மும்பை: வட்டி விகிதங்கள் குறித்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க பெடரலின் முடிவுக்கு முன்னதாக உறுதியான உலகளாவிய போக்குகளின் ஆதரவால் சென்செக்ஸ் இன்று கிட்டத்தட்ட 91 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் நிஃப்டி முதல் முறையாக 25,400 புள்ளிகள் மேல் முடிந்தது.
இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 163.63 புள்ளிகள் உயர்ந்து 83,152.41 புள்ளிகளாக இருந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 83,079.66 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.80 புள்ளிகள் உயர்ந்து 25,418.55 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டன், லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஐடிசி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
ஆட்டோ துறை பங்குகள், குறிப்பாக இரு சக்கர வாகனப் பிரிவில் உள்ள பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஹீரோ மோட்டோ கார்ப் 3.1 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ.5,962.30 ஆக உயர்ந்து அதன் 52 வார உயர்வான ரூ.5,984-ஐ எட்டியது. இதே போல் பஜாஜ் ஆட்டோ 2.07 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ.11,930.00 ஆக உயரந்து அதன் 52 வார உயர்வான ரூ.11,972.70-ஐ எட்டியது.
ஆசிய சந்தைகளில் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. டோக்கியோ சந்தை சரிந்து முடிந்தன. சீனா மற்றும் தென் கொரிய பங்குச் சந்தைகள் இன்று மூடப்பட்டிருந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தைகள் (திங்கள்கிழமை) உயர்ந்து முடிந்தது.
காய்கறிகள், உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக 1.31 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (திங்கள்கிழமை) அன்று ரூ.1,634.98 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.25 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 72.52 டாலராக உள்ளது.