
மும்பை: இந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி வரையான 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் கட்டணங்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, பெஞ்ச்மார்க் ஈக்விட்டி சென்செக்ஸ் இன்று 1,310 புள்ளிகளும், நிஃப்டி 429 புள்ளிகளும் உயர்ந்து முடிந்தது.
வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,620.18 புள்ளிகள் உயர்ந்து 75,467.33 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,310.11 புள்ளிகள் உயர்ந்து 75,157.26 ஆகவும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 429.40 புள்ளிகள் உயர்ந்து 22,828.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் சுமார் 60 நாடுகள் மீது உலகளாவிய வரிகளையும், இந்தியா போன்ற நாடுகள் மீது கூடுதல் கடுமையான வரிகளையும் விதித்தார். இதனால் உலகின் இறால் முதல் எஃகு வரையான பொருட்களின் விற்பனையை பாதிக்கும் என அஞ்சப்பட்டது.
நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்காவின் பரஸ்பர கட்டணங்கள் மீதான எதிர்பாராத இடைநிறுத்தம் சற்றே நிவாரணத்தை வழங்கியுள்ளது. இதனிடையே, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பரஸ்பர வரிவிதிப்பு போர் காரணமாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் உலக சந்தைகள் பெரும்பாலும் சரிந்து முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், பவர் கிரிட், என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை சரிந்து முடிந்தது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், கோல் இந்தியா, ஜியோ பைனான்சியல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்த நிலையில் மெட்டல் குறியீடு 4 சதவிகிதம் உயர்ந்தது. அதே நேரத்தில் ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு, மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், டெலிகாம், பார்மா குறியீடு தலா 2 சதவிகிதம் வரை உயர்ந்தது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.8 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 3 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோவின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை சரிந்தும், ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தது.
டோக்கியோவின் நிக்கேய் - 225 குறியீடு சுமார் 3 சதவிகிதம் சரிந்தது முடிந்த நிலையில் ஐரோப்பிய சந்தைகள் இன்று சரிந்து முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிந்து முடிந்த நிலையில், நாஸ்டாக் காம்போசிட் 4.31 சதவிகிதமும், எஸ் அண்ட் பி 500 3.46 சதவிகிதமும், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 2.50 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.
சீன ஏற்றுமதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் 145 சதவிகித வரிகளுக்கு பதிலடியாக ஏப்ரல் 12 முதல் சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை 125 சதவிகிதமாக உயர்த்தியது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ரூ.4,358.02 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.32 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 63.53 அமெரிக்க டாலராக உள்ளது.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14, 2025 (திங்கள்கிழமை) அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.