கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்செக்ஸ், நிஃப்டி மேலே செல்ல முடியாமல் தவிப்பு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.
Published on

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இருப்பினும், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் மேலே செல்ல முடியாமல் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தது வந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், இந்தியா உள்பட 12 நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 90 நாள் வரி இடைநீக்கக் காலம் ஜூலை 9-ஆம் தேதி முடிவடைகிறது. அமெரிக்காவிற்குள் நுழையும் இந்திய பொருள்களுக்கு 26 சதவீத கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா - இந்தியா வா்த்தக ஒப்பந்தம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் உள்நாட்டுச் சந்தையில் நிலையற்ற போக்குகள் நிலவின. இதனால், உள்நாட்டுச் சந்தை குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவு ஆதரவு இருந்தது. வங்கிகள், நிதிநிறுவனங்கள், மீடியா, மெட்டல், டெலிகாம் உள்பட மற்ற துறை பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.461.14 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.760.11 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,028.84 கோடிக்கும் பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 34.81 புள்ளிகள் இழப்புடன் 83,398.08-இல் தொடங்கி அதிகபட்சமாக 83,477.86 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 83,262.23 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 9.61புள்ளிகள் (0.01) சதவீதம்) கூடுதலுடன் 83,442.50-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,261 பங்குகளில் 1,707 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,364 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 190 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

18 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் பெல், டெக்மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி, எடா்னல், இன்ஃபோஸிஸ் உள்பட 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவா், கோட்டக்பேங்க், டிரெண்ட், ரிலையன்ஸ், ஐடிசி, ஏசியன்பெயிண்ட் உள்பட 12 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

மாற்றமின்றி நிலைத்த நிஃப்டி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 0.30 புள்ளிகள் கூடுதலுடன் 25,461.30-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 22 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 28 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 82.70 புள்ளிகள் (0.15சதவீதம்) இழப்புடன் 56,949.20-இல் நிறைவடைந்தது.

Dinamani
www.dinamani.com