

மும்பை: கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பு குறைந்த அளவுடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் வர்த்தகமாகி, முடிவில் சரிவுடன் நிறவடைந்த இந்திய பங்குச் சந்தை.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 116.14 புள்ளிகள் சரிந்து 85,408.70 ஆகவும், நிஃப்டி 35.05 புள்ளிகள் சரிந்து 26,142.10 ஆக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.3% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு மாற்றமின்றி முடிவடைந்தன.
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் டிரென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி மற்றும் பவர் கிரிட் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் டிரென்ட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே சமயம் இன்டர்குளோப் ஏவியேஷன், விப்ரோ, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
ஊடகம் மற்றும் உலோகம் தவிர, மற்ற அனைத்து துறைசார் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பார்மா, பொதுத்துறை வங்கிகள் ஆகியவை தலா 0.4% சரிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவையும் உயர்ந்து முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் சற்றே உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாயக்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கைகளில், ஓஸ்வால் பம்ப்ஸ் நிறுவனம் ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரைப் கையகப்படுத்தியதால் அதன் பங்குகள் 3% உயர்ந்தன. சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் மற்றும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனங்களைப் பட்டியலிட கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்ததால் கோல் இந்தியா பங்குகள் உயர்ந்தன. பிளாக் ஒப்பந்த வர்த்தகத்தில் 3.68 கோடி பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து விஐபி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 9.5% உயர்ந்தன.
ஹிந்துஸ்தான் காப்பர், மனாப்புரம் ஃபைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், சிட்டி யூனியன் வங்கி, ஹிந்துஸ்தான் ஜிங்க், வேதாந்தா, கேன் ஃபின் ஹோம், நால்கோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், லாரஸ் லேப்ஸ், ஏஐஏ இன்ஜினியரிங், ஃபீனிக்ஸ் மில்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, வோடபோன் ஐடியா, எம்சிஎக்ஸ் இந்தியா, என்எம்டிசி, முத்தூட் ஃபைனான்ஸ், கிரானுல்ஸ் இந்தியா, பாரத் ஃபோர்ஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சத்தை எட்டியது.
சர்வதேச ப்ரென்ட் கச்சா எண்ணெய் 0.18% உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 62.49 அமெரிக்க டாலராக உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) டிசம்பர் 25ஆம் தேதியன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.