
அமெரிக்காவைச் சேர்ந்த மோடோரோலா நிறுவனம், மடிக்கணினி தயாரிப்பில் களமிறங்கவுள்ளது. இந்திய சந்தைகளுக்கான மடிக்கணினியாக அவை இருக்கும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சாம்சங், ஆப்பிள், இன்ஃபினிக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், மடிக்கணினிகளையும் தயாரித்துவரும் நிலையில், இந்த வரிசையில் மோடோரோலாவும் இணையவுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோடோரோலா நிறுவனம், இந்திய மின்னணு சந்தைகளில் நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்புகளைக் கொடுத்துள்ளன.
குறிப்பாக மோடோரோலா எட்ஜ் 40, எட்ஜ் 50, மோடோரோலா ரேஸர் வரிசை ஸ்மார்ட்போன்கள் மிகுந்த பிரபலமானவை. ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் இந்திய சந்தையின் வரவேற்பைப் பெற்ற மோடோரோலா நிறுவனம், தற்போது இந்திய பயனர்களைக் கவரும் வகையில் மடிக்கணினி தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளது.
மடிக்கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள லெனோவோ நிறுவனத்தின் உதவியுடன் இந்திய சந்தையில் மோடோரோலோ மடிக்கணினிகள் அறிமுகமாகவுள்ளன.
எனினும் மடிக்கணினியின் பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த எந்தவொரு தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. விற்பனைக்காக ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து மோடோரோலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’மடிக்கணினிகளின் புதிய உலகம் விரைவில் வெளியாகும்’ எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடோரோலா நிறுவனம் புதிய மடிக்கணினிகளைத் தயாரிக்குமா? அல்லது லெனோவோ மடிக்கணினிகளின் மாதிரி வடிவமாக இருக்குமா? என பயனர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆப்பிள், ஏசஸ், லெனோவோ போன்றவை பிரீமியம் மடிக்கணினிகளை தயாரிப்பதில் கவனம் செலுத்திவருவதால், அவற்றில் ஒன்றாக மோடோரோலா இருக்குமா அல்லது தனித்து இருக்குமா என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிக்க | சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு