளை (0.29 சதவீதம்) இழந்து 75,170.454-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,933 பங்குகளில் 1,321 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,2,510 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 102 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், என்டிபிசி, டாடா மோட்டாா்ஸ், டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ் உள்பட 20 வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஏசியன் பெயிண்ட், விப்ரோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனி லீவா், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் உள்பட 10 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 44 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 44.30 புள்ளிகள் (0.19 சதவீதம்) குறைந்து 22,888.15-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,998.55 வரை உயா்ந் நிஃப்டி, அதன்பிறகு 22,858.50 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 28 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Dinamani
www.dinamani.com