
மும்பை: உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான போக்குக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் இன்று உறுதியாகத் தொடங்கி, குறிப்பாக ஆட்டோ, உலோகம், மருந்து உள்ளிட்ட துறைகளில் வாங்குதல் தொடர்ந்தததால் அமர்வு முழுவதும் நேர்மறையாக வர்த்தகமானது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 448.15 புள்ளிகள் உயர்ந்து 80,683.74 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 304.32 புள்ளிகள் உயர்ந்து 80,539.91 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட என்எஸ்இ 131.95 புள்ளிகள் உயர்ந்து 24,619.35 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்தன.
நுகர்வோர் விலைக் குறியீடு எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்ததையடுத்து செலவினங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதே வேளையில் உலகளவில், சீனா மீதான வரி காலக்கெடு நீட்டிப்பு மற்றும் எண்ணெய் விலை சரிந்தததால் முதலீட்டாளர்களின் மனநிலை மேம்பட்டது. மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ள டிரம்ப்-புடின் சந்திப்பை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், எடர்னல், மஹிந்திரா & மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் அதானி போர்ட்ஸ், ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனங்கள் சரிந்து முடிந்தன.
நிஃப்டி-யில் அப்போலோ மருத்துவமனைகள், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சிப்லா ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்து முடிவடைந்தன.
ஆட்டோ, மெட்டல், பார்மா ஆகிய துறைகளின் பங்குகள் தலா 1 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தன.
உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் மூலம், சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.55 சதவிகிதமாகக் குறைந்ததாக அரசு வெளியீட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
முதல் காலாண்டின் லாபம் 79% உயர்ந்ததால் நைக்கா பங்குகள் 5% உயர்ந்தன. முதல் காலாண்டில் சிறப்பான வருவாய் ஈட்டியதால், பாரத் டைனமிக்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 6% உயர்ந்தன.
ஆன்லைன் கட்டண ஒருங்கிணைப்புக்கான துணை நிறுவனத்திற்கு ஆர்பிஐ-யின் கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்ததையடுத்து பேடிஎம் பங்குகள் 3% உயர்ந்தன.
முதல் காலாண்டில் வருவாய்க்குப் பிறகு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள் 2.5% உயர்ந்தன.
தலைமை நிதி அதிகாரி ராஜினாமாவால் சுஸ்லான் எனர்ஜி பங்குகள் 4% சரிந்தது. முதல் காலாண்டில் வருவாய்க்குப் பிறகு ஹொனாசா பங்குகள் 6% உயர்ந்தன. அதே வேளையில் முதல் காலாண்டில் லாபம் 24% உயர்ந்ததால் ஓஎன்ஜிசி பங்கு விலை 1% உயர்ந்தது. இதனையடுத்து முதல் காலாண்டில் லாபம் 15% உயர்ந்த போதிலும் என்.எஸ்.டி.எல். பங்கு விலை 6% சரிந்தது.
ரூ.3,200 கோடி மதிப்புள்ள 2 ஒப்பந்தங்களை பெற்ற பிறகு ஆண்டனி வேஸ்ட் பங்குகள் 5% உயர்ந்தன. காலாண்டு லாபம் இரட்டிப்பாக உயர்ந்ததையடுத்து பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பங்குகள் 20% உயர்ந்தன. காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 117% அதிகரித்த பிறகு லேண்ட்மார்க் கார்ஸ் பங்கு விலை 11% உயர்ந்தது.
மகாராஷ்டிர அரசிடமிருந்து ரூ.442 கோடி மதிப்புள்ள ஆர்டரை வென்றதால் ஓஸ்வால் பம்ப்ஸ் பங்குகள் 4.5% உயர்ந்தன. நடுவர் தீர்ப்புக்கு பிறகும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்குகள் 5% சரிந்தன. காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 10% உயர்ந்து முடிந்தன.
ஜேஎம் ஃபைனான்சியல், எச்பிஎல் இன்ஜினியரிங், அப்பல்லோ மருத்துவமனைகள், ஆட்டம் இன்வெஸ்ட்மென்ட், பேடிஎம், சாய் லைஃப் சயின்சஸ், டிவிஎஸ் மோட்டார், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், நுவோகோ விஸ்டாஸ், இந்தியன் வங்கி, ஸ்டார் சிமென்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன. அதே வேளையில் ஐரோப்பிய சந்தைகளும் உயர்ந்து வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கணிசமாக உயர்ந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.36 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 65.88 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.3,398.80 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இதையும் படிக்க: ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.