
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதவி புரி புச் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு செபி தலைவராக பதவியேற்ற மாதவி புரி புச் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில், அவரது மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் பிப். 28-ல் நிறைவடைகிறது.
இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்கு முறை வாரியத்தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செபி தலைவராக பதவியேற்பவரின் பதவிக் காலம் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது அவர் 65 வயதை நிறைவு செய்வது என இதில் எது முதலில் வருமோ அதுவரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செபி தலைவராக நியமிக்கப்படுபவர், மத்திய அரசின் செயலர் பதவியில் இருப்பவர்களுக்கு இணையான ஊதியம் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட மாத ஊதியமாக ரூ.5,62,500 மட்டும், வீடு, வாகனம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் வழங்கப்படுவது என ஒன்றை தெரிவு செய்துகொள்ளலாம் என பொருளாதார விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!
இந்தியாவில் பங்குச் சந்தைகளை ஒழுங்குமுறைபடுத்தும் அமைப்பாக செயல்பட்டு வரும் செபி அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் மீது ஏராளமான முறைகேட்டுப் புகார்கள் எழுந்தன.
மாதவி புரி புச், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் செபி தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி பிப். 28ஆம் தேதி நிறைவடையவிருப்பதால், 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதானி குழும நிறுவனங்களின் முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதவி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதவி புச் மறுப்பு தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.