
மும்பை: புதிய அந்நிய நிதி வரவுகள் மத்தியில் எண்ணெய், ஆட்டோ மற்றும் வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதையடுத்து இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,000 புள்ளியைத் கடந்து நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 778.26 புள்ளிகள் உயர்ந்து 80,636.05 ஆக இருந்தது. சந்தை முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் இன்று 746.29 புள்ளிகள் உயர்ந்து 80,604.08 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 221.75 புள்ளிகள் உயர்ந்து 24,585.05 ஆக நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் சுமார் 2,136 பங்குகள் உயர்ந்தும், 1,867 பங்குகள் சரிந்தும், 161 பங்குகள் மாற்றமில்லாமலும் வர்த்தகமானது.
3 மாத சரிவுக்கு பிறகு, இன்று வெகுவான எழுச்சியைக் கண்டது இந்திய பங்குச் சந்தை. உலகளாவிய அளவில் நேர்மறையான அறிகுறி தென்பட்டதாலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் வருவாய் படிப்படியாக உயர்ந்ததால், இது முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக உயர்த்தியது.
முதலீட்டாளர்கள் இந்த வாரம் நடைபெறவிருக்கும் அமெரிக்க - ரஷ்யா உச்சிமாநாட்டை நேர்மறையாக அணுகி வருவதால், பதட்டங்களின் தீவிரத்தைத் இது மேலும் தணித்துள்ளது.
சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், எடர்னல், டிரென்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்த நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரதி ஏர்டெல் மற்றும் மாருதி ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
ஆசிய சந்தைகளில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயரந்து வர்த்தகமான நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடன் முடிந்தது. விடுமுறை காரணமாக ஜப்பானில் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 9) தேதியன்று உயர்ந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்டு 9) ரூ.1,932.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் இன்று சரிந்தன. உக்ரைன் போர் குறித்து இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்திருந்ததால், கடந்த வாரம் 4% க்கும் அதிகமான சரிவுகளை கண்டது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.45 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.29 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: டிவிஎஸ் சப்ளை செயின் லாபம் ரூ.71.16 கோடியாக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.