
நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.77 லட்சம் கோடி வசூலானது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 7.3 சதவீதம் அதிகமாகும்.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.77 லட்சம் கோடி. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ.1.65 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி வருவாயில் மத்திய ஜிஎஸ்டி ரூ.32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.
உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி 8.4 சதவீதம் உயா்ந்து, ரூ.1.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், இறக்குமதி மூலம் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி 4 சதவீதம் அதிகரித்து, ரூ.44,268 கோடி வசூலானது.
இந்த மாதத்தில் வரி செலுத்துவோருக்கு திருப்பியளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.22,490 கோடி. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் ரூ.1.82 லட்சம் கோடி வசூலான நிலையில், டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது. கடந்த அக்டோபரில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. இது, ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானதே இதுவரை அதிகபட்ச வருவாயாக உள்ளது.
தமிழகத்தில்...: தமிழகத்தில் டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி ரூ.10,956 கோடியாகும். கடந்த 2023, டிசம்பரில் ரூ.9,888 கோடி வசூலான நிலையில், தற்போது 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.