இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் உலகளாவிய போக்கைப் பின்பற்றி வரும் நிலையில், நிஃப்டி அதன் 14 நாள் வெற்றி பேரணியை இன்றுடன் முடிந்தது. இதில் ரியாலிட்டி, எஃப்எம்சிஜி மற்றும் பார்மா துறை பங்குகளை முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்ததால் நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கும் கீழே முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 202.80 புள்ளிகள் குறைந்து 82,352.64 புள்ளிகளாகவும் நிஃப்டி 81.15 புள்ளிகள் குறைந்து 25,198.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
பலவீனமான உலகளாவிய சந்தைகளின் பின்னணியில், இந்திய குறியீடுகள் சரிந்து தொடங்கிய நிலையில், பிற்பகல் அமர்வில் நிலையற்ற தன்மையால், இன்றைய இன்ட்ராடே இழப்புகள் சற்று குறைந்ததது.
ஏசியன் பெயிண்ட்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்யுஎல், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், சன் பார்மா ஆகிய பங்குகள் உயர்ந்தும் விப்ரோ, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா சரிந்து முடிந்தது.
துறை வாரியாக எஃப்எம்சிஜி, ரியாலிட்டி மற்றும் பார்மா பங்குகள் தலா 0.5 சதவிகிதமும், ஆட்டோமொபைல், வங்கி, எனர்ஜி, ஐடி மற்றும் மெட்டல் பங்குகள் 0.4 முதல் 1 சதவிகிதமும் சரிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஓரளவு சரிந்தும், ஸ்மால்கேப் குறியீடு சற்று உயர்ந்து முடிந்தது.
அல்கெம் லேபாரட்டரீஸ், பயோகான், பிஎல்எஸ் இன்டர்நேஷனல், பாம்பே பர்மா, சிசிஎல் புராடக்ட்ஸ், கோல்கேட் பாமோலிவ், எஃப்டிசி, ஹெச்பிசிஎல், ஜேஎம் பைனான்சியல், ஜூபிலண்ட் இங்ரேவியா, லூபின், மார்க்சான்ஸ் பார்மா, மேக்ஸ் பைனான்சியல், மோர்பென் லேப், என்ஐஐடி, பிரமல் பார்மா, பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கணிசமாக குறைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று ரூ.1,029.25 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.61 சதவிகிதம் குறைந்து 73.30 அமெரிக்க டாலராக உள்ளது.