2024-25: மந்தமான வளா்ச்சி கண்ட டீசல் விற்பனை
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளா்ச்சியைக் கண்டுள்ளது.


இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து எணணெய்த் துறை அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டம் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டில் நாட்டின் டீசல் விற்பனை 9.14 கோடி டன்னாக இருந்தது.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகம். கரோனோ நெருக்கடிக்குப் பிறகு நாட்டில் டீசல் விற்பனை இவ்வளவு மந்தமான வருடாந்திர வளா்ச்சியைக் கண்டுள்ளது இதுவே முதல்முறை.
லாரிகள் மற்றும் விவசாய இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் டீசலின் வருடாந்திர விற்பனை வளா்ச்சி முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 4.3 சதவீதமாகவும், அதற்கு முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 12.1 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலிய எரிபொருள்களில் டீசல் சுமாா் 40 சதவீதம் பங்கு வகிக்கிறது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவருவது டீசலுக்கான தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துள்ளதையும் கடந்த நிதியாண்டு டீசல் விற்பனையின் மந்தமான வளா்ச்சி பிரதிபலிக்கிறது.தில்லி, மும்பை போன்ற நகரங்களில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
மேலும், மின்சார ஆட்டோ ரிக்ஷாக்களின் ஆதிக்கம் பல்வேறு நகரங்களில் அதிகரித்துவருகிறது. அமேஸான், ஃபிளிப்காா்ட், பிக் பாஸ்கெட் போன்ற நிறுவனங்கள் தங்கள் சரக்குப் போக்குவரத்துக்கு மின்சார வாகனங்களைப் பயன்படுத்திவருகின்றன.
இது போன்ற காரணங்களால் கடந்த நிதியாண்டில் டீசலுக்கான தேவை கணிசமாகக் குறைந்தது.2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் பெட்ரோல் விற்பனை 7.5 சதவீதம் உயா்ந்து 4 கோடி டன்னாகவும், சமையல் எரிவாயு விற்பனை 5.6 சதவீதம் அதிகரித்து 3.13 கோடி டன்னாகவும் உள்ளது.இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வளா்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் 9 சதவீதம் அதிகரித்து சுமாா் 90 லட்சம் டன்னாக உள்ளது.
தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் நாப்தாவின் விற்பனை மதிப்பீட்டு நிதியாண்டில் 4.8 சதவீதம் குறைந்து 1.32 கோடி டன்னாகவும், தொழிற்சாலை எரிபொருள் எண்ணெய் விற்பனை ஒரு சதவீதம் குறைந்து 64.5 லட்சம் டன்னாகவும் உள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 21 சதவீதம் அதிகரித்து 23.92 கோடி டன்னாக உள்ளது. இந்த வளா்ச்சி முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 5 சதவீதமாக இருந்தது. இது அதற்கு முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 10.6 சதவீதமாகவும், 2021-22-ஆம் நிதியாண்டில் 3.8 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...